சனி, 17 மே, 2014

ஜெயலலிதாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எதிரிகள் பலவீனப்பட்டு விட்டார்கள் !ஆனால் அவருக்கு அவரே பலதடை எதிரியாகக் கூடும்?


நம்ப முடிகிறதா? நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சி அ.தி.மு.க. “தமிழ்நாடு ஒருவேளை உத்தரப் பிரதேசத்தைப் போல பெரிய மாநிலமாக 80 தொகுதிகளுடன் இருந்திருந்தால், நாட்டின் பிரதான எதிர்க் கட்சியே இன்றைக்கு அ.தி.மு.க-தான்” என்கிறார்கள் கட்சிக்காரர்கள். உண்மை. இது வரலாறு. எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் போக்கை முன்னெடுக்கும் முதல் அடியைத் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி எடுத்துவைப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த முறை சந்தேகத்துக்கே இடம் இல்லாமல் முதல் அடியை எடுத்துவைத்தார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அவர் முழங்கத் தொடங்கிய ‘நாற்பதும் நமதே' கோஷம் தமிழக அரசியல் வரலாற்றில், மக்களவைத் தேர்தலைக் கட்சிகள் எதிர்கொள்ளும் வியூகத்தையே உடைத்தெறிந்தது. இதுவரை மக்களவைத் தேர்தல் என்றால், கூட்டணியோடு எதிர்கொள்வதை மட்டுமே வியூகமாகக் கொண்டிருந்த எல்லாக் கட்சிகளையும் தனித்துப் போட்டியிடுவதைப் பற்றியோ, சின்ன அளவிலான கூட்டணியோடு போட்டியிடுவதைப் பற்றியோ அவருடைய முடிவு யோசிக்கவைத்தது.
தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி உருவாக அடித்தளம் அமைத்தவர் அவர்தான். இறுதிக் கட்டத்தில் இடதுசாரிகளை அவர் கழற்றிவிட்டுவிட்டு முழுக்கத் தனித்து இறங்கியபோது, அவருடைய முகாமில் இருப்பவர்களே கொஞ்சம் மிரண்டனர். கருத்துக் கணிப்புகள் பாதிக்குப் பாதியாக வெற்றி பிரியும் என்று கூறின. சிலர் தி.மு.க. மீண்டும் எழுச்சிபெறும் என்றெல்லாம் கூறினார்கள். எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி, தமிழகத்தின் மிகப் பெரிய கட்சி எது என்பதை நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா. இந்தத் தேர்தல் ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு ஒரே கல்லில் மூன்று மாங்காய்களைத் தந்திருக்கும் தேர்தல். 1. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தாண்டி தேசியக் கட்சிகளால் எந்த அலையிலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அகில இந்திய அளவில் நிரூபித்திருக்கிறார். 2. தன்னுடைய பரம வைரியான தி.மு.க-வைக் கூண்டோடு காலி செய்திருக்கிறார். 3. தன்னுடைய புதிய எதிரியான தே.மு.தி.க-வையும் முற்றிலுமாக மூழ்கடித்திருக்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உண்மையான பலத்தையும் பலவீனங்களையும் அவர்களுக்கே காட்டியிருக்கிறார்!
சவால்கள்
மின்வெட்டும், தண்ணீர் பிரச்சினையும். இப்போதே இந்தப் பிரச்சினைகள் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தாலும், மூன்றாண்டுகளைத் தொடும் நிலையிலும், மக்கள் ஜெயலலிதாவுக்கு இன்னும் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். மாநிலத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மெச்சிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இவையெல்லாம் சீரமைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள். சீரமைக்கப்படாவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலில் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
பெரிய கேள்வி
தமிழகத்தின் கடந்த கால வளர்ச்சிக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, மத்திய ஆட்சியில் தொடர்ந்து பங்கேற்று, தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுவந்தது. பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க. கை கோப்பது தமிழகத்துக்கான உரிய திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் பெற உதவும். அதேசமயம், அவர் விரும்பும் மதச்சார்பற்ற பிம்பம் சிதையும். அம்மா என்ன செய்வார்?
இவை நடக்கலாம்
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள், மின் தட்டுப்பாட்டைப் போக்க மின் உற்பத்தித் திட்டங்கள், மேலும் சில வெகுஜனத் திட்டங்கள்.
இவையும் நடக்கலாம்
மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு. தி.மு.க-வுக்கு எதிரான வழக்குகளில் முட்டுக்கட்டைகளை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.
இது நடக்குமா?
மீண்டும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்.
அலைவீச்சு
மாநிலம் முழுவதும் ஒரே அலை. இலையின் அலை. அம்மா அலை. திமுகவின் குடும்ப வாரிசு அரசியலையும் ஊழல்களையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆட்சியின் மீது பெரிய புகார்கள் இல்லாததும் முந்தைய ஆட்சிகளைப் போல ஊழல் குற்றச்சாட்டுகள் எழாமல் பார்த்துக்கொண்டதும் கட்சி ஓட்டுக்குச் சேதாரம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது என்றால், அம்மா வெகுஜனத் திட்டங்கள் ஆட்சிக்கு ஆதரவான மனநிலைக்கு மேலும் உதவின.
எதிர்ப் புயல்
அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் தோற்ற இடங்கள் உண்மையில் சாதியும் மதமும் ஆக்கிரமித்திருக்கும் இடங்கள். ஒரு வகையில் தமிழகம் எதிர் கொள்ளும் புதிய அபாயம் இது.
நண்பர்கள்
தேசிய அளவில் எதிர்க் கட்சிகளில் காங்கிரஸுக்கு அடுத்து பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்திருப்பதால், டெல்லியில் ஜெயலலிதா செல்வாக்கு உயரும். எதிர்க் கட்சிகள் முகாமில் அவர் சாய்வதைத் தடுக்க பா.ஜ.க. சுமுகமான உறவையே மேற்கொள்ளும். நண்பர் மோடியின் நட்பு நெருக்கடியான தருணங்களில் உதவக் கூடும்.
எதிரிகள்
அ.தி.மு.க-வுக்கு வெளியே உள்ள ஜெயலலிதாவின் எதிரிகள் இப்போது பலவீனப்பட்டுவிட்டார்கள். கட்சிக்குள் அனேகமாக அப்படி யாரும் இல்லை. அப்படியென்றால், ஜெயலலிதாவுக்கு யார் எதிரியாகக் கூடும்? ஆம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஜெயலலிதாவுக்கு அவரேதான் எதிரியாகக் கூடும். அவர் எதிர்கொள்ளும் வழக்கு அடுத்து சமாளித்தாக வேண்டிய இன்னொரு எதிரி. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: