சனி, 24 டிசம்பர், 2011

பெரியார் நினைவுநாள் - 24 டிசம்பர் 2011

பெரியார் : ‘காங்கிரஸை ஒழிப்பதே எனது வேலை!’


ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரிடமும் தொடர்பு இருந்தது. குறிப்பாக, சேலம் நகராட்சி மன்றத் தலைவராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), வரதராஜுலு நாயுடு போன்ற காங்கிரஸ்காரர்களுடன் நல்ல நட்பு இருந்தது. ஈரோடு வட்டார மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றுள்ள ராமசாமியை எப்படியாவது காங்கிரஸ் கட்சியில் சேர்த்துவிடவேண்டும் என்பது ராஜாஜியின் விருப்பம். அதற்கான முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டுவந்தார்.

ராமசாமிக்கு அப்போதுதான் அரசியல் ஆசை முளை விட்டிருந்தது. காந்தி மீது ஆர்வம். காந்தியின் கொள்கைகள் மீது ஆர்வம். ஆனாலும் நேரடியாக அரசியலில் இறங்க லேசான தயக்கம். ஒருநாள் ஈரோடு ராமசாமியைச் சந்திப்பதற்காக வரதராஜுலு நாயுடு ஈரோட்டுக்கு வந்தார். தான் நடத்திக் கொண்டிருக்கும் வார இதழுக்குக் கொஞ்சம் சந்தா பிடித்துத்தர வேண்டும் என்பதுதான் நாயுடுவின் கோரிக்கை. ஆகட்டும் என்று சொல்லி அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களிடம் சொல்லி சந்தா பிடித்துக் கொடுத்தார் ராமசாமி.
நீதிக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களால் உருவாக்கப்பட்ட
சென்னை மாகாணச் சங்கத்தின் துணைத்தலைவர்களுள் ஒருவராக ஈரோடு ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் காங்கிரஸ் கட்சிக்குள் ராமசாமியை இழுப்பதற்கான முதல்படி. பிறகு, காங்கிரஸ் கட்சியில் முழுமையாக ஐக்கியமாகிவிட்டார் ராமசாமி.
0
21 நவம்பர் 1925. சென்னை மாகாண காங்கிரஸ் மாநாடு காஞ்சிபுரத்தில் கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வி. கலியாண சுந்தர முதலியார். அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார் ஈ.வெ.ரா.
தேசிய முன்னேற்றத்துக்கு இந்து சமூகத்தாருக்குள் பற்பல சாதியாருக்குள் பரஸ்பர நம்பிக்கையும் துவேஷமின்மையும் ஏற்பட வேண்டுமாகையால் ராஜ்ய சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணர் அல்லாதார், தீண்டாதார் எனக் கருதப்படும் இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடுக்கு ஏற்ப தங்கள் தங்கள் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை ஏற்படுத்தவேண்டும்.
வகுப்புவாரித் தீர்மானத்தைக் காங்கிரஸ் மாநாடு ஒன்றில் ஈ.வெ.ரா கொண்டுவருவது இது முதன்முறையல்ல. 1920ல் திருநெல்வேலி காங்கிரஸ் மாகாண மாநாட்டில் கொண்டுவந்திருந்தார். அப்போது தீர்மானத்துக்கு ஆதரவாக விஷய ஆலோசனைக் குழுவில் ஆறுவாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் பொதுநலனுக்குக் கேடு பயக்கும் தீர்மானம் என்று சொல்லி அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய எஸ். சீனிவாச அய்யங்கார் அந்தத் தீர்மானத்துக்கு அனுமதி மறுத்துவிட்டார்.
1921ல் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநாட்டில் தலைமை தாங்கிய ராஜாஜி, “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கொள்கை அளவில் வைத்துக் கொள்வோம், தீர்மானம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். 1922ல் திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் தீர்மானம் கொண்டுவந்தார் ஈ.வெ.ரா. அதிலும் நிராகரிக்கப்படவே, சாதி வேற்றுமையை வலியுறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்தையும் ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று ஆவேசப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டில் தகராறு வெடித்தது.
அதற்கடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் கொண்டுவரப்பட்டு நிராகரிக்கப்பட்டது. 1924ல் திருவண்ணாமலையில் மாநாடு கூடியது. தலைமை வகித்தவர் ஈ.வெ.ரா. ஆனால் அந்த மாநாட்டில் எஸ். சீனிவாச அய்யங்கார் உள்ளிட்ட தலைவர்கள் ஈ.வெ.ராவுக்கு எதிராகப் பெரிய அளவில் உறுப்பினர்களைத் திரட்டியிருந்ததால் வகுப்புவாரித் தீர்மானம் நிறைவேறவில்லை.
விரக்தியின் உச்சத்துக்குச் சென்றார் ஈ.வெ.ரா.
காங்கிரஸ்வாதியாக இருந்த டி.எம். நாயர் திடீரென்று காங்கிரஸை விட்டுவிலகிப் புதியதாக நீதிக்கட்சியைத் தோற்றுவிக்க எவையெவை காரணங்களாக இருந்துவந்தனவோ அவையெல்லாம் இன்றும் நின்று நிலவுகின்றனவா? இல்லையா? என்பதை அன்பர்கள் கவனிக்கவேண்டும்… தமிழ்நாட்டுக் காங்கிரஸில் செயலாளராகவும் தலைவராகவும் இருந்துபெற்ற அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் நான் இங்கே இதனை இவ்வளவு அழுத்தந்திருந்தமாகக் கூறுகிறேன்.
இத்தனைத் தோல்விகளுக்குப் பிறகும் 1925ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் வகுப்புவாரித் தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தார் ஈ.வெ.ரா. எத்தனைக் கடுமையான உழைப்பைக் கோரினாலும் சரி, வகுப்புவாரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டே தீரவேண்டும் என்பதில் ஈ.வெ.ரா உறுதியாக இருந்தார். இருபத்தைந்து பிரதிநிதிகளின் கையெழுத்தைப் பெற்று மாநாட்டில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
மாநாட்டுத் தலைவர் வி. கலியாண சுந்தர முதலியார் வகுப்புவாரித் தீர்மானத்தை ‘ஒழுங்கற்ற தீர்மானம்’ என்று சொல்லி அனுமதிக்க மறுத்துவிட்டார். ஆவேசம் வந்துவிட்டது ஈ.வெ.ராவுக்கு.
காங்கிரஸ் கட்சி பார்ப்பனமயமாகிவிட்டது. இங்கே பார்ப்பனத் தலைவர்களின் ஆதிக்கம் வலுத்துவிட்டது. காங்கிரஸில் தொடர்ந்து இருப்பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. கலியாண சுந்தர முதலியார் அவர்களே, நான் வெளியேறுகிறேன். காங்கிரஸால் பிராமணர் அல்லாதார் நன்மைபெற முடியாது. காங்கிரஸை ஒழிப்பதே இனி எனது வேலை.
காங்கிரஸ் வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டார் ஈ.வெ.ரா. ஆனால் கதரையும் தீண்டாமை ஒழிப்பையும் விட்டுவிடும் எண்ணம் அவருக்கு இல்லை. தொடர்ந்து போராடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மாநாட்டில் ஆவேசம் பொங்கப் பேசிவிட்டு வந்த ஈ.வெ.ராவைக் கட்சியில் இருந்து விலக்கிவைப்பதாக எந்தவொரு முடிவையும் காங்கிரஸ் தலைமை எடுக்கவில்லை. ஈ.வெ.ராவும் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவிக்கவில்லை. காங்கிரஸ் மீதான அதிருப்தி மட்டும் அவருடைய மனத்துக்குள் குடிகொண்டிருந்தது.
29 ஆகஸ்டு 1926 அன்று கூடிய சென்னை மாகாண காங்கிரஸ் குழுவின் கூட்டத்தின் புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
‘காங்கிரஸ் கட்சியின் பதினைந்தாவது விதியின்படி ஸ்ரீமான் நாயக்கர் (ஈ.வெ.ராமசாமி நாயக்கர்) குழு அங்கத்தினராக இருக்க முடியாததால் அவர் குழுவில் இருந்து விலகினதாகக் கருதப்படுகிறார். அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்படுவார்!’
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாகப் பதில் சொன்னார் ஈ.வெ.ரா.
‘என்னைக் காங்கிரசில் இருந்து எவரும் வெளியேற்ற முடியாது. நானாகக் காங்கிரஸை விட்டு வெளியேறினால்தான் உண்டு!’
0
ஆர். முத்துக்குமார்
ஆசிரியர், திராவிட இயக்க வரலாறு

கருத்துகள் இல்லை: