வியாழன், 26 அக்டோபர், 2017

தேவர் பிறந்த நாள் விழா ...உட்கட்சி பூசலால் தாமதமாகும் தங்கக்கவசம்!


உட்கட்சி பூசலால் தாமதமாகும் தங்கக்கவசம்!மின்னம்பலம் : பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்காக ஜெயலலிதா வழங்கிய தங்க கவசத்தை, உட்கட்சி பூசல் காரணமாக வங்கியிலிருந்து எடுத்துவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை தேவர் ஜெயந்தி விழா நடைபெறும். கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 13.5 கிலோ எடையில் ரூ. 4.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை முத்துராமலிங்கத்தின் திருவுருவ சிலைக்கு வழங்கினார்.
அதன்பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தியின் போது சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். ஜெயந்தி முடிந்ததும் மதுரையில் உள்ள பேங்க், ஆப் இந்தியா வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்படும். நினைவிட அறங்காவலர் மற்றும் அதிமுகவின் பொருளாளர் ஆகியோர் வங்கி பெட்டகத்தை கையாளும் வகையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து நினைவிட அறங்காவலர்களிடம் ஒப்படைத்து வந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்ததையடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையிலிருந்து வருகிறது.
இதனால், யார் உண்மையான அதிமுக என்பது தொடர்பாக வங்கி விளக்கம் கேட்டுள்ளது. இதற்குப் பதில் கிடைத்த பின்பு, தங்கக் கவசம் ஒப்படைக்கப்படும் என வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 27ம் தேதி வங்கியிலிருந்து தங்க கவசம் பெறப்படும் என ஓபிஎஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: