திங்கள், 30 நவம்பர், 2015

தமிழக அரசின் கோவனுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது

இடதுசாரிப் பாடகர் கோவனை தமிழகப் போலிஸ் காவலில் எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
கோவன் விடுதலைக்கெதிராக தமிழக அரசின் மனு தள்ளுபடி கோவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிஃபுல்லா மற்றும் யு.யு.லலித் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் இந்த கோரிக்கையில், அவர்களுக்கு சாதகமான ஒன்றையும் காண முடியவில்லை என்று கூறிய அந்த அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மது ஒழிப்புப் பிரச்சாரப் பாடல்களைப் பாடி, தமிழக அரசால் கைது செய்யப்பட்டிருந்த இடதுசாரிப் பிரச்சாரப் பாடகர் கோவன், தன்னை போலீஸ் காவலில் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அதை எதிர்த்தே தமிழக அரசு தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளை மூட வலியுறுத்தியும், மாநில முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தும் தான் சார்ந்திருந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் மூலமாக பாடல்களை கோவன் பாடிவந்தார். ஜாமீனில் அவர் தற்போது வெளிவந்துள்ள சூழலில் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோவன், வரும் டிசம்பர் மாதத்தில் மது ஒழிப்பிற்காக ஒரு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அதற்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துவருவதாகவும் தெரிவித்திருந்தும் குறிப்பிடத்தக்கது. bbc.tamil.com

கருத்துகள் இல்லை: