சனி, 24 டிசம்பர், 2011

சசிகலா அன்டு கோ வீடுகளில் ரெயிடு! ஆவணங்களும், பெட்டிகளும் சிக்கின!!

சசிகலா சின்டிகேட்டை வெளியேற்றியதுடன் ‘தி என்ட்’ கார்டு போடப்பட்டு விட்டது என்று அவர்களில் யாராவது நினைத்தாலும் நினைத்திருக்கலாம். ஆனால் நடப்பது அப்படியல்ல. சசிகலா வெளியேற்றம் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இன்றுவரை, குறைந்தபட்சம் 14 இடங்களில் அதிகாரபூர்வமற்ற ரெயிடு நடைபெற்றிருக்கிறது.
நடைபெற்றது எந்த அரசு துறையில் இருந்தோ, காவல்துறையில் இருந்தோ வழமையான பார்மாலிட்டிகளைப் பின்பற்றிச் செய்யப்பட்ட ரெயிடு அல்ல என்பதால், விஷயம் மீடியாக்களில் வெளியாகவில்லை. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரின் 14 இல்லங்களில் ரெயிடு நடைபெற்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன.

வேறு இடங்களிலும் ரெயிடு நடைபெற்றிருக்கலாம் என்கிறார்கள். ஆனால், உறுதியான தகவல் ஏதும் கிடையாது.
நாம் குறிப்பிடும் ரெயிடுகளை நடத்திக் கொடுத்தவர்கள் யார் என்று குறிப்பிட்டால் சில சிக்கல்கள் எழலாம் என்பதால், அந்த விபரங்களை விட்டுவிடலாம். ஆனால், ஒரு விஷயத்தை மாத்திரம் சொல்லி விடலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பப்பட்ட 4-5 ஆட்கள் அடங்கிய குழுக்களில், அட்லீஸ்ட் ஒருவராவது, ரெயிடு நடவடிக்கையை தொழில் ரீதியாக செய்துவரும் அதிகாரியாக இருந்தார்.
ஆனால் குறிப்பிட்ட அதிகாரிகளின் துறைகளில் இவர்கள் அந்த நேரத்தில் வேறு ஏதாவது பணியில் இருந்ததாக ரெக்கார்டு இருக்கும்! நாளைக்கே நீதிமன்றம் சென்றாலும், எந்தக் கோர்ட்டிலும் வழக்கு நிற்காது!
ரெயிடு நடைபெற்ற 14 இடங்களில் (11 வீடுகள், 3 அலுவலகங்கள்) பெரும்பாலான இடங்களில் ஆவணங்கள்தான் எடுக்கப்பட்டன என்று தெரிகின்றது. இரு வீடுகளில் இருந்து மாத்திரம் சில பெட்டிகள் ஏற்றப்பட்டன. பெட்டிகளுக்குள் என்ன இருந்தன என்பது தெரியவில்லை. ஆவணங்கள் அநேகமாக அரசுடன் தொடர்புடைய ஆவணங்களாக இருக்கும் என்று ஊகிக்கலாம்.
அவற்றை வெளியே விட்டு வைப்பது, நாளைக்கே வேறு சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதற்காக அவை அகற்றப்பட்டிருக்கலாம்.
கார்டன் வட்டாரங்களுடன் பரிச்சயமுடைய ஒருவரிடம் இது தொடர்பாக கேட்டபோது, அந்தக் குடும்பத்தினர் சேர்த்த சொத்துக்களில் கை வைக்கும் நோக்கம் எதுவும் இந்த ரெயிடின்போது கிடையாது என்றார். இது முற்று முழுதாக இவர்கள் சில அரசு துறைகளில் செய்த திருவிளையாடல்களுடன் தொடர்பு உடைய விவகாரம். என்றும் அவர் கூறினார்.
ஆச்சரியம் என்னவென்றால், வாரண்டு கிடையாது, போலீஸ் கிடையாது, மாஜிஸ்ட்ரேட் உத்தரவு கிடையாது என்ற விதத்தில் நடத்தப்பட்ட இந்த ரெயிடுகளின்போது, சம்மந்தப்பட்ட பார்ட்டிகளிடம் இருந்து எதிர்ப்பும் கிடையாது! யாரும் மூச்சுக்கூட காட்டாமல், கேட்ட இடமெல்லாம் திறந்து காட்டியிருக்கிறார்கள். அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களையும் ஆட்சேபணை ஏதும் இல்லாமல் கொண்டுபோக விட்டிருக்கிறார்கள்.
எதிர்த்தால் என்னாகும் என்பது வேறு யாருக்கு தெரிகிறதோ இல்லையோ, இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் அல்லவா?

www.viruvirupu.com-சென்னையிலிருந்து கலியபெருமாள், மற்றும் வேறு சில சோர்ஸ் குறிப்புகளுடன், ரிஷி

கருத்துகள் இல்லை: