செவ்வாய், 24 அக்டோபர், 2017

கந்துவட்டி நெருப்பு ... நெல்லை சம்பவ முழு விபரம்!

தீக்கதிர் : நெல்லையில் பயங்கரம்
கந்துவட்டியால் கருகிய குடும்பம்
திருநெல்வேலி, அக். 23-
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக பலமுறை மனு கொடுத்தும் நியாயம் கிடைக்காததால் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த பயங்கரம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசி தர்மத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2). திங்களன்று காலை, இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்.
பொதுமக்களிடம் மனுக்கள்வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டி ருந்தார். மனுக்கள் கொடுக்க வந்தஏராளமானோரும் அங்கு நின்ற னர். திடீரென இசக்கிமுத்து பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும்2 குழந்தைகள் உடலிலும் ஊற்றி னார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இசக்கி முத்துவை தடுக்க ஓடி வந்தனர்.
ஆனால் அதற்குள் இசக்கி முத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்துக் கொண்டு அனைவரது உடலிலும் தீவைத்தார். 4 பேர் மீதும் தீப்பற்றிஎரிந்தது. அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களின் அரு கில் யாரும் செல்ல முடியவில்லை. அங்கு நின்ற போலீசார் மண்ணை அள்ளி எரிந்து தீயை அணைக்க முற்பட்டனர். சிறிது நேரத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சுருண்டு கீழே விழுந்தனர்.உடல் முழுவதும் கருகி, உயிருக்குப் போராடியநிலையில் கிடந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். கடுமையான தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் சுப்புலெட்சுமி, மகள்கள் மதி சாருண்யா, அக்சயா பரணிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து உயிருக்குப் போராடி வருகிறார்.
கந்துவட்டிக் கொடுமை
இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கந்துவட்டி கொடுமை காரணமாக அவர்கள் தீக்குளித்தது தெரியவந்தது. இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமி, காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதற்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளார். இதுவரை கடன் வாங்கிய பெண்ணிடம் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண் வட்டி மட்டும் தான் கொடுத்துள்ளதாகவும், அசல் பணத்தை கட்டவில்லை எனவும் கூறி பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து இசக்கிமுத்து அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதன் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை,
6 முறையும் அலட்சியம் செய்த ஆட்சியர்
மேலும் இது தொடர்பாக இசக்கிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை மனு கொடுத்துள்ளார். ஆனால் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்த இசக்கிமுத்து திங்களன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வளாகத்திலேயே தீக்குளித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி,தமிழக மக்களை உலுக்கியுள்ளது.
தாய், 2 குழந்தைகள் சாவு
‘‘ரூ. 1லட்சத்து 45 ஆயிரம் கடனுக்கு வட்டியோடு ரூ.2லட்சத்து 34 ஆயிரம் 8 மாதத்தில் செலுத்தியும், கடன்கொடுத்த முத்துலட்சுமி தொடர்ந்து மிரட்டியதை, இசக்கிமுத்து குடும்பம் ஆறு முறை புகார் அளித்தும் அச்சன்புதூர் காவல்நிலையமும் ஆட்சியரகமும் அலட்சியப்படுத்தியதன் விளைவே இந்தக் கொடூர மரணங்கள். காவல்துறை கந்துவட்டிக் கும்பல்களுடன் நெருக்கமாக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட்டில் நெல்லை டவுனில் கந்துவட்டிக் கொடுமைக்கு கோமதி என்ற பெண் பலியானார். 2 ஆண்டுக்கு முன்பு பாளையங்கோட்டையில் ஒரு குடும்பமே தற்கொலை செய்தது. எங்கே போனது கந்து வட்டித் தடுப்புச் சட்டம்?
கே.ஜி.பாஸ்கரன், சிபிஐ(எம்), மாவட்டச் செயலாளர்

கருத்துகள் இல்லை: