வியாழன், 22 டிசம்பர், 2011

J பெண் சாமியாருக்கு கொடுத்த 100 c எப்படி 50c ஆகியது?சசி ஜெயா இடியாப்பச் சிக்கல்


நக்கீரனில், "இருவர்-திடீர் பிளவு பின்னணி' என்று போன இதழில் கவர் ஸ்டோரியில் எழுதியிருந்த தகவல் மொத்தமும் உண்மைதான் என்ற அவர்கள், ""யாருடைய தலையீட்டையும் அனுமதிக்கவேண்டாம் என்று மந்திரி களிடம் ஜெ சொன்னதையும், சிறப்புத் திட்ட செயலாக்க அதிகாரி பன்னீர்செல்வம், முதல்வரின் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட தனது ஆதரவு அதிகாரிகள் நீக்கப் பட்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்த சசிகலா, பெங்களூரிலிருந்து திரும்பியதும் கார்டனுக்கு வராமல் சிங்கப்பூர் ஜெயக்குமார் கெஸ்ட் ஹவுஸில் தங்கியதும் உண்மைதான்'' என்றனர். அதுபோலவே, வரவு சம்பந்தப் பட்ட விஷயங்கள் சசிகலா மூலம் நடந்ததெல்லாம் ஜெ.வின் உத்தரவின்பேரில்தான் என்பதும் உண்மைதான்.

ஜெ சொன்னதன் பேரில்தான் மந்திரிகளிடம் துறையின் டெண்டர், கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங் களை சசிகலா பேசினார். அவரது இன்ஸ்ட்ரக்ஷன்படி மந்திரிகளும் அதிகாரிகளிடம் பேசினர். ""இந்த சிஸ்டம் 6 மாதகாலமாக பிரச்சினையில்லாமல் ஓடிக்கொண்டி ருந்தது. சமீபகாலமாக, கார்டனில் ஜெ.வின் சமுதா யத்தைச் சேர்ந்தவர்களின் கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. (கவனிக்க-பெட்டிச் செய்தி). உள்ளே இருந்த அவர்களுக்கும் ஜெ.வுக்கும் வெளி யிலிருந்து ஆலோசனைகளை சொல்லி வந்தவர் சோ. அதே சமுதாயத்தவரான அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனும்கூட சமீபகாலமாக, சசிகலா வகையறாவை கார்டனிலிருந்து
வெளியேற்றுவதுதான் இப்போதைய ஒரே அஜண்டா என்று தனக்கு வேண்டியவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார்'' என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தினர்.





இதையெல்லாம் தாக்குப்பிடித்துதான் சசிகலாவும் அவரது மன்னார்குடி குடும்பத்தினரும் தங்கள் அதிகாரத்தை இழந்துவிடக்கூடாது என்ற கண்ணோட் டத்துடன் செயல்பட்டு வந்துள்ளனர். ஜெ, கொடுத்துள்ள அதிகாரத்தை சசிகலாவும் அவரது தரப்பினரும் தவ றாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற புகார், அண்மைக்காலமாக ஜெ.விடம் அடிக்கடி தெரிவிக்கப்பட்டு வந்தபோதும், ஆரம் பத்தில் அதை அவர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற வழக்கிற்காக சசி கலாவும் அவரது குடும்பத்தினரும் சென்று திரும்பிய பிறகு கிடைத்த தகவல்களைத் தொடர்ந்துதான், ஜெ. வுக்கு சந்தேகம் வந் துள்ளது என் றும் கார்டன் வட்டாரத்தினர் சொல்கிறார்கள்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு சசிகலா வந்ததை நேரடி ரிப்போர்ட் செய்த நக்கீரனில், ஒரே காரில் வந்த இளவரசியிடம் எதுவும் பேசாத சசிகலா, கோர்ட் வாசலில் காத்திருந்த சுதாகரனிடம் ரொம்பவும் கலகலப்பாக பேசினார் என்பதையும், கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் உட்கார்ந் திருந்தபோதும்கூட இளவரசியிடம் பேசாமல் சுதாகரனிடமே பேசிக்கொண்டிருந்தார் என்பதை விரிவாக எழுதியிருந்தோம். பெங்களூருக்கு முதல்வரின் இன்டலிஜென்ஸ் விங்கும் சென்றிருந்தது. சசிகலாவின் நட வடிக்கைகளை செல்போனில் படம் பிடித்து, எம்.எம்.எஸ்ஸாக ஜெ.வுக்கு அனுப்பிவிட் டார்கள் அதிகாரிகள். அத்துடன், பெங்களூரு ஹோட்டலில் சசிகலா தங்கியிருந்தபோது அங்கே நடராஜனும் வந்தார் என்ற தகவலும் ஜெ.வுக்குக் கிடைத்துள்ளது. இதன்பிறகே, சந்தேகத்துடன் பலவிதமான ரகசிய விசா ரணைகளை மேற்கொண்டிருக்கிறார் ஜெ.

அதுபற்றி நம்மிடம் பேசிய கார்டன் தரப்பினர், ""ஜெ.வின் ஒரே கவலை பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குதான். அதுதான் அவருடைய அரசியல் எதிர்காலத்தை நிர்ண யிக்கக்கூடியது. அதில் தன் தலையெழுத்துத் தப்பிப்போய்விடக்கூடாது என்ற சிந்தனை யில்தான் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். பெங்களூருவில் தன் தலையெழுத்தை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் இருக்கக் கூடியவர்கள் எந்தெந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங் களையெல்லாம் திரட்டினார். லிங்காயத்து சமுதாயத்தைச் சார்ந்த பெண் சாமியார் ஒருவர் மூலம், ஆகப்பெரிய 100 அளவுக்கு செலவு செய்து தலையெழுத்தை சாதகமாக்கும் முயற்சிகளும் ஆரம்பமானது. இந்தத் தொகையை அந்த பெண் சாமியாரிடம் சேர்த்துவிடும்படி சசிகலாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தொகை போனபிறகும், ஜெ.வுக்கு சாதகமான நடவடிக்கைகள் எதுவும் வெளிப்படவில்லை. பிடி இறுகிக் கொண்டே தான் போனது.

டென்ஷனாகிவிட்டார் ஜெ. அவர் தரப்பிலிருந்து அந்த பெண் சாமியாரிடம், கேட்டதைக் கொடுத்த பிறகும் ஏன் இப்படி எதிராகவே எல்லாம் நடக்கிறது என்று கேட்க, சம்பந்தப்பட்ட இடத்தில் பணம் மூலமாக எந்த வேலையும் நடக்காது. நீங்க கொடுத்தனுப்பியதை திருப்பி வாங்கிக்குங்க என்று சொல்லி, ஆகப்பெரிய 50ஐ திருப்பிக் கொடுத் திருக்கிறார் பெண்சாமியார். 100 கொடுத்தனுப்பினோமே என்று கார்டன் தரப் பிலிருந்து கேட்கப்பட, இதுதானே எங்களிடம் கொடுக்கப்பட்டது என்று பெண் சாமியார் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.

100ஐ கொடுக்கச் சொன்ன இடத்தில், 50 மட்டுமே போய்ச் சேர்ந் திருக்கிறது என்றதும் கோபமான ஜெ, இதுபற்றி சசிகலாவிடம் கேட்டுள்ளார்.

சசிகலாவோ, "நீங்கள் சொல்லித்தான் இந்த விவரமே எனக்குத் தெரியுது. மீடியேட்டர் விளையாடிவிட்டார்னு நினைக் கிறேன்' என்றிருக்கிறார். இந்த விஷயத்தில் மீடியேட்டராக செயல்பட்டவர், தோட்டத் துறைக்காரர் என்ற பட்டப் பெயரைக் கொண்டவர். 100-க்கு பதில் 50 மட்டுமே வந்தது என்பதை அந்தப் பெண் சொன்னதிலிருந்தே அதிரடி முடிவுகள் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டாராம் ஜெ. போயஸ் கார்டனில் பூகம்பத்தை உண்டாக்க காரணமாக இருந்தவர் அந்தப் பெண்தான்.

தன்னுடைய உடன்பிறவா சகோதரியான சசிகலா மீதான நம்பிக்கையும் ஜெ.வுக்கு குறையத் தொடங்கிவிட்டது. எல்லாப் பொறுப்பு களையும் நம்பிக்கையாக ஒப்படைத்தும் அதிகாரத்தை யும் கட்சியையும் கைப்பற்ற சசிகலா தரப்பினர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது. பெங்களூரு வழக்கில் எதிரான தீர்ப்பு வெளியானால், பதவியை இழக்க நேரிடும். அப்போது, சசிகலா தரப்பு தன் மீது அதிகாரம் செலுத்தத் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது என்ற தகவலும் அவருக்கு அவருடைய சமுதாயத்து ஆலோசகர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜெ. பதவி விலக நேர்ந்தால், வீட்டுவசதித்துறை அமைச்சராக உள்ள வைத்தியலிங்கத்தை முதல்வ ராக்கலாம், அவருடைய ஜாதகம்தான் சரியாக இருக்கிறது என்ற பேச்சு ஏற்கனவே கார்டனில் அடிபட்டதையும் ஜெ நினைவில் வைத்திருந்திருக்கிறார்.

சசிகலாவை சின்னம்மா என்று கார்டனில் அழைத்து வந்தவர்கள்கூட சமீபகாலமாக அம்மா என்றுதான் சொல்லி யிருக்கிறார்கள். தனக்கும் ஜெ.வுக்கும் வேறுபாடு இருக்கக்கூடாது என்று கார்டன் ஆட்களிடம் சசிகலா சொல்லியுள்ளார் என்ற தகவலும் ஜெ காதுக்கு எட்டியுள்ளது. கூடுதலாக பல ரிப்போர்ட்டுகளும் அவருக்கு கிடைத்துள்ளன. இதையடுத்தே மன்னார்குடி தரப்பின் வருவாய் வழிகளை உடனடியாக அடைக்கும் முடிவை எடுத்திருக்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த சுதாகர ரெட்டி மூலம்தான் பெரும்பாலான காண்ட்ராக்ட்டுகள் எடுக்கப்பட்டு வந்தன. இது கூடாது என அமைச்சர்களிடம் ஜெ சொல்லி யிருக்கிறாராம். தமிழகம் முழுவதுமான மணல் காண்ட்ராக்ட் ஆறுமுகச்சாமிக்குக் கொடுக்கப் பட்டிருந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சசிகலா அண்ணன் மகனான மகா தேவன் பொறுப்பில் கொடுக் கும்படி ஆறுமுகச்சாமியிடமே சசிகலா தரப்பு சொல்லியிருந்தது. அதுபோல தி.மு.க பீரியடில் தென் மாவட்டங்களில் மணல் காண்ட்ராக்ட்டுகளை வைத்தி ருந்த படிக்காசு என்பவரிடமும் சில பகுதிகள் ஒப்படைக்கப் பட்டிருந்தன. இதன் மூலம் மன்னார்குடி தரப்புக்கு வரு மானம் கிடைத்து வந்தது.

இதை ஏற்கனவே அறிந்திருந்த ஜெ, தற் போது வருவாயைத் தடுத்துவிட்டார். ஆறு முகச்சாமி நேரடியாகவே எல்லா வற்றையும் டீலிங் செய்யவேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

அத்துடன், ஆறுமுகச்சாமியை மிரட்டி மணல் காண்ட்ராக்ட்டைப் பறித்ததாக சசிகலா தரப்பின் மீது புகார் கொடுக்கச் செய்யப் போவ தாகவும் வேகமாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

நடராஜனின் அண்ணன் சாமி நாதனின் மகனான கோவையில் உள்ள சரவணன் வீட்டில் கடந்த வாரம் ரெய்டு நடந்துள்ளது. இதுபற்றி நடராஜன் தரப்பிடமே அப்போதே அவரது ஆதரவாளர்கள் வருத்தப் பட்டுள்ளனர். அதற்கு, 20-ந் தேதி வரை எதுவும் பேசுவதாக இல்லை என்று பதில் வந்திருக்கிறது. 21-ந் தேதி சனிப்பெயர்ச்சி என்பதால் அதன்பிறகு நிலைமைகள் சரியாகும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், 19-ந் தேதியே நிலைமை வேறுமாதிரி யாகிவிட்டது.

சசிகலா உறவினர்களிடம் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் சிலர் பேரம் பேசி, தங்கள் மீது வழக்கு எதுவும் வராமல் பார்த்துக்கொள்வதாகவும் இதற்காக பெருந்தொகை தரப் பட்டுள்ளதாகவும் ஜெ.வின் கவனத் திற்குத் தகவல் கொண்டு போகப்பட, இதுவும் ஜெ.வை கோபப்படுத்தி யுள்ளதாம். அவரது உத்தரவின்படி கடந்த ஒருவாரமாக டிஸ்டில்லரிஸ், துறை வாரியான டெண்டர்-காண்ட் ராக்ட்டுகள், பஸ்கட்டணத்தை உயர்த்தியதற்காக தனியார் பஸ் முதலாளிகளின் தொடர் கவனிப்பு இதையெல்லாம் கட்சியின் பொரு ளாளரிடம் கொடுத்து, கட்சி நிதியாகச் சேர்க்கப்பட்டு வருகிறது'' என்கிறார்கள் கார்டன் தரப்பினர்.

கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த சசிகலா, கார்டனுக்கு வந்தபோது என்ன நடந்தது என்று அவர்களிடம் கேட்டோம். ""ஜெ.வும் சசிகலாவும் சுமார் 4 மணி நேரம் பேசினார்கள். இது வழக்கமான பேச்சாக இல்லை. விசாரணை போலத்தான் இருந்தது'' என்றனர். கார்டனிலிருந்து வெளி யேற்றப்பட்ட சசிகலா தனது அக்கா மகன் பாஸ்கரன் வீட்டில் தங்கியுள்ளார்.

உடன்பிறவா சகோ தரியாக இருந்த சசி கலாவையே கட்சியிலிருந்து நீக்கி, கார்டனிலிருந்து வெளியேற்றிய ஜெ, சசி கலாவின் அண்ணியான இளவரசி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் கார்டனில்தான் உள்ளார். சிறுதாவூர் பங்களா உள்பட பல சொத்துகள் இளவரசியின் பெயரில்தான் உள்ளன. கார்டனில் இருந்தபோதே, சசிகலாவுக்கும் இளவரசிக்கும் நாத்தனார்-அண்ணி என்ற பனிப்போர் நடந்து கொண்டே இருந்தது.

அதனால்தான், பெங்களூரு கோர்ட்டுக்கு ஒரே காரில் போனபோதும் இளவரசியிடம் சசிகலா பேசவில்லை. எதிரிக்கு எதிரி தனக்குத் தோழி என்ற முறையில் இளவரசியை கார்டனில் அனுமதித்துள்ள ஜெ, இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத் தின் மத்திய மாவட்டங்களில் அ.தி.மு.க பொறுப்பாளர்களை நியமிப்பதில் பெரும்பங்கு வகித்தவர் கலியபெருமாள். இவருக்கும் சசிகலாவுக்கும் மோதல்கள் அதிகம்'' என்கிறார்கள் மன்னார்குடி தரப்பினர்.

ஏற்கனவே ஜெ சமுதாயத்து ஆட்களின் கை கார்டனில் ஓங்கி வந்த வேளையில், அவருடைய அண்ணன் குடும்பத்தாரும் தற்போது நெருங்கி வந்துள்ளனர். ஜெ.வின் அண்ணன் ஜெயக்குமார் இறந்துவிட்டார். அவரது மகன் தீபக்கும் மகள் தீபாவும் அடிக்கடி ஜெ.விடம் பேசி வருகிறார்கள். மைசூரில் உள்ள ஜெ.வின் குலதெய்வக் கோயிலுக்கு திங்களன்று சென்ற தீபக், அங்கே சாமி கும்பிட்டுவிட்டு திருச்சிக்கு சென்றார். அங்குள்ள சிங்காரத்தோப்பில்தான் அவரது அம்மா குடும்பத்தின் குலதெய்வக் கோயில் உள்ளது. அங்கும் வழிபட்டார்.

கார்டனின் நிலைமைகளும் நபர்களும் மாறியுள்ள நிலையில், கோட்டையிலும் இதன் பிரதிபலிப்புகள் தெரிகின்றன. தற்போது எம்.எல்.ஏவாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சசிகலா மூலமாக சீட் வாங்கி ஜெயித்தவர்கள்தான். அதுபோல, மந்திரிகளில் பலரும் சசிகலாவின் சிபாரிசில் வந்தவர்கள். ஜெ.வின் அறிக்கை வந்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், தற்போது என்ன பேசினாலும் தங்களுடைய பதவிக்கு ஆபத்தாகிவிடும் என செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். அதிகாரிகள் மட்டத்திலும், இனி நடைமுறைகளை எப்படி மேற்கொள்வது என்ற குழப்பம் இருக்கிறது.

மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், மந்திரிகளின் பி.ஏ.க்கள், உயர்பொறுப்பில் உள்ள அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் உள்பட எல்லா மட்டங்களிலும் சசிகலா தரப்பின் சிபாரிசினால் வந்தவர்கள் யார் என்ற பட்டியல் வேகவேகமாக எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை ஜெ தொடர்வார் என்றே கோட்டை வட்டாரம் நினைக்கிறது.

நீக்கப்பட்டுள்ள சசிகலா குடும் பத்தினரின் முக்கிய தலையான எம்.நடராஜனைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் தரவில்லை. அவரது வட்டாரத்தில் பேசியபோது, "ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்காக எவ்வளவோ கஷ்டப் பட்டோம். அரசியலை விட்டு விலகுவ தாக அவர் முடிவெடுத்த ஒவ்வொரு முறையும் அவருக்கு நம்பிக்கையளித்து, மீண்டும் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர துணை நின்றோம். நடந்து முடிந்த தேர்தலில்கூட கூட்டணியை வலிமைப்படுத்தும் வகையில் சின்னச் சின்ன அமைப்புகளைக்கூட விட்டு விடாமல் ஒருங் கிணைத்தோம். அதற்கெல்லாம் சேர்த்துதான் இப் போது எங்க ளுக்குப் பரிசு கொடுத்திருக் கிறார். திடீர்னு அவர் பக்கத்தில் வந்துள்ள புது ஆட்களின் அட் வைஸ்படி செயல்படு கிறார். எங்கள் மேலே வழக்குப் போடப் போவ தாகக்கூட செய்தி வரு கிறது. எதையும் எதிர் கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்'' என் கிறார்கள் எதிர்பாராத தாக்குதலிலிருந்து மீள முடியாத குரலில்.

மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வட்டாரத் தில் விசாரித்த போது, ""ஜெ. சொல்லித்தான் எல்லா கொடுக்கல் வாங்கலும் நடந்தது. மக்களிடம் இமேஜ் சரிந்துள்ள நிலையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுபோல நடவடிக்கை எடுத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்த நட வடிக்கை எல்லாம் உண்மையா, நாடகமா என்றுகூட எங்களால் முடிவு செய்ய முடியலை. என்ன நடக்கு துன்னே தெரியலை'' என்கிறார்கள் பரிதாபத்திற்குரிய மாண்புமிகுக்கள். எம்.நடராஜன் வெளிநாடு செல்லும் திட்டத்தில் இருந்திருக்கிறார். தன் மீது வழக்கு வரும் என்பதால் இந்த திட்டத்தை விரைவுபடுத்தும் யோச னையில் இருக்க, ஏர்போர்ட்டுகளில் கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளது போலீஸ். மேலிடத்திலிருந்து எந்த உத்தரவும் வரலாம் என்பதால்தான் இந்த கண்காணிப்பாம்.
சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் மீது வழக்கு போடப்படுமா என்பதைப் பொறுத்தே ஜெ.வின் நடவடிக்கைகளின் வீரியம் தெரியவரும் என்கிற கார்டன் தரப்பினர், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஜெ.வின் நடவடிக்கை உருவாக்கிவிட்டது என்கிறார்கள். இன்னும் பல பரபரப்புகளும் அதிரடிகளும் இருதரப்பிலிருந்தும் தொடரும் என்பதே தற்போதைய நிலவரம்.

-உமர் முக்தார்

கருத்துகள் இல்லை: