சனி, 28 அக்டோபர், 2017

மதுரை ஆதீன மடதிற்குள் நுழைய நித்யானந்தா மனு!

ஆதீன மடம்: நித்யானந்தா மனு!
மின்னம்பலம : மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைவதற்கு விதித்த தடையை ரத்து செய்யக் கோரி நித்யானந்தா தரப்பிலிருந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக நித்யானந்தா 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததை ரத்து செய்தார் மதுரை ஆதீனம். நித்யானந்தா மடத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த பிரச்னை தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆதீன மடத்துக்குள் சென்று பூஜை செய்ய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நித்யானந்தா வழக்கு தொடுத்திருந்தார்.

ஆனால், ஜெகதலபிரதாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்குத் தடை விதித்தும், ஆதீன நிர்வாகத்தில் தலையிட நித்யானந்தா மற்றும் அவரின் சீடர்களுக்குத் தடை விதித்தும் கடந்த 11ஆம்தி தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு முதல்வரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், “நித்யானந்தாவுக்கு பெங்களூரில் பிடதி ஆசிரமம் உள்ளது. அப்படியிருக்கும்போது தமிழகத்திலும் அவருக்கு ஒரு மடத்தை பிடித்துக்கொண்டு மடாதிபதியாக இருக்க நினைப்பது தவறு. இது தேவையில்லாத ஒன்று என்பதே எங்கள் கருத்து” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாகக் கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி முறைப்படி நியமனம் செய்யப்பட்டேன். என்னைப் பதவி நீக்கம் செய்ய மடத்தின் தலைவர் உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதனால் எனது நியமனம் ரத்து செய்யப்பட்டது செல்லாது. எனவே, ஆதீனம் மடத்துக்குள் நுழைய எனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: