திங்கள், 12 மே, 2014

தமிழ் பிராமி எழுத்துகளுடன் கி.மு. 2ம் நூற்றாண்டு பானை ஓடு கண்டெடுப்பு

தஞ்சை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் சைலேஷ் கள ஆய்வு செய்தார். அப்போது சங்க காலத்தை சேர்ந்த தமிழி (தமிழ் பிராமி) எழுத்து பொறிக்கப்பட்டுள்ள பானை ஓட்டை கண்டெடுத்தார்.  இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் திருமலை கூறியதாவது:
தமிழ் எழுத்து பொறிப்புகள் பேராசிரியர் சுப்பராயலு என்பவர் அகழாய்வு செய்த போது வல்லம் பகுதியில் முன்பு இதுபோன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பிராமி எழுத்து பொறிப்புள்ள பானை ஓடுகள் இதுவரை காவிரி படுகையில் அதிகமாக கண்டுபிடிக்கவில்லை. எனவே இது முக்கியமான கண்டுபிடிப்பு.  தேனி மாவட்டம் புலிமான் கோம்பை, தாதப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இந்தியாவிலேயே மிக பழமையான தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள் நடுகற்களை தமிழ்ப் பல்கலை. மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பானை ஓடு கி.மு 2ம் நூற்றாண்டை சேர்ந்தது. பழையாறையில் சென்னை பல்கலை.யின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1984ல் அகழாய்வு செய்துள்ளது. அப்போது கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் எழுத்து பொறிப்புள்ள பானைஓடுகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த கண்டுபிடிப்பு மூலம் பழையாறை சங்க காலத்தில் சிறந்த ஊராக இருந்தது என்பதும் அங்குள்ள மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதும் தெளிவாகின்றன. மேலும் பழையாறை சோழர்களின் தலைநகரமாகவும் இருந்துள்ளது.இவ்வாறு திருமலை கூறினார். .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: