செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஜெயா டிவியை சசி குடும்பத்திடமிருந்து மீட்க ஜெயலலிதா திட்டம்


சென்னை: அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெயலலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்தடுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா லைம்லைட்டுக்கு வந்து முதல் முறையாக முதல்வரான போது அப்போது திமுகவுக்கு பெரும் பக்கபலமாக இருந்தது சன் டிவிதான். இதை உணர்ந்த ஜெயலலிதா அதிமுகவுக்கும் ஒரு டிவி வேண்டும் என்பதற்காக சசி குடும்பத்தார் மூலம் தொடங்கிய டிவிதான் ஜெஜெ டிவி. பின்னர் இது ஜெயா டிவியாக உருமாறியது.
ஜெயா டிவியின் நிர்வாகத்தை ஆரம்பத்திலிருந்தே சசிகலா குடும்பத்தினர்தான் கவனித்து வருகின்றனர். ஜெயா டிவியின் அனைத்து நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் அனுராதா. இவர் டிடிவி தினகரனின் மனைவி ஆவார்.

இந்த டிவியின் கணக்கு வழக்கு, நிர்வாகம், என்ன செய்கிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது என்கிறார்கள். தனது பெயரில் டிவி வருகிறது, அதில் அதிமுக செய்திகளையும் காட்டுகிறார்கள் என்ற அளவுக்குத்தான் ஜெயலலிதாவுக்கும், இந்த டிவிக்குமான தொடர்பு என்றும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு சசி குடும்பத்தாரின் நாட்டாமை ஜெயா டிவியில் அதிகம் என்பது அதிமுகவினரின் கருத்தாக உள்ளது.

தொடங்கி 14 ஆண்டுகளாகியும் இதுவரை மக்கள் மத்தியில் ஜெயா டிவிக்கு என்றொரு நல்ல பாப்புலாரிட்டி இல்லை. மேலும் அதிமுகவினர் மத்தியிலும் கூட இந்த டிவியால் பெரிய அளவில் லாபம் இல்லை என்றும் கூறப்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு கோக்குமாக்கான நிர்வாகம், சரியில்லாத நிகழச்சிகள், நடுநிலையுடன் கூடிய நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாதது, ஒளிபரப்பில் தரமில்லாதது என ஏகப்பட்ட குறைகள் ஜெயா டிவியில் உள்ளன.

சன் டிவிக்கு இதுவரை ஒரு நொடி கூட கடுமையான போட்டியையோ, பீதியையோ எழுப்பியதில்லை ஜெயா டிவி என்பதிலிருந்தே அந்த டிவியின் தொழில்துறை தரத்தைப் புரிந்து கொள்ளலாம். ஜெயா டிவி இப்படி பொலிவிழந்து கிடக்க முக்கியக் காரணமே சசி கலா குடும்பத்தார் அதை தங்களுக்கு சாதகமான ஒரு பணம் கறக்கும் கருவியாக மட்டுமே பார்த்து நடத்தி வந்ததுதான் என்கிறார்கள் அதிமுகவினர்.

மேலும் ஜெயா டிவியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சசி குடும்பத்துடன் கை கோர்த்துக் கொண்டு பெருமளவில் விளையாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அனுராதவும், ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகி ஒருவரும் இணைந்து தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள்.

இதேபோல அதன் செய்திப் பிரிவிலும் கூட ஜெயலலிதா குறித்த செய்திகளை பெருமளவில் குழப்பவே ஒரு தரப்பு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாம். அதாவது ஜெயலலிதா தொடர்பான செய்திகளை குழப்பமாகவே காட்டி மக்களைக் குழப்பி, ஜெயலலிதாவுக்கு மோசமான இமேஜை உருவாக்குவது என்ற சசி குருப்பீன் அஜென்டாவை இவர்கள் நீக்கமற நிறைவேற்றி வருகிறார்களாம்.

இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுடன் நடந்து வரும் ஜெயா டிவி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, தரமான டிவியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: