ஞாயிறு, 29 நவம்பர், 2015

savukku:தேர்தலானாலும் சரி, வழக்குகளானாலும் சரி. ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய் விடுவார்

c30
தமிழக அரசியல் வரலாறை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, ஆணவத்தின் மறுபெயர் ஜெயலலிதா என்பது நன்றாகவே தெரியும்.  எவ்விதமான தவறுகளை இழைத்தாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் அவருக்கு அபார நம்பிக்கை உண்டு.   திமுகவின் மீது அப்படியொரு நம்பிக்கை அவருக்கு.   அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான், திமுகவும் பல்வேறு தவறுகளை இழைத்து, ஜெயலலிதாவை மீண்டும் மீண்டும் மகுடத்தில் ஏற்றி வருகிறது. 1991-1996 ஆட்சிக்கு பிறகு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்றே பலரும் கருதினார்கள்.   ஆனால் அந்த கருத்துக்களையெல்லாம் பொய்ப்பித்து, 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே 18 எம்.பிக்களை பெற்றார் ஜெயலலிதா.    தேர்தலானாலும் சரி, வழக்குகளானாலும் சரி.   ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய் விடுவார் என்ற அசாத்திய நம்பிக்கை அவருக்கு உண்டு.
2011ல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே இந்த ஆணவத் தொனி ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டது.  திமுகவின் திட்டங்களை ஒவ்வொன்றாக முடக்குதையே தனது முதல் நடவடிக்கையாக தொடங்கினார் ஜெயலலிதா.  அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைச் செயலகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை படிப்படியாக முடக்கினார்.    அந்த கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான முதலீடுகளைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை.   தலைமைச் செயலகம் கட்டுவதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறி, முதல் பட்ஜெட்டிலேயே, அந்த கட்டுமான ஊழல் குறித்து விசாரிப்பதற்கென்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார்.   அந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ரகுபதி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தெண்டச் சம்பளம் வாங்கியதைத் தவிர அந்த விசாரணை ஆணையத்தால் எந்தப் பயனும் நடைபெறவில்லை.

திமுக பிரமுகர்கள் பலர் மீது நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.     ஒவ்வொரு மாவட்டத்திலும் நில அபரிப்புக்கென்றே ஒரு தனி பிரிவு காவல்துறையில் தொடங்கப்பட்டது.   இதற்கென ஒரு அரசு சிறப்பு வழக்கறிஞரும் நியமிக்கப்ட்டார்.   நீதிபதி ரகுபதி போலவே, இந்த நில அபகரிப்புப் பிரிவினரும் கடந்த நான்கரை ஆண்டுகளாக தெண்டச் சம்பளம் மட்டுமே வாங்கியுள்ளனர்.  தொடக்க காலத்தில் நூற்றுக்கணக்கான திமுக பிரமுகர்களை நில அபரிப்பு வழக்கில் கைது செய்ததோடு சரி.  இது வரை ஒரே ஒரு வழக்கில் கூட தண்டனை பெற்றுத் தர முடியவில்லை ஜெயலலிதாவால்.    இதுதான் ஜெயலலிதாவின் நிர்வாகம்.
ஜெயலலிதாவின் ஆணவப் போக்குக்கு சிறந்த உதாரணம் தமிழக சட்டப்பேரவையை அவர் நடத்திய விதம்.   விவாதம் நடக்க வேண்டிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவரைக் கூட பேச விடாமல், பேரவையில் எவ்வித விவாதமும் நடைபெறாமல் முழுமையாக தடுத்ததோடு, விவாதத்துக்கே இடம் தராமல் அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் படித்தார் ஜெயலலிதா.    110 விதியின் கீழ் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டது, எவ்வித விவாதத்துக்கும் ஜெயலலிதா தயாராக இல்லை, விவாதங்களைக் கண்டு அஞ்சினார் என்பதையே காட்டுகிறது.   இதைத் தவிர்த்து, சட்டப்பேரவையை தனக்கு துதிபாடும் மன்றமாகவே மாற்றினார் ஜெயலலிதா.   ஜெயலலிதாவை புகழ்ந்து பாட்டு பாடுவது, கவிதை பாடுவது, உரையாற்றுவது என்று துதிபாடும் மன்றமாக மாற்றி, தினம் தினம் அதைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.
இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்யாத ஒரு வேலையை நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் ஜெயலலிதா.   வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு கொடநாடு எஸ்டேட்டில் சென்று ஓய்வெடுப்பதே அது.    ஒரு முதலமைச்சர் கவனிக்க வேண்டிய பணிகளுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது.   அத்தனை அவசரமாக கோப்புகள், அரசியல் ரீதியான முடிவுகள், நிர்வாக கூட்டங்கள் என்று ஏராளமான பணிகள் இருக்கும்.  ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஒய்யாரமாக கொடநாட்டில் சென்று ஓய்வெடுத்தார் ஜெயலலிதா.   அவர் கொடநாடு சென்றபோது, தலைமைச் செயலகத்தில் இருந்த முக்கிய அதிகாரிகள் விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து அரசு வாகனங்கள் மூலம் கொடநாட்டுக்கு வாரம் இரண்டு முறை சென்று வந்தனர்.  இதைத் தவிர்த்து கோப்புகள்.
கொடநாடு செல்லும்போதுதான் கோப்புகள் தாமதமாகின்றன என்றால், ஜெயலலிதா சென்னையில் இருக்கும்போதும் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை.   தலைமைச் செயலகத்துக்கு வாரத்தில் ஒரு நாள் சென்றாலே அதிசயம் என்ற நிலையில்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.    அப்படி செல்லும் நாட்களிலும், காணொலி காட்சி மூலமாக சில திட்டங்களை திறந்து வைப்பது,  யாரையாவது சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் தலைமைச் செயலகத்தில் இருப்பதில்லை.   அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள், செய்தி ஒளிபரப்புத் துறையால், அந்த வாரம் முழுக்க தினமும் ஒன்றிரண்டாக ஊடகங்களுக்கு அனுப்பப்படுவதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது.   பல்லாயிரக்கணக்கான கோப்புகள் நிலுவையில் இருப்பதால், பதவி உயர்வுகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் மாதக்கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
ஜெயலலிதாவின் அமைச்சர்களை எடுத்துக் கொண்டால்,  எவ்விதமான தகுதி, திறமை போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், மன்னார்குடி மாபியாவுக்கு விசுவாசமானவர்களை மட்டுமே அமைச்சர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா.  ஜெயலலிதாவுக்கும், மன்னார்குடி மாபியாவுக்கும் கப்பம் கட்டுவதை மட்டுமே ஒரே லட்சியமாகக் கொண்டு இந்த அமைச்சர்கள் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்துள்ளனர்.    மக்களை சந்திப்பதையோ, பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையோ, தங்களின் பணிகளின் ஒரு பகுதியாக ஒரே ஒரு அமைச்சர்  கூட கருதி செயல்பட்டது கிடையாது.   பொழுது போகாதபோதெல்லாம் அமைச்சர்களை மாற்றும் ஜெயலலிதா, எதற்காக அமைச்சரவை மாற்றம், மாற்றப்பட்ட அமைச்சர் என்ன தவறு செய்தார் என்பது போன்ற எந்த விபரங்களையும் வெளியிட்டதில்லை.   எப்போது பதவி பறிபோகும், எது செய்தால் சரி, எது செய்தால் தவறு என்று எவ்வித புரிதலும் இல்லாமல் அமைச்சர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதா சிறை சென்றபோது, காவடி எடுப்பது, மண் சோறு சாப்பிடுவது, மண் தரையில் உருளுவது, நீதித்துறையை கேவலமாக விமர்சித்து சுவரொட்டி அடிப்பது போன்ற, ஜனநாயகபூர்வமான காரியங்களை செய்த அமைச்சர்களே, கவுரவிக்கப்பட்டார்கள்.   இது போன்ற அடிமை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டன.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, திமுகவிலிருந்து அதிமுகவுக்கு பிரிந்து சென்றவர்கள், திமுகவிலிருந்த சக்கைகள்.   தற்போது போல அல்லாமல், ஒரு திரைப்பட நடிகரின் பின்னால் செல்வதற்கு அப்போது பெரும் தயக்கம் இருந்தது.  திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள், திமுகவிலேயே இருந்தார்கள்.    தொங்குசதை போல, திமுகவில் ஒட்டிக் கொண்டிருந்த கழிவுகள் எம்ஜிஆரின் பின்னால் சென்றன.  அப்போது உருவான கலாச்சாரம் இப்போதும் அதிமுகவில் தொடர்கிறது என்பது, தற்போது அதிமுகவில் உள்ள தலைவர்களின் லட்சணத்தைப் பார்த்தாலே தெரியும்.    மேலும் கூடுதலாகத் தெரிய வேண்டுமென்றால், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும், அதிமுக பேச்சாளர்களின் பேச்சுக்களை கேளுங்கள்.  சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன்தான் இன்று அதிமுகவிலேயே அதிகாரம் பொருந்திய அமைச்சர்.
இந்த அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கும், மன்னார்குடி மாபியாவுக்கும், விசுவாசமாக இருப்பதோடு அல்லாமல் தொடர்ந்து கப்பமும் கட்ட வேண்டும்.    கப்பம் கட்டாமல் ஒரு அமைச்சர்  அமைச்சராக இருப்பது, நினைத்தே பார்க்க முடியாத காரியம்.    முதல் ஆட்சியில் மன்னார்குடி மாபியாவின் தினகரன், பாஸ்கரன், திவாகரன், சுதாகரன் ஆகியோர் கொள்ளையடித்து கொழுத்துத் திளைத்தார்கள் என்றால், இரண்டாவது ஆட்சியில் மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ்.   தற்போதைய ஆட்சியில் புதிதாக முளைத்திருப்பவர்கள்தான்  இளவரசி, சிவக்குமார், கார்த்திகேயன், விவேக், ஆகியோர்.
டாக்டர் கேஎஸ்.சிவக்குமார் தம்பதியினர்
டாக்டர் கேஎஸ்.சிவக்குமார் தம்பதியினர்
இந்த இளைய தலைமுறை மன்னார்குடி மாபியா எப்படியெல்லாம் சொத்துக்களை குவித்துள்ளது என்பதை சிறை செல்லும் சீமாட்டி தொடர் கட்டுரைகள் மூலமாக சவுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாகவே அம்பலப்படுத்தியுள்ளது.    இந்து நாளேடு ஜாஸ் சினிமாஸ் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்று செய்தி வெளியிட்டதும், அனைத்து அரசியல் கட்சிகளும், இது குறித்து அறிக்கை வெளியிட்டன.    செய்தி வெளியான ஒரு வாரம் கழித்து சாவகாசமாக, பீனிக்ஸ் மால் உரிமையாளர்கள் பெயரில், ஜாஸ் சினிமாஸ் தியேட்டரை விலைக்கு வாங்கவில்லை, வாடகைக்குத்தான் வாங்கியுள்ளனர் என்று ஒரு அறிக்கை வெளியானது.
பீனிக்ஸ் மால் திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், தியேட்டர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.   கடந்த ஒரு வருடமாக பீனிக்ஸ் மாலில் உள்ள லூக்ஸ் தியேட்டரை சத்யம் சினிமாஸ் நடத்தி வந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.   பீனிக்ஸ் மாலில் பதினோரு தியேட்டர்கள் திறக்கப்பட்டதும், அந்த தியேட்டர்களை வாடகைக்கு விடுவதாக இருந்தால் ஏற்கனவே தியேட்டர் தொழிலில் இருக்கக் கூடிய பிவிஆர், பிக் சினிமாஸ், சத்யம் போன்ற நிறுவனங்களுக்கு அளிப்பதுதான் இயல்பு.    அந்த அடிப்படையில்தான் சத்யம் சினிமாஸ் நிறுவனம் ஒரு வருடத்துக்கு மேலாக லூக்ஸ் சினிமாஸை நடத்திக் கொண்டிருந்தது.   ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்று இருந்த நிறுவனத்தை திடீரென்று ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் செய்து, விவேக் ஜெயராமன் என்ற கல்லூரியில் படிக்கும் ஒரு சிறுவனை தலைமை இயக்குநராக கொண்ட ஒரு புதிய நிறுவனத்துக்கு, 11 தியேட்டர்களை வாடகைக்கு தர எந்த நிறுவனமாகவது ஒப்புக்கு கொள்ளுமா ?  மேலும், சத்யம் சினிமாஸ் உரிமையாளர்கள், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகே இந்த பரிமாற்றம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   சத்யம் சினிமாஸ் போன்ற பெரும் செல்வந்தர்களுக்கு எதிராக நீங்கள் எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.  அந்தப் புகார், குப்பைத் தொட்டிக்கு செல்வதைத் தவிர வேறு எதுவும் நடக்காது.  அப்படி இருக்கையில் சத்யம் சினிமாஸ் அதிபர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு, கைதும் செய்து அத்தனை விரைவாக சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றா நினைக்கிறீர்கள் ?
first-imax-theatre-opened-at-jazz-cinemas-in-chennai
ஜாஸ் சினிமாஸ் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே வெளியே வரும்.   11 தியேட்டர்களை வாடகைக்கு எடுக்க கல்லூரி மாணவனான விவேக் ஜெயராமனுக்கு எங்கிருந்து அத்தனை பணம் வந்தது ? வருடத்துக்கு வாடகையாக தரப்படும் தொகை எவ்வளவு என்பது அனைத்தும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவால் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.  அப்படி விசாரணை நடத்தினால் அவை அத்தனையும் ஜெயலலிதாவின் பணமே என்ற உண்மை வெளிவரும்.
தமிழகத்தில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் நெடுங்காலமாக திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணம், ஐமேக்ஸ் தியேட்டர்களுக்கான உபகரணங்கள் விலை உயர்ந்தவை என்பதால் அதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என்பதாலேயே.  தமிழகத்தில் அதிகபட்ச கட்டணம் 120 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதால்,  ஐமேக்ஸ் திரையரங்கை திறக்க முடியவில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் பத்திரிக்கைகளில் தெரிவித்திருந்தனர்.  ஆனால், ஜாஸ் சினிமாஸிடம் லூக்ஸ் திரையரங்கங்கள் கைமாறியதும், கடந்த வாரம் முதல், ஐமேக்ஸ் தியேட்டர் 390 ரூபாய் டிக்கெட் விலையில் செயல்படத் தொடங்கியுள்ளன.  இதற்கான அரசு விதி எப்போது மாற்றப்பட்டது, யாரால் மாற்றப்பட்டது என்பதற்கான எந்த விடையும் இல்லை.
12248092_1563139953942149_4308911660553647304_o
மதுவிலக்கு
மதுவிலக்கு கோரி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்ட களத்தில் இறங்கியிருந்தபோது, அது குறித்து எந்த விதமான சலனமும் இல்லாமல் இருந்தார் ஜெயலலிதா.    அவர் பினாமி பெயரில் நடத்தும் மிடாஸ் மது ஆலை, தொடர்ந்து தமிழக டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்து வருகிறது என்ற செய்தி ஊடகங்களில் அம்பலமான பிறகும், அது குறித்து எவ்விதமான கவலையும் ஜெயலலிதா படவில்லை.   மாறாக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதுபானங்களின் விலையை உயர்த்தி, மதுபான ஆலைகளை லாபம் பார்க்க வைத்தார் ஜெயலலிதா.    மிடாஸ் மதுபான ஆலையின் நிர்வாகத்தை கவனிப்பது, தற்போது கார்டனின் செல்லப்பிள்ளையாக உள்ள டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் என்பது ஆவணங்களோடு ஊடகங்களில் வெளியான பின்னாலும், மிடாஸிடமிருந்து அரசு செய்யும் கொள்முதலை துளியும் குறைக்கவில்லை.
kovanவீதிதோறும் மதுதான் ஆறாக ஓடுகிறதென்றால், தரமான மதுவாவது கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை.   மதுபான கொள்முதலில் நடக்கும் கொள்ளைகள் குறித்தும், தரம் குறைந்த மதுபானங்கள் தமிழகத்தில் எப்படி விநியோகம் செய்யப்படுகின்றன என்பது குறித்தும், சவுக்கு தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் உச்சமாக, மதுஒழிப்புக்கு ஆதரவாக பாடல் எழுதிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை நள்ளிரவில் தீவிரவாதி போல கைது செய்தார் ஜெயலலிதா.   அந்தக் கைது நடவடிக்கை எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிவார்.  
நான்கு பேர் கேட்டுக் கொண்டிருந்த கோவனின் பாடல்கள், வாட்சப், முகநூல், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களின் வழியாக பட்டிதொட்டியெங்கும் பரவியது.    கோவனின் கைதை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கண்டித்தன.   பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்தது.   ஊடகங்கள் அனைத்தும், (சொம்பு ஊடகங்களை தவிர்த்து) ஒருமித்த குரலில் கண்டித்தன.   இருப்பினும், இது குறித்து துளியும் பாடம் கற்காத ஜெயலலிதா, கோவனின் காவல் கட்டுப்பாடு விசாரணையை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.     ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, மக்களின் கருத்துக்களை அவர் துளியும் மதிப்பதில்லை என்பதை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியது.
மின்துறை ஊழல்
மின்துறையில் நடந்துள்ள பகாசுர ஊழல்கள் குறித்து, சவுக்கு தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.  நத்தம் விஸ்வநாதனும், ஷீலா பாலகிருஷ்ணனும், ஞானதேசிகனும் சேர்ந்து அடித்த கொள்ளைகள், அதன் காரணமாக விளைந்த நீதிமன்ற வழக்குகள், தமிழக அரசு அந்த வழக்குகளை கையாண்ட விதங்கள் குறித்தெல்லாம் விரிவான கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் இன்னமும் ஊழல் தங்குதடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.  அண்டை மாநிலங்கள் குறைந்த விலைக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குகையில், தமிழகம் அடானியோடு 7.01 ரூபாய்க்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்தது கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.   அடானியோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை தகவல் அறியும் சட்டத்தின்படி கூட தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறது தமிழக மின்வாரியம்.
ஊடகங்களின் மீதான தாக்குதல்
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே ஊடகங்களை ஒதுக்கி வைத்து, அவற்றை எப்படி நெருக்குவது என்ற வேலையை ஜெயலலிதா செய்து வந்தார்.  ஜால்ரா அடிக்கும் ஊடகங்களுக்கு விளம்பரம் என்ற எலும்புத் துண்டை போடுவது.   எதிர்த்து எழுதும் ஊடகங்களை அவதூறு வழக்கு என்ற ஆயுதம் கொண்டு மிரட்டுவது என்ற போக்கை கையாண்டார்.   தமிழக ஊடகங்கள் என்று அல்லாமல் தேசிய ஊடகங்களையும் ஜெயலலிதா விட்டு வைக்கவில்லை.    சிஎஎஎன் ஐபிஎன் தொலைக்காட்சியில் வரும் திஸ் வீக் தட் வாஸ்ன்ட் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜெயலலிதா விமர்சனம் செய்யப்பட்டதைக் கூட விட்டுவைக்காமல், அந்த தொலைக்காட்சி நிறுவனம், அந்நிகழ்ச்சியை நடத்தும் சைரஸ் ப்ரோச்சா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.   விஜயகாந்த் மற்றும் கேப்டன் டிவி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, வரலாற்றிலேயே இல்லாத வகையில், செய்தி வாசிப்பவர் மீது கூட அவதூறு வழக்கு தொடர்ந்தார்.   அவதூறு வழக்குகள் தன் இறுதிக் கட்டத்தை எட்டுவதில்லை.   ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவை வாபஸ் பெறப்படும் என்பதை நன்றாக உணர்ந்தே ஜெயலலிதா இந்த அவதூறு ஆயுதங்களை கையில் எடுத்துள்ளார்.
p44a
இந்த அடாவடி நடவடிக்கைகளுக்கெல்லாம் உச்சம், ஆனந்த விகடன் இதழ் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்.  மந்திரி தந்திரி தொடரின் இறுதியாக என்ன செய்தார் ஜெயலலிதா என்று ஜெயலலிதாவின் கையாலாகாத்தனம் மற்றும் ஊழல்களை பட்டியலிட்டு வெளியிட்ட கட்டுரைக்காக விகடன் மீதும், அதை எடுத்தாண்ட திமுக நாளேடு முரசொலி மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, விகடன் இதழ்களை விற்பனை செய்யும் கடைகள் மீதும், முகவர்கள் மீதும் காவல்துறையை ஏவிவிட்டு மிரட்டியதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சம்.     இதைத் தவிர்த்து, ஆனந்த விகடனின் முகநூல் பக்கம், அதிமுக லகுடபாண்டிகளால் முடக்கப்பட்டது.    வள்ளியூர் தி.மு.க. நகரச் செயலாளர், சேதுராமன், நெல்லை மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம் ஆகிய இருவரும் “ஆனந்தவிகடன்” இதழை விநியோகம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்கள்.

ஆனந்த விகடனின் அந்த கட்டுரைக்காக, நமது எம்ஜிஆர் இதழில், தொடர்ந்து விகடனைப் பற்றி ஆபாசமாக கவிதை என்ற பெயரில் குப்பைகளை வெளியிட்டு, அதை படித்து முதுகு சொறிந்து கொண்டார் ஜெயலலிதா.  நமது எம்ஜிஆர் என்ற குப்பையை யார் படிக்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதா தொடர்ந்து படிக்கிறார்.  விமர்சனம் என்ற பெயரில் வரும் இப்படிப்பட்ட ஆபாசங்களை படித்து ரசிக்கிறார் என்றால் ஜெயலலிதாவின் பக்குவம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
12278728_1563690127220465_2465575876108857646_n
தமிழகத்தில் வெள்ளம்
வரலாறு காணாத வெள்ளம் தமிழகத்தைத் தாக்கி தமிழகமே தத்தளித்துக் கொண்டிருந்தபோது, துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஜெயலலிதா மிகுந்த மெத்தனமாகவே இருந்தார். எதிர்க்கட்சிகள், மழையால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு தொடர்ந்து படையெடுத்த பிறகுதான், கடலூருக்கும் இதர ஊர்களுக்கும் அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.    முதல்வர் நேரில் பார்வையிடவில்லை என்று பலத்த விமர்சனங்கள் எழுந்த பிறகு, பிரச்சார வேனில் ஏறி, தேர்தல் பிரச்சாரம் போலவே ஆர்கே நகருக்கு சென்று வந்தார்.    மக்கள் இடுப்பளவு நீரில் தள்ளாடிக் கொண்டிருக்கையில், அவர்களிடையே சென்று அண்ணா நாமம் வாழ்க, எம்ஜிஆர் நாமம் வாழ்க என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா.   நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள், நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா படம் முன்னால் இருப்பதுபோல பார்த்துக் கொண்டது அருவருப்பையே ஏற்படுத்தியது.
இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து தளங்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் ஜெயலலிதா மீண்டும் அமோக வெற்றி பெறுவார் என்றே ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்த பல்வேறு கணிப்புகள் ஆருடம் கூறிக் கொண்டிருந்தன.   2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரும் வெற்றியைப் போலவே, கூட்டணி இல்லாமலேயே தனித்து போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவார் என்றே பல தரப்பினரும் கணித்தனர்.   ஆனால்,  இன்று ஜெயலலிதா மீதும் அவரது அரசு மீதும், கடுமையான அதிருப்தி மக்களிடையே நிலவுகிறது.    தமிழகத்தை, அதிமுகவிடமிருந்து எப்படியாவது மீட்டாக வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாக பார்க்க முடிகிறது.  அம்மா என்ற போர்வையில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நடிகையின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை என்றால், தமிழகத்துக்கும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சியின் முடிவு தொடங்கி விட்டது.
NEW
SHARE ON

கருத்துகள் இல்லை: