வியாழன், 1 டிசம்பர், 2016

மம்தா பானர்ஜியின் உயிருக்கு அச்சுறுத்தல் ..எரிபொருள் தீரும் நிலையில் விமானம் தரை இறங்க அனுமதி தாமதம்


நேற்று விமான விபத்தொன்றில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
நேற்று, இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த 6E 0342 என்ற எண்கொண்ட விமானம் பாட்னாவிலிருந்து கொல்கத்தாவுக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் திரிணாமூல் காங்கிரஸின் சட்ட வல்லுநர் முகுல் ராயையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது எரிபொருள் குறைபாட்டோடு கொல்கத்தா விமான நிலையத்தின்மேல் அரை மணி நேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்பு, இரவு 8.45 மணிக்கு விமானம் தரையிறங்கும்போது, தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் நின்றுகொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முகுல் ராய் கூறியதாவது: ‘எரிபொருள் குறைபாட்டால் விமானம் அரை மணி நேரம் ஆகாயத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.
தரையிறங்கும்போது, சுற்றி ஆம்புலன்ஸ்களும் தீயணைப்பு வாகனங்களும் இருந்ததைப் பார்ப்பது கவலைக்குரியதாக இருந்தது. விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாக எனக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆனால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் குழு, எரிபொருள் குறைவாக இருந்ததாக விமானி தெரிவித்த நிகழ்வையே முற்றிலுமாக மறுக்கிறது. எனவே, பாரளுமன்ற சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்துக் கமிட்டியின் தலைவர், இதுகுறித்து விசாரண நடத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளையும் உள்நாட்டு விமானத்துறை அமைச்சரையும் கேட்பேன்.

இரவு 8:15 மணியளவில் விமானி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் குழுவினரிடம், எரிபொருள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டார் என எனக்குச் சொல்லப்பட்டது. இருப்பினும் விமானம் மாலை 8:45 மணிக்கு தரையிறங்கியது. மேற்குவங்கத்தின் முதலமைச்சர் இருக்கும் விமானம், எரிபொருள் குறைவாக இருக்கும்போது வானில் பறந்துகொண்டிருந்தது. பிரதம மந்திரிக்கு அடுத்தநிலையில்தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இருக்கிறார். முதலமைச்சர் ஒருவர் இருக்கும் விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று, விமானத்தை விட்டு இறங்கியதும் பேட்டியளித்தார் முகுல்ராய்.
திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த சுதிப் பந்த்யோபாத்யாய், ‘இப்போது நடந்திருக்கும் விமான எரிபொருள் தொடர்பான விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக’ தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம்,“பாட்னாவில் இருந்து கொல்கத்தாவுக்கு 174 பயணிகளுடன் நேற்று வந்த இண்டிகோ நிறுவனத்தின் விமானம் 6ஈ 342 கொல்கத்தா விமான நிலையத்தில் வழக்கமான முறையில் தரையிறங்கியது. விமானத்தின் கேப்டன் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு போதும் தெரிவிக்கவில்லை. விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிக்கும் பைலட்டுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் சில புரிதல்கள் மட்டுமே தவறுதலாக அமைந்துவிட்டது. கொல்கத்தாவில் ஏர் டிராபிக் இருந்ததால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விமானம் மாற்றுப்பாதையில் வட்டமிடுவதற்கு முன்னரே தன்னிடம் கூடுதலாக 8 நிமிடத்திற்கான எரிபொருள் இருப்பதாக விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.ஆனால், எட்டு நிமிடம் பறப்பதற்கு மட்டுமே விமானத்தில் எரிபொருள் இருப்பதாக விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரி தவறுதலாக புரிந்து கொண்டார். இதன் காரணமாகவே, தீ அணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. எந்த நிலையிலும் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகவும் அவசரமாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இண்டிகோ கேப்டன் அறிவிக்கவில்லை. ஏர் டிராபிக் காரணமாக ஒரு மணி நேரம் தாமதாக விமானம் 8.40 மணியளவில் வழக்கமான முறையில் தரையிறங்கியது. மேற்கூறப்பட்ட சூழலில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள், ‘விமானம் கொல்கத்தா விமான நிலையத்தை வந்தடைந்தபோது, மோசமான வானிலை காரணமாக மேலே சுற்றிக்கொண்டிருந்தது. அதற்குப் பிறகுதான் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக விமானி தெரிவித்தார். தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ்களும் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது, வழக்கமான நடைமுறை தான்’ எனத் தெரிவித்தனர்.
ஆனால் இந்த விவகாரத்தை இன்று மக்களவையில் எழுப்பிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், ‘இது மம்தாவுக்கு எதிராக தீட்டப்பட்ட சதி’ என, ராஜ்ய சபாவில் கூறினார். இதே குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் பிரச்னையைக் கிளப்ப, இந்த விவகாரம் குறித்து மத்திய விமானத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, ‘விமானத்துக்குத் தேவையான எரிபொருள் நிரப்பப்படாததை விசாரிக்க உத்தரவிட்டுள்தாக’ தெரிவித்தார். இந்த பதிலில் சமாதானம் அடையாத உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்க தாமதம் செய்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து ஏற்பட்ட அமளியால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மம்தா பானர்ஜி தொடர்ந்து டெல்லி, லக்னோ, பாட்னா என பயணித்து போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் இந்தச் சம்பவம் மிகுந்த உண்மைத்தன்மையுடன் கையாளப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்,காம்
புதுடெல்லி: மேற்குவங்க முதலைமச்சர் மம்தா பானர்ஜி விமானம் தரையிறங்க அனுமதிக்காத விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை கிளப்பியது. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை மக்களவையில் எழுப்பினர். பாட்னாவில் இருந்து கொல்கத்தா வந்த விமானம் எரிபொருள் இல்லாத நிலையில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜு ஒரே நேரத்தில் 3 விமானங்கள் இறங்குவதற்காக வட்டமிட்டதால் தாமதம் ஏற்பட்தாக கூறினார். இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்த விளக்கத்தை ஏற்காமல் எதிர்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை நண்பகல் வரையில் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது ரூபாய் நோட்டு  பிரச்சினை எதிரொலித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல் மாநிலங்களவையிலும் மம்தா பிரச்சினை எதிரொலித்தது.


திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்க தாமதம் செய்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து ஏற்பட்ட அமளியால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போது ஐடி மசோதாவை பண மசோதாவாக மத்திய அரசு நிறைவேற்றியது பற்றி காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  தினகரன்,காம்

கருத்துகள் இல்லை: