மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு திணிக்கப்படும் படிப்புச் சுமை, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பாடம் என்று பல்வேறு குறைபாடுகள் இருந்ததால் அனைத்தையும் களையும் வகையில், அனைத்துத் தரப்பு மாணவர்களும், ஒரே மாதிரியான பாடத்தை, தரமான பாடத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியின்போது சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒரு வல்லுனர் குழுவையும் அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின்படி சமச்சீர் கல்வித் திட்ட சட்டம் கொண்டு வரப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி சட்டசபையில் இயற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1 மற்றும் 6 ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் முதல் கட்டமாக 2010ம் ஆண்டு கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டு முதல் மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் 1 முதல் 10ம் வகுப்பு வரை அமலாகவிருந்த நிலையில் திடீரென ஆட்சி மாற்றம் ஏற்படவே திட்டமும் அனாதையானது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்தத் திட்டம் தரமற்றத்தாக உள்ளது, எனவே இதுகுறித்து ஆராய்ந்த பின்னர் அடுத்த ஆண்டு இதை அமல்படுத்துவோம். இந்த ஆண்டு பழைய பாட முறையில்தான் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக