திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்வுடன் போடப்பட்ட வழக்கு என்று நீதிபதியே கூறியுள்ளார். ஜாமீனில் வெளியே வந்த கலைவாணன் மீது 7 பிரிவுகளில் அவசரம் அவசரமாக அதிமுக அரசு மற்றொரு வழக்கைப் பதிவு செய்தது.
போலி ஆவணங்கள் மூலம் 250 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
அதிமுகவினர் மீது நிலஅபகரிப்பு புகார்கள் உண்மையாகவே வந்தாலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் சமாதானம் பேசி அனுப்புகின்றனர். ஆனால் நிலத்தை விற்றவர்கள் திமுகவினர் மீது புகார் கூறினால், அதனை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துகைது செய்யப்படுகின்றனர்.
கைது செய்துவிட்டு புகாரைத்தேடி போலீசார் அலைகின்றனர். ஜாமீன் கிடைத்துவிட்டால் இன்னொரு புகாரைத் தயார் செய்கின்றனர். நீதிமன்றங்களின் மீது உள்ள கோபத்தின் காரணமாக குண்டர் சட்டம் என்னும் கொடுமையான அஸ்திரம் ஏவி விடப்படுகிறது.
நிலஅபகரிப்பு என்று சொல்லி அதற்கு அதிமுக அரசு அளித்து வரும் ஊக்கமும், ஆக்கமும் எதிர்காலத்தில் சிவில் பிரச்சனைகளில் காவல்துறையினரின் தலையீடு, கட்டப் பஞ்சாயத்து போன்ற
விரும்பத் தகாத விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்திவிடும்.
காவல்துறையின் துணையோடு திமுகவை நிலை குலையச் செய்து விடலாம் என்கிற அதிமுக ஆட்சியாளர்களின் கனவு நிறைவேறப்போவதில்லை. இதுபோன்ற சிந்தனைகளைத் தவிர்த்து, ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்காக சிந்தித்து செயலாற்றுவதே ஆட்சியாளர்களுக்கு அழகு.
மோசமான முன்மாதிரிகளை உருவாக்குவதில் நேரத்தையும் நினைப்பையும் வீணாக்குவது நல்லதல்ல, பரவாயில்லை, ஆடும்வரை ஆடட்டும். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக