சனி, 28 அக்டோபர், 2017

ஜவாஹிருல்லா : கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்

மாலைமலர் : திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமைக்கு 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்: ஜவாஹிருல்லா ராமநாதபுரம்: மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹி ருல்லா ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமைக்கு 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. கந்து வட்டியை தடுக்க மத்திய,மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும், குறிப்பாக வட்டியில்லா வங்கிக்கடன் திட்டம் கொண்டு வர வேண்டும்.

 உயிருடன் இருப்பவர்களின் படங்களை கட்அவுட்டில் வைக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசின் பணமதிப்பு இழப்பைக் கண்டிக்கும் வகையில் நடைபெறும் கருப்பு தின போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியும் பங்கேற்கும். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.வரி விதிப்பு ஆகியவற்றால் சிறு தொழில் நிறுவனங்கள்,பெருவணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக இந்தியப் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. டெங்கு பாதிப்பில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது. அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களிடம் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது.

அமைச்சர் மணிகண்டன் தனது எம்.எல்.ஏ.நிதியிலிருந்து பாம்பன் சின்னப்பாலம் கடற்கரை கிராமத்தில் கடல் அலையை தடுக்க தடுப்புச்சுவர் ரூ.43.30லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த தடுப்புச்சுவர் தரமற்றதாக கட்டப்பட்டிருப்பதால் அவை மணல் சுவராக மாறியிருக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடைத்திட்டம் 7 முறை டெண்டர் விடப்பட்டும் அதை அமல்படுத்தவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கிழக்கு மாவட்ட தலைவர் அன்வர் அலி, செயலாளர் ஜஹாங்கீர்,அமைப்புச் செயலாளர் கவுஸ் பாட்சா, மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்

கருத்துகள் இல்லை: