வெள்ளி, 4 டிசம்பர், 2015

அனைத்து கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை ஒழுங்கு படுத்த கோரிக்கை

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அனைத்துக் கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். பச்சிளங் குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும்போது என் கண்கள் குளமாகிப் போகும் அளவுக்கு வேதனை வாட்டுகிறது.

இந்நிலையில் சென்னை வந்த வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டதோடு, ஏற்கெனவே அறிவித்த ரூ. 940 கோடியோடு மேலும் ரூ.1,000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க, பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து மேலும் தேவையான நிதியை வழங்க வேண்டும்.
நான் ஏற்கெனவே தெரிவித்தவாறு அனைத்துக் கட்சி குழு அமைத்து கண்காணித்தால்தான் மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதி மக்களை முழுமையாக சென்று சேருவதை உறுதி செய்ய முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அனைத்துக் கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை கண்காணிக்க வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.தமிழ்.ஹிந்து.com

கருத்துகள் இல்லை: