புதன், 30 நவம்பர், 2016

தற்போது பேருந்திலோ, ரயிலிலோ யார், எந்த குலம்? என்று பார்ப்பதில்லை.இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி ,ஸ்டாலின் !


திமுக-வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் ஒளிவுமறைவின்றி, வெளிப்படையாக அரியணை ஏறுவார் என்று, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.
திமுக இளைஞரணி சார்பில் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமையேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘அன்றைய காலகட்டத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நிபந்தனையை தகர்த்து, எல்லோரும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பனகல் அரசர். தற்போது பேருந்திலோ, ரயிலிலோ பயணிக்கும்போது யார், எந்த குலம்? என்று நாம் பார்ப்பதில்லை. இதுதான் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் வெற்றி. 1937ஆம் ஆண்டு வரை நீடித்த நீதிக்கட்சி ஆட்சியில், சமூக நீதி சார்ந்த திட்டங்கள்மூலமாக கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் நம்முடைய உரிமைகள் மீட்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு, 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் 69 சதவிகித இடஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு ஆகியவை அளிக்கப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதை மனதில்வைத்து பெரியார் கண்ட கனவை நினைவேற்றும்வகையில், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை கருணாநிதி கொண்டுவந்தார்.
இதேபோல, இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை நீதிக்கட்சி கொண்டுவந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை திமுக கொண்டு வந்தது. அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை நசுக்கிவிடலாம் என்று முயற்சி செய்துகொண்டுள்ளனர். இதுவரை அது பலித்ததில்லை. இனிமேலும் பலிக்கப்போவது இல்லை. எத்தனை அம்புகள் பாய்ந்தாலும், திராவிட இயக்கத்தை யாராலும் தொட்டுப்பார்க்க முடியாது.’ இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது, ‘ரிலே ஓட்டத்தில் இடையில் குச்சியை பிடுங்கிச் செல்வதைப்போல் இல்லாமல், திமுக-வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக அரியணை ஏறுவார்’ என்றார். minnambalam.com

கருத்துகள் இல்லை: