minnambalam .com ;ரூபாய் ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் இனி செல்லாது என்ற செய்தி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் ஸ்கூட்டியை சர்வீஸுக்கு விட்டிருந்தேன். ஆயிலே இல்லாமல் ஓட்டி எஞ்சினை ஒரு வழி பண்ணி வைத்திருந்ததாலும் மேலும் பல பட்டி, டிங்கரிங் வேலைகள் அதில் இருப்பதாலும் கணிசமான தொகையை பில்லாகத் தீட்டியிருந்தார் மெக்கானிக்.
அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை தவணை முறையில் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஆயிரம் ரூபாய் பாக்கி. வண்டி இன்னும் கைக்கு வரவில்லை.! அக்கா ஊரிலிருந்து சென்னை திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் இருந்தேன். வழியனுப்ப வந்த அங்கிளுக்கு (திரு.மாதவராஜ்) வந்த தொலைபேசி அழைப்பின் மூலமே முதலில் இந்தச் செய்தியை அறிந்தேன். நம்பவே முடியவில்லை.
‘கருப்புப் பணம் இதனால் ஒழிந்துவிடுமா?’என்று அவரிடம் கேட்டபோது, ‘போகப் போகத்தான் தெரியும். ஆனால், இது மிகவும் தடாலடியான முடிவு’என்று சொன்னார்.
போனில் என் இனிய பாரதியிடம் சொன்னபோது வழக்கம்போல் “என்ன லூஸ் மாதிரி பேசற?” என்றார். (அவர் ஒரு தீர்க்கதரிசி.) தொடர்ந்த பிணக்கில் போனை சைலண்டில் போட்டுவிட்டு தூங்கிவிட்டேன். அதன் பயனாக அவரிடமிருந்து வந்த சில அன்புச் செய்திகளும் தவறவிட்ட அழைப்புகளையும் வேண்டுமானால் நற்பயன்கள் பட்டியலில் சேர்க்கலாம்.
*
முதல் பத்து நாட்களுக்கு நேரடியாக பாதிப்பை உணரவில்லை. தூங்கி வழிந்துகொண்டிருந்த வாட்ஸ் அப் குழுக்களில் எல்லாம் தேசபக்தியும் பொருளாதாரப் பொறுப்புணர்ச்சியும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கின. நிதானமான கேள்விகளுக்கோ, சந்தேகங்களுக்கோ இடமேயில்லாத சூழல் தீவிரமாக உருவானது. மோடி ஆதரவாளர்கள் அல்லாதவர்கள்கூட “இதுவரைக்கும் யாரும் எதுவும் பண்ணல. இவர்தான் தைரியமா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கார்”என்ற ரீதியில் கொண்டாடத் தொடங்கினர். மோடி பக்தர்களோ அலகு குத்தி ஆடாத குறை!
‘ஆஹா.. இது, உண்மையில் நல்ல விஷயம்தானோ என்றும், அப்படி இருந்தால் நல்லதுதானே’என்றும் தோன்றியது. தெளிவாக ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.
கண்டிப்பாக மாற்று வழிகள் செய்யாமல் இப்படி ஒரு திடீர் முடிவு எடுக்க மாட்டார்கள். சில நாட்களுக்குச் சிரமம் இருக்கும், பின்பு சரியாகிவிடும் என்று நம்பப்பட்டது.
ஆனால், பிளாஸ்டிக் அட்டைகளை அதிகம் பயன்படுத்தினாலும் சில்லறை காசுகள் எவ்வளவு தூரம் நம் வாழ்க்கையில் இன்றியமையாததாகி இருக்கிறது. ‘கேஷ்லெஸ் இந்தியா’என்று முழங்கிக் கொண்டிருப்பவர்களெல்லாம் உண்மையில், வீட்டு நிர்வாகமாவது எப்படி நடக்கிறதென்று அறிவார்களா என்று தெரியவில்லை.
உறவுக்காரப் பெண்கள் உட்பட பலரும் கணவன்மார்களுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த பணத்தை மாற்றித் தர முடியுமா? என்று கேட்டனர். பர்சில் தேமே என்றிருந்த மூன்று ஐநூறு நோட்டுகள் தவிர, என்னிடம் சல்லிக்காசு இல்லாமல் குழந்தைகளின் உண்டியலைச் சற்றே குற்றவுணர்ச்சியுடன் நான் கண்வைத்துக் கொண்டிருந்ததை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. ஆனால், என்னை முந்திக்கொண்ட என் மகள், அம்மா வீட்டில் சமைப்பவரின் தேவையறிந்து உண்டியலை உடைத்துக் கொடுத்திருக்கிறாள். நெகிழ்ந்து போய் அவர், இதை என்னிடம் தெரிவித்தபோது ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தது உண்மை!
டெபிட் அட்டைகளிலேயே பெரிதும் காலம்தள்ள பழகிவிட்டதால் சமையல் செலவுகளுக்கு சில்லறைக் காசு தேவைப்படவில்லை. ஆனாலும், எதற்கும் இருக்கட்டும் என்று ஜோ (துணைவர்) ஏடிஎம்மில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டுப் போன நூறு ரூபாய் நோட்டுகளை வாழ்வில் முதன்முறையாக சிறுவாடு சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
*
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு
நான்கு நாட்களுக்கு முன்புதான், அந்தக் காகிதத்தை கையில் வாங்கினேன். ஸ்கூட்டி சர்வீஸ் ஆள் வருவார். அவரிடம் அட்வான்ஸாக கொடுக்கும்படி இரண்டு இரண்டாயிரம் நோட்டுகளை கொடுத்துவிட்டுச் சென்றார்.
அயல்நாடொன்றில் இருக்கும் இனிய தோழியொருவருக்குப் பிறந்த நாள் பரிசாக கைப்படக் கடிதமும் சிறிய பரிசுப் பொருளுமாக அஞ்சலொன்று அனுப்ப வேண்டியிருந்தது. ஒரு மாதத்துக்கு முன்பென்றால் இது ஒரு விஷயமாகவே இருந்திருக்காது. கொரியர் சர்வீஸில் கார்டு தேய்க்க மாட்டேனென்று விட்டார்கள். அந்த அஞ்சல் அனுப்ப வேண்டி, எப்போதும் இல்லாத திருட்டுத்தனத்துடன் அதில் ஒரு இரண்டாயிரத்தை பதுக்கி வைத்தேன்!
என் நேரம், பள்ளி வேன் டிரைவர் பதினைந்தாம் தேதி வாக்கில்தான் சம்பளம் வாங்குவார் என்பதை மறந்தே போனேன். ஏற்கனவே, பல நாட்கள் தாமதமாகிவிட்டிருந்த நிலையில் அவர் கேட்டபோது மறுக்காமல் அதை தர வேண்டியதானது!
என்னுடையது சிட்டி பாங்க் அட்டை. நல்ல நாளிலேயே ஊரில் பாதி ஏடிஎம்களில் செல்லாமல் காறித் துப்பும். நவம்பர் எட்டு முதல், ஒரு ஏழு, எட்டு ஏடிஎம்களிலும் எதற்கும் இருக்கட்டும் என்று பயன்படுத்திப் பார்த்து விட்டேன். செல்லாது என்றே காண்பிக்கிறது. அதனால் இதுவரை எந்த வரிசையிலும் நிற்கவில்லை.
கரண்ட் பில் கட்ட வேண்டும் என்று முன்னூறு ரூபாய் கேட்டார் வேலை பார்க்கும் அக்கா. கையைப் பிசைந்த நான், ஏதாவது பொருள் வேண்டுமென்றால்கூட அட்டையைப் பயன்படுத்தி வாங்கித் தருகிறேன். சில்லறை கேட்டு தர்மசங்கடப்படுத்தாதே என்றேன்.
“வீட்ல எங்கியாச்சும் பரண்ல பழைய நோட்டு வெச்சு இருந்தாக்கூட குடேன்” என்று நச்சரிக்கத் தொடங்கினார். பாவம், எப்போதும் அப்படியெல்லாம் பேசக்கூடியவர் இல்லை.
“தாயே! தாராளமாக பரண் ஒன்றுவிடாமல் தேடிப் பார்த்து இருந்தால் எடுத்துக்கொண்டு போ அம்மா. எப்படியும் ஒட்டடை அடித்து நாளாகிறது. வா வா”என்றேன்.
மூன்று நாட்களாக வேலைக்கு வரவில்லை!
*
இதோ ஒன்றாம் தேதி வந்து விட்டது. பால்காரர், நாளிதழ் போடுபவர், வீட்டு வேலைக்கு வருபவர், அம்மா வீட்டில் சமைப்பவர் எல்லாரும் தேசத்துரோகிகள். ஒருவரிடமும் வங்கிக்கணக்கும் இல்லை. அட்டை தேய்க்கும் மிஷினும் இல்லை. பேசாமல் அந்த ‘எல்லையில் ராணுவத்தினர்...’வசனத்தை மனப்பாடம் செய்ய ஆரம்பிக்கலாமென்று இருக்கிறேன்.
*
1. முகநூலில் உண்மையில் சமூக அக்கறையுடன் எழுதுபவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே அரசியல் சார்பு வேறுபாடின்றி இத்திட்டத்தின் சீர்கேடுகளைப் பற்றி புட்டுப்புட்டு வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
2. அறிவிப்பு வந்த ஒருசில நாட்களிலேயே பரவலாக வெளிவந்த பேடிஎம் விளம்பரங்கள் முதல் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகள் நிச்சலனமாக இருப்பது வரை பல சந்தேகங்கள் பூதாகாரமாக வெளிச்சத்துக்கு வந்தன. முத்தாய்ப்பு வைப்பதுபோல் வந்தது ஸ்டேட் வங்கி மல்லையா உட்பட பல்வேறு பெரு நிறுவனங்களின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்த அறிவிப்பு.
3. முதலில் ஆதரவு தெரிவித்து பின், பின்வாங்கிய பில்கேட்ஸ் முதல் உலகெங்கிலும் பொருளாதார நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
4. மின்னம்பலத்தில் ஜெயரஞ்சன் எழுதிய இக்கட்டுரை பரவலாக அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
5. ’குப்புறக் கிடந்தாலும் மீசையில மண் ஒட்டல’ ரேஞ்சுக்கு பக்தர்களின் பிதற்றல்களும் இன்னொரு பக்கம் பிரவாகமெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
காய்ச்சல் வந்த குழந்தையை வைத்துக் கொண்டு மருத்துவக் கட்டணத்துக்காக வங்கியில் நின்ற தந்தை, தன் குழந்தை உயிரைப் பறி கொடுத்ததும், தேர்வுக்கட்டணம் கட்ட பலமுறை வங்கிக்கு அலைந்தும் பணமெடுக்க இயலாமல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு இறந்ததும், இன்னும் குறைந்தது நூறு அப்பாவி உயிர்களையாவது இத்திட்டம் நேரடியாகப் பாதித்து பலி வாங்கியிருப்பது குறித்து கிஞ்சித்தும் குற்றவுணர்வோ, தார்மீகப் பொறுப்போயின்றி ஆட்சியாளர்கள் அலட்சிய மௌனம் காப்பதையும், ஜனநாயக அறம் என்பது முற்றிலும் அழிந்து வருவதையும் அவதானிக்கும்போது, அரசாங்கம் என்று ஒன்று இருப்பதே வெறும் பம்மாத்து. உண்மையில், அதிகார பலம் இருப்பது வங்கிகளுக்கும் பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கும்தான் என்று தீவிர இடதுசாரிகள் உலகெங்கும் முழங்கி வருவது முற்றிலும் உண்மை என்பது இந்தியாவில் கண்ணெதிரே தெளிவாகிக் கொண்டு வருகிறது.
கட்டுரையாளர் குறிப்பு: தீபலக்ஷ்மி, ஐ.டி. துறையில் மார்க்கெட்டிங். பொழுதுபோக்குக்காகவும் ஆர்வத்தாலும் வலைப்பூக்களில் எழுதத் தொடங்கிய இவர், முகநூலில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக தோன்றுவதை எழுதுபவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக