வெள்ளி, 4 டிசம்பர், 2015

பேரிடர் மேலாண்மை சுத்தமான தோல்வியில்....இது கூடவா தமிழகத்தால் / இந்தியாவால் முடியாது? அறிவியல் ஆலோசகர்...

சென்னையில் பேரிடர் நிகழ்ந்து, 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்கள்,
உதவிக்காக கட்டடங்களின் மேல் காத்திருபது, பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்துவிட்டதை காட்டுவதாக, முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனை கருத்துகள் பரவி வருகின்றன.
மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முகநுால் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:சென்னையின் மையப்பகுதிகளில் மழை பெய்யாமல் இப்படிப்பட்ட வெள்ளம் உருவானது வரலாறு காணாதது. அடையாற்றை ஒட்டியுள்ள சைதாப்பேட்டை, அசோக் பில்லர், ரங்கநாதன் சுரங்கப் பாதை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இதுவரை இப்படிப்பட்ட வெள்ளத்தை பார்த்ததில்லை.நேற்று, மழையும் இல்லை.- அப்படியிருந்தும் ஏரி திறக்கப்பட்டதால், 30 ஆயிரம் கனஅடிக்கும் மேலான தண்ணீர் இந்த பகுதிகளை எல்லாம் சூழ்ந்து கொள்ளும் என்று மக்களுக்கு எப்படி தெரியும்.


எச்சரிக்கை:அரசு எச்சரித்து மக்கள் அசட்டையாக இருந்தனரா அல்லது அரசின் எச்சரிக்கை மக்களை சென்றடையும் விதத்தில் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. முறையான எச்சரிக்கை விடுத்திருந்தால், குறைந்த பட்சம் முக்கியமான சான்றிதழ்கள், பணத்தை மட்டுமாவது எடுத்துக்கொண்டு, மக்கள் வீட்டை பூட்டி விட்டு, மேடான பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு இருந்திருக்கும்.

தலைமைச் செயலகம் இருக்கும் சென்னைக்கே இந்த நிலைமை என்று சொன்னால்,- கடலுார் மக்கள் பாவம்; மற்ற கடலோர மாவட்ட மக்கள் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லி மாளாது.உயிரை கையில் பிடித்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது மாடியில் உதவிக்காக காத்திருக்கும் மக்களை, ஹெலிகாப்டரில் சென்று மீட்பதற்கான முகாந்திரம் ஏதும் தெரியவில்லை.

48 மணி நேரமாகியும்...:ராணுவ விமானங்கள், உயிர் காக்கும் ஜாக்கெட்டை, ரப்பர் படகுகளை மேல் இருந்து கீழே போட்டிருந்தால் கூட தன்னார்வ தொண்டர்கள், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி இருப்பர். பேரிடர் மீட்பு, தமிழகத்தில் நடக்காது என்று இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஏன், இந்தியாவிலேயே அது இன்றைக்கு கேள்விக்குறியாகி விட்டது.

பேரிடர் மேலாண்மை, சுத்தமான தோல்வியில் முடிந்திருக்கிறது. பேரிடர் வந்து, 24 மணிநேரம் கழித்து தான், ராணுவம் இந்தியாவில் வர இயலும்; வந்த பின் பணியை துவக்க, 12 மணி நேரம் ஆகும்; அதுவும் முழுமையாக கிடைக்காது. ஆக, பேரிடர் வந்து, 48 மணி நேரமாகியும் உதவி கிடைக்காத நிலை.

கால் சென்டர்'டிஜிட்டல் இந்தியா' முழக்கத்தால், ஒரு ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண்ணை கொடுக்க முடியாது. ஒரே கால் சென்டர், '108' இருந்தும் அதை பயன்படுத்தி, மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க முடியாத மாநில ஆட்சி முறை நிர்வாகம்.
இந்தியாவின் ஒரு மாநிலத்தில், அதுவும் ஒரு மாநகரத்தில், அதுவும் ஒரு சில பகுதிகளில், அதுவும் ஆற்றோரத்தில் இப்படிப்பட்ட பேரிடர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும், 'சுனாமி' மாதிரி திடீரென்று வந்துவிடவில்லை.

கிட்டத்தட்ட, ஒரு மாதமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த காலத்தில், கிராமத்தில் தண்டோரா போட்டு மக்களை மழை வெள்ளத்தில் காப்பாற்றியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு, இப்படிப்பட்ட சமூக வலைதளங்கள் இருந்தும் அரசால் பயன்படுத்த முடியவில்லை.

பாடம் கற்று பயன் என்ன?

ஒவ்வொரு பேரிடருக்கும் பின்பே பாடம் கற்றுக் கொள்வோம். அதிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடத்தை வைத்து அடுத்த பேரிடருக்குள் மக்களை காப்பாற்ற நம்மால் முடியாது என்றால் அது எப்படிப்பட்ட ஆட்சிமுறை நிர்வாகம். இது கூடவா இந்தியாவால் முடியாது?
பேரிடர் வந்தால் கையறு நிலையில் நிர்வாகம்; காப்பாற்ற ஆளில்லா மக்கள்; இது தான் இன்றைய நிலை.

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே முடியும். எல்லா உதவிகளும், மாநில அரசிற்கு மத்திய அரசு செய்யும். ஆனால், எல்லாம் முடிந்தபின் தான் அது வந்து சேரும் என்றால் அதற்கு பெயர் பேரிடர் மேலாண்மை இல்லை.
எல்லாம் முடிந்தபின் வந்து பார்வையிடும் கடவுளாக மட்டுமே அவர்கள் இன்றும் காட்சியளிக்கின்றனர். அந்த தரிசனத்திற்கு ஏங்கும் நாங்கள், இழி பிறவிகள் ஆனோம் என்று ஆதங்கத்துடன், இரவு முழுவதும் முயற்சித்தும் யாரும் உதவிக்கு வராத நிலையில், நண்பர் தனபால் எழுதிய இந்த பதிவை பகிர்ந்து, இதன் மூலமாகவாவது மாட்டிக்கொண்ட மக்களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் நலம் என்ற நப்பாசை மட்டும் தான்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: