வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மெட்ரிகுலேஷன் என்ற பெயரை நீக்க மாட்டோம்- மெட்ரிக் பள்ளிகள் பிடிவாதம்

சென்னை: மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டன் என்ற பெயர்களை விட்டுத் தர மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடருவோம் என்று தமிழ்நாடு நர்சரி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தரமற்ற சமச்சீர் கல்வித் திட்டத்தைத்தான் நாங்கள் எதிர்த்து வந்தோம். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம்.

அதேசமயம், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தனியாரிடமே சமச்சீர் கல்வி புத்தகங்களை வாங்குவோம். இதுதொடர்பாக ஏற்கனவே அரசு அனுமதித்துள்ளது. தமிழ் புத்தகங்களை மட்டும் அரசிடமிருந்து பெறுவோம்.

எங்களது பள்ளிகளில் மெட்ரிகுலேஷன், ஓரியண்டன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற பெயர்களை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அவைதான் எங்களது உயிர்நாடி. அவற்றை விட மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நாங்கள் வழக்கு தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: