சனி, 5 டிசம்பர், 2015

ஆக்சிஜன்' கிடைக்காமல் 18 நோயாளிகள் இறந்த கொடூரம்: சென்னையில் (Miot) தனியார் மருத்துவமனைகள் மூடல்

சென்னையில், இரண்டு தனியார் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்ததால் அவை மூடப்பட்டன. அங்கு சிகிச்சை பெற்றோர் பிற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரு மருத்துவமனையில், 'ஆக்சிஜன்' எனப்படும் பிராண வாயு கிடைக்காமல், 18 நோயாளிகள் இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வட கிழக்கு பருவ மழையின் தாக்கம், சென்னையை தீவாக மாற்றிவிட்டது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இப்பிரச்னையில் இருந்து, மருத்துவமனைகளும் தப்ப முடியவில்லை.சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, 'மியாட்' மருத்துவமனை, அடையாறு ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. ;மருத்துவமனை நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை இன்மையால், அங்கு சிகிச்சை பெற்று வந்தோர் வெள்ளத்தில் தத்தளித்தனர்.நிலைமையை உணர்ந்த தமிழக அரசால், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, 57 பேர், '108' ஆம்புலன்ஸ் உதவியுடன், பிற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இங்கு நிலவும் தொடர் மின் தடை; தண்ணீரில் மூழ்கிய ஜெனரேட்டர் ஆகிய பிரச்னைகளால் கூடுதல் சிக்கல் ஏற்பட்டது.


மேலும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு, 'ஆக்சிஜன்' கிடைக்காமல், 18 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபோன்று, பெரும்பாக்கத்தில் உள்ள, 'குளோபல்' மருத்துவமனையிலும் தண்ணீர் புகுந்ததால், இங்கு சிகிச்சை பெற்று வந்தோர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இங்கு உயிர் இழப்பு இல்லை.

சுகாதாரத்துறை சொல்வது என்ன?:

'தனியார் மருத்துவமனைகள் கோரினால், பிராண வாயு சிலிண்டர்களை தர தமிழக அரசு தயாராக உள்ளது' என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தனியார் மருத்துவமனை நிர்வாகம், 'பிராண வாயு இல்லை' எனக் கூறி உதவி கேட்டபோது, சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து, பிராண வாயு சிலிண்டர்கள் அனுப்பப்பட்டன. வெள்ளம் புகுந்து சிக்கலான நிலை வந்ததால், உள்நோயாளிகள் பிற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

மருத்துவமனையில் நடத்திய ஆய்வின் போது, '18 பேர் இறந்தனர்; நான்கு பேர் உடல்களை உறவினர் வாங்கிச் சென்று விட்டனர்; 14 உடல்கள் மருத்துவமனையில் உள்ளன' என, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. பொது சுகாதாரம் கருதி அந்த, 14 உடல்களும், ராயப்பேட்டை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டன.சென்னை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட டேங்கர்கள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் கேட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்பப்படும். அரசு மருத்துவமனைகளில், தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன; எந்த சிக்கலும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: