செவ்வாய், 24 அக்டோபர், 2017

தமிழகம் - பிணம் தின்னும் அதிகாரிகள் + அரசியல்வாதிகளின் பேயாட்சி !

நந்தன் ஸ்ரீதரன் : நெல்லை கந்துவட்டிக் கும்பலின் கொடூரத்தால் எரிந்த குடும்பத்தின் மரணமே இனி என்னை கனவிலும் துரத்தும் என்று தோன்றுகிறது.. முத்துகுமார் தீக்குளிப்பு மரணத்துக்குப் பின் என்னை haunt செய்வது இந்த படங்களே..
பேயாட்சி செய்தால் என்பதற்கு தற்போதைய தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையே மிகப் பெரிய உதாரணம்..
கந்து வட்டியின் கொடுமைகளை நேரடியாகவே வாழ்வில் கண்டு உணர்ந்தவன் நான்.. இந்த மரணம் வெளியில் பேசுபொருளாகிவிட்டது. இது தவிர்த்த எத்தனையோ கந்து வட்டி மரணங்கள் இருக்கின்றன.. நான்கு பேர் இல்லை.. ஏழு பேர் கொண்ட குடும்பம் கந்து வட்டிக்காரர்களின் சுடு சொல் தாங்க முடியாமல் செத்த உதாரணங்கள் எல்லாம் எங்க ஏரியாவில் எக்கச்சக்கம். கசீ அவனது வாழ்வனுபவத்தில் எழுதி இருப்பான். வட்டி வசூலிக்க சென்ற இடத்தில் ஒரு வயதான பெண்மணி இருப்பாள். பணம் இல்லப்பா.. இதோ இந்த பெண்ணை வேண்டுமானால் நீ அனுபவித்துக் கொள் என்று தன் மருமகளை அவன் பக்கம் அனுப்புவாள். கசீ அருவெறுத்து வாழ்வு வெறுத்து அந்த தொழிலில் இருந்து வெளியேறுவான்.

அப்படித்தான் இருக்கிறது கந்து வட்டிக் கொடுமை.. கந்து வட்டிக்காரர்களின் வசவுகளை காதார கேட்டவன் நான்.. எவ்வளவு தூரம் நம்மை அவர்களால் அசிங்கப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவர்கள் அசிங்கப் படுத்துவார்கள். இத்தனை கேவலத்துக்கு சாவே மேல் என்று நமக்குத் தோன்ற வைத்துவிடுவார்கள்..
அப்படி செத்துப் போனாலும் கந்து வட்டிக்காரர்களுக்கு லாபம்தான். தங்கள் மீது அப்போதுதான் மற்ற பார்ட்டிகளுக்கு பயம் வரும் என்று நினைப்பார்கள்.
கந்து வட்டியின் பின்னணியில் சாதியம் உண்டு. கந்து வட்டியின் பின்னணியில் காவல்துறை உண்டு.. கந்து வட்டியின் பின்னணியில் செத்துப் போன மனிதர்களின் மனங்கள் வடித்த ரத்தமும் உண்டுதான்..
ஜெயலலிதா ஒரு முறை கந்து வட்டிக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். கந்து வட்டிக்கு எதிரான கடும் சட்டங்கள் வந்தன.. அந்த முறைதான் நாட்டில் எளிய மக்கள் சற்று நிம்மதியாக இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
எப்போது அதே கந்து வட்டிக் கும்பல் அவரைச் சுற்றி நின்றார்களோ அப்போதே அந்த சட்டம் காலாவதி ஆகி விட்டது..
நெல்லை தற்கொலைகள் உங்கள் மனசாட்சியை உலுக்கி இருக்கின்றன.. அதற்குக் காரணம் அந்தப் படங்கள். அந்தப் படங்களை எடுத்த பத்திரிக்கையாளரை வசை பாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.. அந்தப் படங்கள் வந்திருக்கவில்லை என்றால் பத்தோடு பதினொன்றாக இந்த மரணங்கள் யாருடைய கவனத்துக்கும் வராமல் தினத்தந்தியில் ஏழாவது பக்கத்தில் ஒரு செய்தியாக கடந்திருக்கும்.. உங்கள் மனசாட்சியை உலுக்கியவை அந்தப் படங்களே..
அவர் படம் எடுக்காமல் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாமே என்பீர்கள். அந்தப் படம் எடுக்கும தருணத்திலேயே அந்த குடும்பம் முக்கால் வாசி எரிந்து விட்டது. அருகில் தண்ணீர் இருந்ததா என்று தெரியவில்லை. அந்த தருணத்தில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சேர்த்துதான் நாம் யோசிக்க வேண்டும்..
அந்தப் படங்களை பகிர வேண்டாம் என்றே என் நண்பர்கள் சொல்கிறார்கள். நம் மனசாட்சி விழிக்க வேண்டும் என்றால் அந்தப் படங்களை பகிர்ந்துதான் ஆக வேண்டும். கந்து வட்டி இவ்வளவு கொடூரமான கொலைகளை செய்யும். அதற்கு காவல்துறையும் உதவி செய்யும் என்பதற்கான சாட்சிகள்தான் அந்தப் படங்கள்..
அரசு, காவல்துறை, அனைவரும் இந்த மரணங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்..
அய்லானின் மரணப் படத்துக்குப் பின் நம் மனதை இந்தப் படங்களே உலுக்க வேண்டும். உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப் படும்வரை நாம் குரல் கொடுப்போம்..

கருத்துகள் இல்லை: