![]() |
![]() |
Thangathurai Thayani : கடந்த 23.06.2025 காலை 9.30 மணியளவில் நானும் எனது நண்பியுமாக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு சென்று துணுக்காய் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டோம்.
என் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட நான் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை
ஏனெனில் எல்லோரும் போலவே "உதை விட்டுட்டு பேசாமல் இரு";என்ற ஆணாதிக்கத்திற்கு வளிசமைக்கும் பதிலையே கூறி என் பயணத்தை, இலக்குகளை அடைய இடையூறாய் இருப்பார்கள்
அத்தோடு நாம் அனைவரும் துப்பாக்கி முனையில் எமது கருத்துச் சுதந்திரம் முடக்கி வைக்கப்பட்ட சமுகத்தில் வாழ்ந்தமையுமே காரணம்.
எந்த ஒரு அரசியல் நோக்கமோ பணம் திரட்டவோ இல்லை
என் பயணம்..இது என் உள்ளக்குமுறல் என் வலிகளும் வேதனைகளும் கலந்த பயணம்...பஸ் பயணிக்க ஆரம்பமாகியது
அன்று தான் நான் முதல் தடவையாக வன்னி பிரதேசத்துக்கு செல்கிறேன்.
பஸ்ஸினுள் இடைக்கால பாடல்களோடு என் சிந்தனைகள் அனைத்தும் என் தந்தையை பற்றியதாகவே ஓடிக்கொண்டு இருந்தது...
ஒரு கணம் அடக்க முடியாது கண்களில் இருந்து கண்ணீரும் வந்துவிட்டது.
நான்கு மணித்தியாலங்களின் பின் துணுக்காய் பஸ்நிலையத்தை வந்தடைந்தோம்...
இரண்டு கடைகள் மட்டுமே இருந்தது
அமைதியான சூழல் எந்தப் பக்கம் திரும்புவது என்றே தெரியவில்லை
சன நடமாட்டம் இல்லை இரண்டு மூன்று மனிதர் தான் தெரிகின்றனர்
ஒரு பாதையை நோக்கி இருவரும் நடந்து சென்றோம்
ஒரு 200 மீட்டர் தூரம் செல்லும் போது ஆட்கள் நடமாட்டமின்மையால் ஒரு வகையான பயம் மனதில் ஏற்பட்டது திரும்பி இருவரும் பஸ் நிலையத்தை வந்தடைந்தோம்
அருகிலிருந்த கடையில் விசாரித்தோம் நாம் திரும்பி வந்த பாதையூடாகவே மறுபடி செல்லுமாறு கூறினார்கள்.
சென்றோம் ஒரு மைதானம் இருப்பதை கண்டேன்
அதன் எதிர்ப்புறமாக நான் தேடிச் சென்ற புலிகளின் சித்திரவதை முகாமினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது .
ஆனால் அது பற்றைகளாகவும் ஆட்கள் நடமாட்டமின்றியும் இருந்தமையினாலே மனதிலே ஒரு விதமான பயம் ஏற்பட்டது
அவற்றைக் கடந்து நடந்தோம் அங்கே தொலைவில் ஒரு 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் தண்ணீர் பைவரை சைக்கிளில் வைத்து உருட்டிக் கொண்டு வருவதைக் கண்டோம்
கை அசைத்து மறித்து எமது நிலைப்பாட்டை கூறினோம்.
முதலில் தங்கள் வீட்டுக்கு வாருங்கள் என எம்மை அழைத்துக் கொண்டு சென்றார்.
திரும்பவும் ஒரு 500 மீட்டர் தூரம் நடந்து அவர்களின் வீட்டை சென்றடைந்தோம்
அங்கே அவருடைய வயது முதிர்ந்த மனைவி எமக்கு பிஸ்கட்டும் தேசிக்காய்த் தண்ணியும் வழங்கி உபசரித்து,
பின்னர் அந்த வயோதிபர் நாம் சென்ற காரணத்தைக் கூறியதும் அவர் எம்மை செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைத்தார்
நடந்து கொண்டே அச்சித்திரவதைக் கூடத்தை கண்ணோக்கிப் பார்த்தேன்
சுமார் 16 ஏக்கர் நிலத்தினைக் கொண்ட பாரிய பற்றைகள் நிறைந்த பிரதேசம்.
அந்த வேளையில் நான் அந்த சித்திரவதைக் கூடத்திற்குள் உட் சென்று பார்க் வேண்டும் என்றும் அங்கே ஒரு சிறிய அஞ்சலி செலுத்தவும் விரும்பி உள் நுளைந்தேன்.
மறுபடியும் என் கைகள் கால்கள் செயலிழந்த மாதிரியும் உடல் நடுங்கி மரணபயத்தை உண்டு பண்ணியது. அத்தோடு மதியம் 2.30 மணி வெய்யிலும் அதிகமாக இருந்தது
கொஞ்சநேரம் என்னால் பேசக் கூட வார்த்தைகள் எதுவும் வரவில்லை
ஒரு வகையான அதிர்ச்சி, பயம் ,எடுத்து வைத்த காலடியை முன்னோக்கி வைக்கவும் முடியவில்லை
அதே நேரம் பின்னோக்கி வைக்கவும் கூடாது என்ற மன வைராக்கியத்தோடு அழுதேன் அழுது முடித்தேன்.
எனக்குள்ளே ஒரு பலம், தைரியம், எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நான் தான் பேச வேண்டும்...மெது மெதுவாக முன்னோக்கி சென்றேன்
ஒவ்வொரு பகுதிக்குள்ளும் நுளைந்தேன்.
புலிகள் கடத்திச் சென்றவர்களை மறைத்து வைத்திருந்த கட்டிடத் தொகுதி.
இறுதி யுத்தத்தின் போது புலிகளே பாரிய குண்டுகளை வெடிக்கப் பண்ணி அந்த இடத்தினை தகர்த்துக் கொண்டதாகவும்,
ஆனாலும் தரை நிலம் சிறு உடைசல்களுடன் உள்ளது ,
அந்த இடத்தில் இறுதி யுத்தத்தின் பின் இரண்டு கொட்டகை அமைத்து நெல் களஞ்சியமாக செயற்பட்டு வந்ததாகவும் தற்போது செயற்பாடின்றி பாழடைந்து இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் சித்திரவதைக்கென அமைக்கப்பட்ட. இரும்புகளாலான சிறிய சிறிய சித்திரவதைக் கூடங்கள்,இரும்பினாலான விதவிதமான வடிவமைப்பில் எந்த சிறைச்சாலைகளிலுமல்லாத சித்திரவதை வடிவமைப்பினை அங்கே காணக் கூடிதாக உள்ளது.
இப்போதும் துருப்பிடித்தவாறு உள்ளது
விதவிதமான பதுங்கு குழிகளும் உள்ளது
அந்தப் பிணக் குழிகளிலிருந்து என் தந்தையின் வாசத்தை நுகரக்கூடியமாதிரி ஒரு உணர்வு எனக்கு இருந்திச்சு
அவருடைய கண்ணீர்த் துளிகள் அந்த இடங்களில் விழுந்திருக்கலாம்.
வியர்வையும் கொட்டிருக்கலாம்,ஏன்
புலிகளின் சித்திரவதை நிமித்தம் அவரது இரத்தக் கறைகள் கூட சிந்திருக்கலாம்....
அந்த இடத்தில் எனக்கு ஒன்றன் பின் ஒன்றாக எனக்கும் என் தந்தைக்குமான பாசம், அன்பு, நேசம், அரவணைப்பு, பாதுகாப்பு என்பவற்றை உணரக் கூடியதாக இருந்திச்சு
நான் அவரது நிறத்தை பார்க்க ஆசைப்பட்டேன்,தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டேன்
கட்டி அணைத்து முத்தமிடவும், என் கடந்தகால வலிசுமந்த நாட்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ள ஆவலாயிருந்தேன் ..
கையிலிருந்த தொலைபேசியூடாக புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டேன்
வண்டுகள் பூச்சிகள் குருவிகளின் சத்தங்களை மட்டுமே உணரக் கூடியதாக இருந்திச்சு
முழுமையாக புகைப்படங்களை எடுக்க முடியவில்லை
மயாண வெட்கை பயப் பீதியில் திரும்பி வெளியில் வந்தேன்
ஆனாலும் திருப்தியளிக்கவில்லை
இவற்றை நான் ஒரு காணொளியாக ஏன் எடுக்கக் கூடாது என எண்ணி கையிலிருந்த ஒரு காகிதத்தில் சில விடயங்களைக் குறித்துக் கொண்டு மறுபடியும் உள் நுளைந்தேன்
ஆனாலும் எனக்குள் இருந்த பாதுகாப்பின்மை,ஏதோ ஒரு வகையான மனப்பயத்தினால் முற்றிலும் காணொளியாக்க முடியவில்லை
சிறிய காணொளி ஒன்றைப் பதிவு செய்து கொண்டு புலிகளால் அவ்விடத்தில் என் தந்தையுடன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு எரியூட்டப்பட்ட அனைவருக்குமாக ஒரு சிறிய அஞ்சலியை செலுத்தி அவ்விடத்திலிருந்து விடை பெற்றேன்.
வீடு வந்து சேரும் போது இரவு 7.30 மணி
அந்த நாள் சம்பவத்திலிருந்து என்னை நான் மீட்டுக் கொள்ள மிகவும் கடினமாக இருக்கின்றது
இடையிடையே அழுகிறேன், சோர்வடைகிறேன்,ஆனாலும் என் இறுதி மூச்சிருக்கும்வரை போராடுவேன்
அவதூறுகளிற்கும் இழிசொற்களுக்கும் முடங்கி என் பயணத்தை கைவிடுபவள் நான் இல்லை..
பெண்களைப் பெண்களாக மதிக்கத்தெரியாத ஓரிரு முகப்புத்தகப் புலிகள் (பெண்களும் அடங்கலாக) என்னை ஆபாச வார்த்தை கொண்டு விமர்சிப்பதாக எண்ணி தங்கள் வீட்டுப் பெண்களின் பிறப்புறுப்பினை பொது வெளியில் சித்தரித்துக் காட்டுகிறார்கள்
அதுவும் ஒருவழியில் உங்கள் தலைவனின் வளர்ப்பும் வன்முறையும் தான்.யாராக இருந்தாலும் நேரில் வாருங்கள் பேசுவோம்.
இந்த விடயத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்..மதிப்புக்குரிய
ஜனாதிபதி,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,நீதி அமைச்சர்,மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ்மா அதிபர் அனைவருக்கும் தெரியப்படுத்தி துரித கதியில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்
சம்மந்தப்பட்டவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்,
புலிகளால் பாதிக்கப்பட்ட என் போன்ற சக குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்
மற்றும் சர்வதேச அளவில் இந்த விடயத்தை கொண்டு சென்று துணுக்காயிலும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரச தரப்பினரால் காணாமலாக்கப்பட்டவைக்கும் படுகொலை செய்யப்பட்டவைக்குமாக கோஷமெழுப்பும் சிறு குழுவினர்
புலிகளால் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை இணைத்து போராடுவதில்லை
ஒரு தமிழ் அரசியல் வாதிகள் கூட புலிகள் செய்த கொலைகள் பற்றி பேசுவதில்லை காணாமல் ஆக்கப்பட்டவைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்க முடியுமென்றால்
அதே புலிகளால் காணாமலாக்கப்பட்டவைக்கும் துணுக்காயில் சித்திரவதைக் கூடம் அமைத்து படுகொலைசெய்யப்பட்டவைக்கும் துணுக்காயிலும் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் முடிவிடம் என்றால் ஆரம்பம் துணுக்காய் என்பதே உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக