செவ்வாய், 1 டிசம்பர், 2015

மிஸ்டர் கழுகு: தி.மு.க-வில் ஜனவரி திருப்புமுனை!

திராவிடக் கொள்கைகளை வீட்டுக்கு வெளியே பேசுவார்கள். ஆனால், வீட்டுக்குள் பக்தி மணம் வீசும்’’ என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். புதிர் போட்டு அதை அவரே அவிழ்ப்பதுதான் கழுகார் ஸ்டைல் என்பதால் பொறுமை காத்தோம்.
‘‘மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா. கருணாநிதியின் மகள் செல்வி. இருவரும் கோயில் கோயிலாகப் போய் விசேஷ பிரார்த்தனைகள் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள மஞ்சுநாதா கோயிலுக்கு இருவரும் சென்று வந்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் கருணாநிதியின் குடும்பத்துக்குப் புதிய திருப்புமுனை நிகழப் போகிறதாம். இதை ஆருடமாகச் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ‘பிரிந்தவர்கள் மீண்டும் கூடுவது, குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு’ தருவதுதான் மஞ்சுநாதா கோயிலின் ஸ்பெஷாலிட்டி. கோயில் அருகே ஒரு மடாபதிபதி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வதில் கில்லாடியாம். தயாளு அம்மாளுக்கு மிகவும் வேண்டியவர் அவர். 2ஜி வழக்கில் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் தயாளு, பல கோயில்களுக்குச் சென்றார். அப்படித்தான் மஞ்சுநாதா கோயிலுக்குப் போனபோது, அங்கிருந்த மடாதிபதியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். தயாளு அம்மாள் அவரைச் சந்தித்தபோது, ‘இன்னும் ஒரு வாரத்தில் கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆவார்’ என அருள்வாக்குச் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னபடியே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததாம். அதன்பிறகு அந்த மடத்துக்குச் சென்று 35 லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரை அமைத்துக் கொடுத்திருக்கிறார் தயாளு அம்மாள்.
அதன்பிறகு மஞ்சுநாதா மடாதிபதியின் அருள்வாக்குகள் கோபாலபுரத்துக்கு வந்துகொண்டே இருக்கிறதாம். சங்கடங்கள் ஏற்படும்போதெல்லாம் அந்த மடாபதிபதியை நேரில் சந்தித்து ஆலோசனைகள் கேட்டு வருகிறார்களாம்.’’
‘‘இப்போது போனது எதற்காக?’’
‘‘திடீர் மூச்சுத் திணறலால் தயாளு அம்மாள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்​பட்டார். இதன்பிறகுதான் துர்காவும், செல்வியும் மடாபதிபதியைச் சந்தித்தார்​களாம். அப்போது தயாளு அம்மாளின் உடல் நிலையைப் பற்றிச் சொல்லியி ருக்கிறார்கள். மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு, கடைசியாக தி.மு.க-வின் அடுத்தகட்ட நகர்வுகளையும் அரசியல் பற்றியும் பேசியிருக்கிறார்கள். ‘பிரிந்துபோன குடும்பங்களை ஒன்று சேருங்கள். பிறகு எல்லாம் தானாக நடக்கும்’ எனச் சொல்லி அனுப்பி​யிருக்கிறார். கணவருக்கு புரோமோஷன் கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஆர்வமும் காட்டி வந்த துர்கா, கொஞ்சம் மனம் மாறியிருக்கிறார் என கோபாலபுரத்து பிரமுகர்கள் சொல்ல ஆரம்பித்​திருக்கிறார்கள். அழகிரியை இணைக்கும் படலத்தை ஏற்கெனவே செல்வி கையில் எடுத்துவிட்டார். இதற்கு ஸ்டாலின் குடும்பமும் தற்போது ஓகே சொல்லிவிட்டதாம். இப்படி நடைபெற்று வரும் ‘மூவ்’களை அழகிரியின் வட்டாரமும் அறிந்துகொண்டது. ‘அண்ணன் இல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் அது தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு’ என தூபம் போட்டு வருகிறார்களாம் அழகிரியின் ஆதரவாளர்கள்.’’
‘‘அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் உறவு எப்படி இருக்கிறது?’’
‘‘இப்போது வரையில் எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கட்சியின் உட்கட்சித் தேர்தலில் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களை ஸ்டாலின் தரப்பு கட்டம் கட்டியது. அதற்குக் காரணமான ஒரு சிலரை, கட்சியைவிட்டுத் தூக்க வைத்தார் அழகிரி. இதில் இரண்டு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் கோபாலபுரத்தில் கலவரமாக வெடித்தது. ‘மூன்று மாதங்களில் ஸ்டாலின் இறந்துவிடுவார்’ என அழகிரி சொன்னதாக மீடியாக்களிடம் கலங்கினார் கருணாநிதி. குடும்ப விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நின்ற நேரத்தில் ஸ்டாலின் ஆதரவாளர், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி மீது மேலூரில் முத்துவேல் என்பவர் சாதியைச் சொல்லித் திட்டியதாகப் புகார் கொடுத்தார். இதனால் மூர்த்தி மீது தீண்டாமை வழக்குப் பாய்ந்தது. அழகிரி தரப்பும், ஸ்டாலின் தரப்பும் அறிக்கை போர் நடத்தி முட்டிக்கொண்டு நின்றனர். இத்தனைக்கும் பிறகுதான், அழகிரியை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார்கள். வெளிநாடுகளுக்குப் பறப்பதும் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்துச் சீண்டுவதுமாக காலத்தை ஓட்டி வந்தார் அழகிரி. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியில் இருந்து அழைப்பு வரும் என எதிர்பார்த்தார். நோ ரியாக்‌ஷன். வைகோ முதல் காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் வரை பலரும் அழகிரியைத் தேடி வந்தனர். ‘தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும்’ என்றார். உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை தினசரி தலைப்புச் செய்தியாகவே இருந்தார் அழகிரி. அதன்பிறகும் தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாகக்கூட பேச்சுகள் அடிபட்டன. ‘நான் எப்போதும் தி.மு.க-தான். எனது தலைவர் கருணாநிதி மட்டும்தான்’ எனச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி அவர் சொல்லி வந்தாலும் அழகிரியின் கோட்டையில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவினார்கள் ஸ்டாலின் தரப்பினர். சில சேதாரங்கள் ஏற்பட்டாலும் இருப்பவர்களை மட்டும் வைத்துக்கொண்டு அமைதியாக வலம் வந்தார் அழகிரி. தயாளு அம்மாவைச் சந்திக்க கோபாலபுரம் வருபவர், அவரை மட்டும் பார்த்துவிட்டு வேறு யாரையும் சந்திக்காமல் தவிர்த்து வந்தார் அழகிரி.’’
‘‘ம்’’
‘‘அழகிரி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான ராமகிருஷ்ணன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு அழகிரி யாரையும் சந்திக்கவில்லை. இந்த கத்துக்குத்துப் பிரச்னையோடு சகாயம் அறிக்கையும் பீதியை உண்டாக்கி​யிருக்கிறது. அழகிரி மகன் துரை தயாநிதி நடத்தி வந்த கொலம்பஸ் குவாரி பற்றியும் சகாயம் தனது அறிக்கையில் சொல்லியிருப்பதாகத் தகவல் உலவுகிறது. அதனால் சென்னையில் நடந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இல்லத் திருமணத்துக்குக்கூட வராமல், சென்னை வீட்டில் இருந்துகொண்டு மறுநாள் சந்தித்து விட்டுப் போனார். இப்படி பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்கிற சிந்தனையுடன் இருக்கிறார். இந்த மனக் காயங்களுக்கு எல்லாம் ஜனவரி 5-ம் தேதி மருந்து பூசப்படலாமாம். அன்றைக்கு கனிமொழியின் பிறந்த நாள். அன்றைய தினம், குடும்பம் மொத்தமும் ஒன்று சேருவார்களாம். இதுவும் அந்த மடாதிபதியின் யோசனைதான். எல்லாம் கைகூடி வந்தால் இந்த ஆண்டு பொங்கலை வெகு சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறாராம் கருணாநிதி. ஜனவரி 30-ம் தேதி அழகிரியின் பிறந்த நாள். அன்றைய தினம் அழகிரியை கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்போவதாக பலமாகப் பேச்சு அடிபடுகிறது’’ எனச் சொல்லி அடுத்த சப்ஜெக்ட்க்குத் தாவினார்.
‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் இதுநாள் வரை சுருண்டுகிடந்த அனிதா ராதா கிருஷ்ணன், கருணாநிதியை சந்தித்த பிறகு சுறுசுறுப்பாகி​விட்டார். இன்னொருபுறம், தூத்துக்குடியில் இருந்து ஒரு புள்ளி, முகாம் மாறப் போகிறது. ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல்தான் அந்தப் புள்ளி. விரைவில் அவர் தி.மு.க-வில் ஐக்கியமாகப் போகிறார். கடந்த வாரம் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் என்கிறார்கள். அப்போது ஸ்டாலின் மருமகன் சபரீசனும் இருந்திருக்கிறார். ஜோயலோடு சேர்ந்து மேலும் சிலருக்குத் தூபம் காட்டப் படுகிறதாம்.’’ vikatan,com

கருத்துகள் இல்லை: