வியாழன், 3 டிசம்பர், 2015

சென்னை அபாய நிலையை சந்திக்கும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.. மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் நிலை

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும் நிலை இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் சென்னை அபாய நிலையை சந்திக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையின் தாக்குதலால் சென்னையில் வரலாறு காணாத இழப்புகள் ஏற்படுத்தியிருப்பதால் மத்திய அரசு “இயற்கை பேரிடர்” என அறிவித்துள்ளது. வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு தத்தளித்துக்கொண்டு இருக்கறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையினால் ஏரி கரையோரங்களில் இருந்தவர்களின் வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கனமழை சென்னையில் தொடரும் என்றும் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என்றும் சென்னை நகரம் அபாய நிலையை சந்திக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெனரல் எல்.எஸ்.ரத்தோர் கூறியதாவது: தென்னிந்தியாவின் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும், தமிழகத்தின் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு பிறகு மழையின் அளவு படிப்படியாக குறைந்தாலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் மீண்டும் கனமழை சென்னையில் தொடரும் என்றும் சென்னை நகரம் அபாய நிலையை சந்திக்க உள்ளதாக அவர் எச்சரிக்கை செய்துள்ளார். தமிழ்நாட்டில் வேலூரில் வழக்கத்தை விட 139 சதவீதமும், சென்னையில் 89 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நிலைமை சற்று கவலை அளிப்பதாகவும் இருக்கிறது என்று ரத்தோர் தெரிவித்துள்ளார். webdunia.com

கருத்துகள் இல்லை: