புலிகளின் தேவைகளுக்கு ஏற்ப TNA செயற்படுகிறது : பிரபா கணேசன்
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு தேவையான வகையில் செயற்படுகிறதே தவிர, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தேவைக்கு அமைய அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு காலகெடு விதித்துள்ளது. தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் காலகெடு விதித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் பிரபா கணேசன் குறிப்பிட்டுள்ளார்.வடபகுதி மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவே அங்குள்ள மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். மக்கள் வழங்கிய ஆணையை பெற்றுக்கொண்டு, கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளுக்கு தேவையான வகையில் செயற்படுகின்றனர். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை பிரச்சினையை தீர்க்க வேண்டும். வேறு எங்கும் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.
சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சரியான நேரம் மற்றும் சரியான இடம் எது என்பதை தான் சம்பந்தனிடம் கேட்க விரும்புவதாகவும் இவர்களின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாகவும் கூட்டமைப்பினர் நாட்டு மக்களின் குரலை பிரதிபலிக்கவில்லை எனவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
30 வருடகால யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்தனர். அவர்கள் மீண்டும் துயரங்களை அனுபவிக்க தேவையில்லை. தமிழ் பிள்ளைகளை கல்வியிலும், சமூகத்திலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வர நாம் பாடுபட வேண்டும். சம்பந்தன் போன்றவர்கள் மக்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு கொண்டு செல்லவே முயற்சிக்கின்றனர்.
தமிழ் இளைஞர்களுக்கு பணிகளை முன்னெடுக்க இடமளியுங்கள், நாட்டை முன்னேற்ற தேவையான பங்களிப்புகளை வழங்கக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நாம் இலங்கையில் உள்ள தமிழர்கள் குறித்து சிந்திக்க வேண்டுமேயன்றி, புலம்பெயர் தமிழர்களை பற்றிய அல்ல எனவும் பிரபா கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக