சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் பக்கங்கள் கிழிக்கப்பட்டது ஏன்? கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து விட்டும் சில இடங்களில் கறுப்பு நிற மார்க்கர் பேனா கொண்டு அடித்து விட்டும் வழங்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.
முதல் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 69, 70, 79, 80 ஆகிய நான்கு முழுப் பக்கங்களையும் நீக்க வேண்டுமாம். அந்தப் பக்கங்களில் "வண்ணம் தீட்டுவேன்'' என்ற தலைப்பில் ஒரு ஆப்பிள் படமும், அவ்வை, கவுதாரி, பவுர்ணமி, வவ்வால் ஆகிய படங்கள் உள்ளன. இந்தப் பக்கத்தை ஏன் கிழிக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்று பள்ளிக் கல்வித் துறைக்குத் தான் வெளிச்சம்.<
3 வது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 26 வது பக்கத்தில், கடைசி பத்தி நீக்கப்பட வேண்டுமாம். அதிலே என்ன இருக்கிற தென்றால், "உலகத் தமிழ் மாநாடு 2010 ஜுன் மாதம் 23 ந்தேதி முதல் 27 ந்தேதி வரை கோவையில் நடைபெற்றது'' என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம்.
4 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 74 வது பக்கத்தில், "செம்மொழி மாநாட்டுப் படங்கள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் மறைக்கப்பட வேண்டும். கவி பாரதி இடம் பெற்ற படம்தான் அந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மறைக்க வேண்டுமென்கிறார்கள்.
75 வது பக்கத்தில், முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது "செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி என்று தொடங்கும் அந்தப் பத்தி முழுவதும் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்'' இது சுற்றறிக்கை.
4 வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111 வது பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது குற்றமா என்று தெரியவில்லை.
5 வது வகுப்பு சமூக அறிவியலில் 80 வது பக்கத்தில் 3 வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 6 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பக்கம் 129 ல் "தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் கவிதை தைத்தமிழ்ப் புத்தாண்டே வருக'' என்ற வார்த்தைகள் இடம் பெற்றதற்காக அந்தப் பக்கம் முழுவதையும் நீக்க வேண்டுமாம். அடுத்து 130 வது பக்கத்தில் இலவசப் பயண அட்டை விண்ணப்பப் படிவம் என்ற தலைப்பில் மாணவன் பெயர், பள்ளியின் பெயர், புறப்படும் இடம், சேரும் இடம் என்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் படிவம் உள்ளது. அந்தப் பக்கத்தையே முழுவதுமாக நீக்க வேண்டுமென்று எதற்காகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.
6 ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் பக்கம் 53 ல் இரண்டாவது பத்தியில் உள்ள "தப்பாட்டம்'' என்ற பகுதியை முழுவதுமாக நீக்க வேண்டுமாம். தப்பாட்டம் என்றால் என்ன என்பதையும், சிலப்பதிகார காலத்திலே அது இடம் பெற்றிருந்தது என்பதையும் அந்தப் பத்தியில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். 6 ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் 81 ம் பக்கத்தில் உள்ள சட்டக்காந்தம் படம் மறைக்கப்படவேண்டுமாம். காரணம் அந்தப் படத்தின் வண்ணம் கறுப்பு, சிகப்பு போல இருக்கிறதாம்.
6 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் பக்கம் 35 ல் சூரிய கிரகணம் குறித்த படமும், பகல் இரவு படமும் வெளிவந்துள்ளன. சூரிய கிரகணம் படத்தை முழுவதுமாக அழிக்க வேண்டுமாம். காரணம் அந்தப் படத்தில் ஒரு பகுதி கறுப்பு சிகப்பு வண்ணம் போல இருப்பதால் அதை முழுமையாக அழிக்க வேண்டுமாம்.
9 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பக்கம் 203 ல் "தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கவிழா'' என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை. பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் 89 வது பக்கத்தில் "அறிந்து கொள்வோம் என்ற பகுதி முழுவதும் நீக்கப்பட வேண்டும்'' என்கிறது சுற்றறிக்கை. அந்தப் பகுதியில் நான் எழுதிய கவிதை ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனை முழுவதும் நீக்க வேண்டுமாம்.
பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 177 வது பக்கம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமாம். அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறதென்றால், தஞ்சை பெரிய கோவிலில் என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம். 10 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க. அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்ற காரணத்தால், அதனை அழிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் இந்த அரசு மற்றப் பாடப் புத்தகங்களில் நீக்கியுள்ள பகுதிகள் எல்லாம் எத்தகையது என்பதை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் பெரிதாக நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் தி.மு.க.வை பற்றியும், என்னைப் பற்றியும் பக்கம் பக்கமாக பாராட்டி சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்து விட்டதாகக் கூறி, அந்தப் புத்தகங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்கள். சமச்சீர் பாடப் புத்தகங்களில் அப்படி என்னதான் வார்த்தைகள் கடந்த கால அரசையும், என்னையும் பாராட்டி வந்துவிட்டன என்ற விவரம் அனைவருக்கும் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இங்கே தொகுத்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக