வியாழன், 11 ஆகஸ்ட், 2011

புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு

சென்னை: சமீப காலமாக எழுந்து நின்று ஆடிய நில மோசடி தொடர்பான விஷயங்கள் பழமையாகிப்போச்சு. தற்போது தமிழகத்தில் மறைமுகமாக நடந்து வந்த சூதாட்டம் குற்றம் வெளி வரத்துவங்கியிருக்கிறது. இதுதொடர்பாக பலர் பல லட்சங்களை இழந்ததுடன், தங்களுடைய நகைகள் மற்றும் கார்களை இழந்த சோக கதையும் நடந்திருக்கிறது.


பழங்காலத்தில் நடந்த சூதாட்டத்தினால் பாண்டவர்கள் மனைவியை இழந்த கதை கூட உண்டு. இதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளால் குறையத்துவங்கினாலும், வயல்வெளிகளிலும், கோயில் பிரகாரங்களிலும், வேலைவெட்டி இல்லாதவர்கள், பணத்தை என்ன செய்வது என அறியாதவர்கள் இது போன்று சீட்டாட்டம், சொக்கட்டான் விளையாட்டு, வை ராஜா வை, ரம்மி, என பல வழிகளில் சூதாடி பணத்தை இழந்தனர். பணக்காரர்கள் மத்தியில் இந்த ஆட்டம் கிளப் என்ற போர்வையில் சூதாட்டம் நடக்கிறது என்ற தகவலை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தென் சென்னையில் 21 கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 லட்சம் வரை பறிக்கப்பட்டுள்ளது.


திருமங்கலம் கோயில் மரத்தடியில் சூதாட்டம்: திருமங்கலம் ராஜபாளையம் சங்கையன் கோயில் மரத்தடியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம் வருமாறு: குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து சென்ற போது மரத்தடியில் விளையாடுவது தெரிந்தது. இவர்களை பிடித்து விசாரித்ததில் கையில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில். முரளி கிருஷ்ணன்(29), ராஜா (40) , மோகன்ராஜ் ( 20 ) , ஜெயச்சந்திரன் ( 47 ) என்றும் நால்வரும் விருதுநகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 22 லட்சம் ரொக்கப்பணமும், 76 பவுன் தங்கநகையும், பொலிரோ என்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


முதலில் போனில் அழைப்பு வரும்: நீங்கள் பணம் சம்பாதிக்க ஆசையா என்று மனம் குளிர, நெகிழ பேசும் குரல் வரும். பின்னர் எங்கு வரவேண்டும் என்ன சட்ட திட்டம் என்று விளக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஆட்டம் துவங்கும். இதில் மயங்கி பலர் பல லட்சம் , நகை, நிலப்பத்திரம் என இழந்துள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விவரத்தை போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் இது போன்ற சோதனை நடக்கவிருக்கிறது. மேலும் பலர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: