சனி, 28 அக்டோபர், 2017

எழுத்தாளர் எஸ்.லட்சுமணன் மரணம்! மஞ்சரி இதழின் முன்னாள் ஆசிரியர் ,,,

எழுத்தாளர் எஸ்.லட்சுமணன் மரணம்!மின்னம்பலம் :  பிரபல 'மஞ்சரி' இதழின் முன்னாள் ஆசிரியரும் எழுத்தாளருமான எஸ்.லட்சுமணன் நேற்றிரவு (அக்டோபர் 27) மரணமடைந்தார்.
மஞ்சரி என்ற இதழ் 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன் உரிமையாளர் என்.ராமரத்னம், தமிழ் வாசகர்களுக்கு உலக அனுபவமும் உலகச் செய்திகளையும் உலக இலக்கியங்களையும் தெரிந்துகொள்ள வைக்கும் வகையில் ஒரு இதழைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த இதழைத் தொடங்கினார். பல நாடுகளில் பல மொழிகளில் வெளியாகும் பத்திரிகைகளிலிருந்து சிறந்த செய்திகள் கலை இலக்கியப் படைப்புகள், மனித நேய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைச் சுவை குன்றாமல் சுருக்கித் தருதல். இந்தியாவின் கலை, இலக்கியம், வரலாறு, சமூகம், மருத்துவம், உளவியல், அறிவியல், பொருளாதாரம் போன்ற துறைகள் சார்ந்து பலதரப்பட்ட கட்டுரைகளை மஞ்சரி வெளியிட்டுவருகிறது.

சேலத்தைச் சேர்ந்த எஸ்.லட்சுமணன் (எ) லெமன், இளம் வயதிலேயே எழுத்துத் துறைக்கு ஆர்வத்துடன் வந்தவர். மரபுக் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறுவர் இதழான 'கண்ண’னில் சிறுவர் இலக்கியங்களை எழுதியவர். அவரது கவிதையாற்றலைக் கண்டு பிரபல எழுத்தாளர் கி.வா. ஜகந்நாதன் மஞ்சரி இதழில் அவரைத் துணையாசிரியராகச் சேர்த்துக்கொண்டார் . மஞ்சரியின் அப்போதைய ஆசிரியர் த.நா. சேனாபதியின் மறைவுக்குப் பின் அதன் ஆசிரியராக லட்சுமணன் பொறுப்பேற்றார்.
இவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சரி இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மஞ்சரியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னரும் கல்கி, அமுதசுரபி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் கவிதைகளை எழுதிவந்தார்.
இவரது `மழைக் கிளிகள்` என்ற சிறுவர் கதைப் புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் இவர் மரணமடைந்துள்ளார். இவரது மனைவி ஆசிரியையாகப் பணியாற்றியவர். இவருக்கு துர்கா என்ற ஒரே ஒரு மகள் உண்டு. மனைவி இறந்த பின் சென்னையில் சகோதரர்களுடன் ஒரே வீட்டில் அவர் வசித்துவந்தார்.

கருத்துகள் இல்லை: