வெள்ளி, 4 டிசம்பர், 2015

வட சென்னையில் மரண ஓலம்..புழல் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர்

சமீபத்திய கனமழையால், தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டன. ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு மழை நின்றதும், வட சென்னை யின் பல பகுதிகள் மூழ்கியதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வட சென்னையில் உள்ள, எம்.கே.பி., நகர், கண்ணதாசன் நகர், விவேகானந்தன் நகர், எஸ்.எம்., நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தேவர் நகர் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், தலா, 30 ஆயிரம் - 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். புழல் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கேப்டன் காட்டன் கால்வாய் வழியாக, இப்பகுதிகளில் புகுந்தது. இந்த பகுதி மக்களுக்கு வெள்ள பாதிப்பு குறித்து, அரசு முன் எச்சரிக்கை அறிவிக்கவில்லை.
 கையில் கிடைத்த பொருட்களுடன்...நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், கேப்டன் காட்டன் கால்வாய் வழியாக, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், கோல்டன் குடியிருப்பு, முல்லை நகர், எஸ்.எம்., நகர், எம்.கே.பி., நகர் உள்ளிட்ட இடங்களில், கழுத்தளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதில், நான்கு அரசு பஸ்கள்; இரண்டு சரக்கு லாரிகள் நீரில் சிக்கின.

தொடர்ந்து, தண்ணீர் வந்ததால் கீழ் தளத்தில் குடியிருந்த மக்கள், கையில் கிடைத்த பொருட்களுடன், குழந்தைகளை அழைத்து சென்று வீடுகளின் மேல் தளம் மற்றும் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தஞ்சம் புகுந்தனர். இரு தினங்களாக, இப்பகுதிகளில், மின்சாரம் இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால், தண்ணீரில் எங்கு செல்வது என தெரியாமல், பகுதிவாசிகள் அலறினர். இந்த பகுதிகளுக்கு, மீட்பு குழு வராததால், உள்ளூர் இளைஞர்கள், அவர்களாகவே மீட்பு பணியில் இறங்கினர். சாலைகளில் இருந்த குடிநீர் வாரியத்தின் தண்ணீர் தொட்டிகளை, இரண்டாக வெட்டி, அதை படகு போல் செய்தும்; குடிநீர் கேன், கட்டைகளை படகு போல் அமைத்தும், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

6,000 பேரை மீட்டனர்நள்ளிரவு முதல், தொடர்ந்து தண்ணீர் வந்ததால், மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர். இதனால், வட சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் இடத்தை விட்டு, நேற்று காலை முதல் இடம் பெயர்ந்தனர். புளியந்தோப்பு காவல் துறை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், மதியம் வரை, 6,000 பேரை மீட்டு, பொது இடங்களில் தங்க வைத்தனர்.

முதியோர் கடும் அவதி:வட சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களில், பலர், குழந்தைகள் மற்றும், 60 வயதை கடந்தவர்கள். அவர்கள், உணவு, குடிநீர், மருந்து பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

- நமது நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை: