சனி, 13 ஆகஸ்ட், 2011

த இக்கொனமிக் டைம்ஸ்’ இராணுவபலம், அரசியல் அதிகாரம் நாட்டின் இறைமையை பாதுகாத்தது


இராணுவபலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஏககாலத்தில் பயன்படுத்தி இலங்கை தன்னுடைய இறைமையை பாதுகாத்து பொருளாதார ரீதியில் இன்று வளர்ச்சியடைந்துவருவது பாராட்டுக்குரிய சாதனை என்று ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ சஞ்சிகை தெரிவித்துள்ளது.21வது நூற்றாண்டில் முதற்தடவையாக இலங்கை இராணுவம் உலகில் மிகவும் படுபயங்கரமான எல்.ரி.ரி.ஈ. போராளிகளை தோற்கடிக்கும் சாதனையைப் புரிந்ததை ஒரு சிறந்த அடித்தளமாக வைத்து அந்நாட்டின் பொருளாதாரம் இன்று 8 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று அந்த சஞ்சிகை மேலும் தெரிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவிட்டு இந்த ஆக்கபூர்வமான யுத்தத்தில் வெற்றிகண்டிருப்பதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராளை மேற்கோள்காட்டி இச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.இலங்கையின் இந்த சாதனைக்கு எதிர்மாறாக ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க அரசாங்கம் ஏறத்தாழ ஒரு ரில்லியன் டொலர்களை செலவிட்டும் இன்னும் வெற்றிபெற முடியாத நிலையில் இருந்து வருகிறது என்று சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்தால் நாடு வலுவிழந்துவிடும் என்ற எண்ணத்தோடு எல்.ரி.ரி.ஈ. யினர் யுத்த தந்திரங்களை கையாண்டு கொழும்பில் மத்திய வங்கிக் கட்டடம், சர்வதேச விமான நிலையம், ஹோட்டல்கள் ஆகியவற்றின் மீது பெரும் சேதமிழைக்கும் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களை மேற்கொண்டு இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை அழித்துவிட்டது என்றும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இத்தகைய அழிவுகள் மூலம் வருடாந்த தேசிய பொருளாதாரம் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்த போதிலும் காலப்போக்கில் யுத்தம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் நடைபெற்ற காரணத்தினால் தேசிய பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சியடைந்தது என்று இந்த சஞ்சிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கையில் அதிகாரத்தில் வீற்றிருந்த அரசாங்கங்கள் அதிக பணச்செலவு ஏற்படும், அரசியல் ரீதியில் பிரச்சினைகள் எழும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை சீர்குலைந்துவிடும் போன்ற காரணங்களினால் எல்.ரி.ரி.ஈ.யினை இராணுவ ரீதியில் தோற்கடிக்கத் தயங்கின. என்றாலும் இந்த அரசாங்கம் இத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ.யினை அடக்குவதில் வெற்றிகண்டது என்றும் சஞ்சிகை பாராட்டியுள்ளது.
இன்று யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் சாதகமான சமிக்ஞைகள் தெட்டத்தெளிவாகத் தென்படுகின்றன. நாட்டைவிட்டு வெளியேறிய கல்விமான்கள் மீண்டும் நாடு திரும்புகிறார்கள். பணவீக்க விகிதம் ஒற்றையிலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மையின் விகிதாசாரம் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது. போஷாக்கின்மை 35 சதவீதத்திலிருந்து 13.5 சதவீதமாகவும், வறுமை நிலை 15.2 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது. இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து ஒரு பாராட்டுக்குரிய சாதனையென்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 56 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இது 2014இல் 98 பில்லியன் டொலர்களாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளிநாட்டு உல்லாசப் பயணத்துறை அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருடத்திற்கு 600 மில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொடுக்கிறது. அதனால்தான் இலங்கையை ஆசிய நாடுகளில் ஒரு விந்தைக்குரிய தேசமென்று பாராட்டுகிறார்கள் என்றும் ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கடந்த 30 ஆண்டு காலமாக எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறாதபோதிலும் யுத்தம் முடிவடைந்து இரண்டாண்டு காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் வேகமாகத் துளிர்விட ஆரம்பித்துள்ளன. வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிவடைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்ததாக அறிகின்றோம். வடக்கு கிழக்கின் மீள்நிர்மாண நடவடிக்கைகளு க்கு அடுத்த 3 ஆண்டு காலத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சி 14 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்றும் ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ பாராட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை: