- பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபையில் கிருஷ்ணா இலங்கை தொடர்பாக ஆற்றிய உரை
இலங்கையிலுள்ள சகல சமூகங்களும் சௌகரியத்தை உணரும் வகையில் அரசியல் ஏற்பாடொன்றை விரைவில் இலங்கை மேற்கொள்ள முடிந்தால் சிறப்பானது என்று இந்தியா நேற்று வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியப் பாராளுமன்றத்தில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை நிலைவரம் தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபையில் கிருஷ்ணா இலங்கை தொடர்பாக ஆற்றிய உரை வருமாறு: இலங்கை நிலைவரம் தொடர்பாக சபைக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன். பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இலங்கை தொடர்பான விவகாரங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள், கலந்துரையாடல்கள், கோரிக்கைகள், கவனயீர்ப்புப் பிரேரணைகள் உள்ளன. ஆதலால் இந்த அறிக்கையை நான் விடுக்க உத்தேசித்துள்ளேன். யாவற்றுக்குமாக இல்லாவிடினும் அநேகமானவற்றுக்குப் பதிலளிக்க முடியுமெனக் கருதுகிறேன்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவானது வரலாற்று, கலாசார, இன,நாகரிக பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்துடன், மக்கள் மத்தியிலான நீடித்த தொடர்பாடல்களை இந்த உறவுகள் கொண்டுள்ளன. அண்மைய வருடங்களில் இந்த உறவு பன்முகத்தன்மை வாய்ந்ததாகவும் சமகாலத்துக்குப் பொருத்தமான சகல விடயங்களையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.
மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்தது. 2009 மே இல் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. மூன்று இலட்சம் மக்கள் வட இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்தனர். உள்சார் கட்டமைப்பு பொதுவாகப் பாதிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்தவர்களின் நலன்களுக்கு இந்திய அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்தது. 2009 ஜூனில் நிவாரண புனர்வாழ்வு,மீள்குடியேற்றப் பணிக்காக 500 கோடி ரூபாவை பிரதமர் அறிவித்தார். இந்த மனிதாபிமான முயற்சியின் ஓர் அங்கமாக இந்தியா நிவாரணப் பொதிகள்,கள வைத்தியசாலைகள், செயற்கை அவயவங்கள் பொருத்தும் முகாம் என்பனவற்றுடன் ஏழு கண்ணிவெடி அகற்றும் குழுக்களையும் வட இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அத்துடன், 10,400 மெக்றிக்தொன் புகலிடப் பொருட்களையும் 4 இலட்சம் சீமெந்து பொதிகளையும் 95 ஆயிரம் விவசாய பொதிகளையும் 500 உழவு இயந்திரங்களையும் வட இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்தது.
அத்துடன், 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதென இந்தியா அறிவித்தது. இடம்பெயர்ந்தவர்களுக்காகவே பிரதானமாக இந்த வீடுகள் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. 2010 இன் நவம்பரில் நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன். யாழ்ப்பாணம் அரியாலையில் ஆயிரம் வீடுகளை அமைக்கும் துரித திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். அந்தப் பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன், இலங்கையின் வட பகுதியில் புகையிரதப் பாதைகளைப் புனரமைக்கும் பணிகளையும் ஆரம்பித்து வைத்தேன். கடன் அடிப்படையில் 800 மில்லியன் டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. அத்துடன், காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைக்கவும் துரையப்பா விளையாட்டரங்கை புனர்நிர்மாணிக்கவும் யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையத்தை அமைக்கவும் மட்டக்களப்பு,நுவரெலியாவில் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைக்கவும் இந்தியா உதவி வருகிறது.
இலங்கையில் நாம் மேற்கொண்டு வரும் சகல பணிகளினதும் பிரதான நோக்கமானது இலங்கைத் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதாகும். இடம்பெயர்ந்த மக்கள் உட்பட இலங்கைத் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதும் வட இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதும் எமது தலையாய நோக்கமாகும். 2011 மே 17 இல் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்தபோது கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. உண்மையான நல்லிணக்கம் மீள்குடியேற்றத்தை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக அமுல்படுத்த வேண்டுமென நான் வலியுறுத்தியிருந்தேன். அத்துடன், தமது இல்லங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் துரிதமாகத் திரும்பிச் செல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தேன். 2,90,000 இடம்பெயர்ந்தவர்கள் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். பத்தாயிரம் பேரே இப்போது முகாம்களில் தொடர்ந்திருக்கின்றனர்.
தமிழர்கள் உட்பட இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களுடன் தொடர்புபட்ட தீர்வுகாணப்படாமல் இருக்கும் சகல விடயங்களுக்கும் தீர்வு காண்பதற்கான வரலாற்று பூர்வமான வாய்ப்பு இலங்கையில் உருவாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் தெரிவித்திருந்தது. 2011 மே 17 இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், புரிந்துணர்வு,பரஸ்பர உள்ளீர்த்துக் கொள்ளும் தன்மை என்பவற்றுடன் நிலுவையாகவுள்ள விடயங்களுக்கு தீர்வுகாணப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய பணிகளுக்காக அரசியல் ரீதியான தரிசனத்துடன் இவற்றை மேற்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் தற்போது இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றத்தையும் துரித தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கான தனது அரசாங்கத்தின் ஈடுபாட்டை இலங்கை வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியிருந்தார். 13 ஆவது திருத்தத்திலிருந்தும் கட்டியெழுப்புவதன் மூலம் அதிகாரப் பகிர்வுப் பொதியை வழங்குவதற்குத் தேவையான நிபந்தனைகளை உருவாக்குவது அத்தகைய நல்லிணக்கத்தை உருவாக்கும் என்பது தொடர்பான உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் நியாயபூர்வமான கவலைகளைக் கொண்டுள்ளார்கள் என்றும் இலங்கையில் சமத்துவமான பிரஜைகளாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்று அவர்கள் உணரத்தக்கதாக நிறுவனமய ரீதியான மறுசீரமைப்புகளைக் கொண்ட புதிய முறைமையை நோக்கி இலங்கை அரசாங்கம் முன்நகர்வதற்கு தூண்டுவதே எமது வலியுறுத்தல் என்றும் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவர்கள் சுயமரியாதையுடனான கௌரவ வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முடியுமென்று பிரதமர் அவதானித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பான எமது பார்வை இதுவே ஆகும்.
இலங்கையில் முடிவுக்கு வந்த நீண்ட மோதலானது போர் நடத்தப்பட்ட விதம் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விடயத்தில் நாங்கள் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான நிபுணர் குழுவினால் விடுக்கப்பட்ட அறிக்கையை கவனத்தில் கொண்டோம். அத்துடன், இலங்கையின் கொலைக்களங்கள் என்று தலைப்பிடப்பட்ட சனல்4 ஆவணப்படமும் ஒளிபரப்பப்பட்டது. தற்போது எமது கவனமானது தமிழர்களின் நலன்கள் சம்பந்தப்பட்டதாகவே அமைய வேண்டும். அவர்களின் புனர்வாழ்வு,மீள்கட்டுமானம் என்பவற்றிற்கு அதிமுக்கிய முன்னுரிமையைக் கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன், அரசியல் பிரச்சினைக்கு நீதியானதும் நேர்மையானதுமான இணக்கப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் அவசரகால ஒழுங்கு விதிகளை விரைவாக வாபஸ் பெறுமாறும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டிய தேவைகள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலையை ஏற்படுத்த வேண்டிய தேவைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான ரீதியான கவலைகளுக்குப் பரிகாரம் காணப்பட வேண்டிய தேவைகள் குறித்து வலியுறுத்தியிருந்தேன்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு எதிராக சில உறுப்பினர்கள் கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். எமது மீனவரின் பாதுகாப்பு, நலன்கள் போன்ற விடயங்களுக்கு அரசாங்கம் எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வருகின்றது.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி வருகின்றது. இந்திய மீனவர்களுக்கு எதிரான வன்செயல் தொடர்பாக உடனடிக் கவனம் செலுத்தப்படுகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் பலவந்தத்தைப் பிரயோகிக்க முடியாது என்று இலங்கை அரசுக்கு இந்திய அரசு தெரிவித்துள்ளது.மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் நடத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. தமது கடற்படையினர் இந்த விடயங்களில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என இலங்கை தரப்பு மறுத்து வருகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக தீவிரமான விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது.
2011 பெப்ரவரியில் திம்புவிலும் 2011 மே இல் புதுடில்லியிலும் இலங்கை வெளிவிவகார அமைச்சருடான எனது சந்திப்புகளின்போது எமது மீனவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து எமது ஆழ்ந்த கவலையை நான் தெரிவித்தது மாத்திரமன்றி, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான தேவையிருந்ததை வலியுறுத்தியிருந்தேன். 2011 மே இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்போது எந்தவொரு சூழ்நிலையிலும் பலவந்தத்தைப் பிரயோகிக்க முடியாது என்பதை இரு நாடுகளும் இணங்கிக் கொண்டுள்ளன.
இதேவேளை, இலங்கையின் உணர்வுபூர்வமான தன்மைகள் தொடர்பாகவும் நாம் பிரக்ஞையுடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கை மீனவர்கள் பலர் நீண்டகாலத்துக்குப் பின்னர் அந்தப் பகுதியில் மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, சம்பந்தப்பட்ட எமது மாநில அரசாங்கங்களுடன் எமது தரப்பில் இந்த விடயம் குறித்துச் செயற்பட்டு வருகின்றோம். 2010 இல் இலங்கையால் 137 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 03 ஆகஸ்ட் 2011 வரை 164 இந்திய மீனவர்கள் இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 104 இலங்கை மீனவர்கள் இப்போதும் இந்திய சிறைகளில் உள்ளனர்.
ஐக்கிய இலங்கைக் கட்டமைப்புக்குள் இறுதியான அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு மோதல் முடிவானது வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது என்ற கருத்தை இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது. தமிழர்கள் உட்பட சகல சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் இணக்கப்பாட்டை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளதாக அரசாங்கம் கருதுகிறது. இந்த விடயமானது நீண்டகாலமாக நிலுவையாக இருக்கும் விடயம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உள்மட்ட நடவடிக்கைகளின் ஊடாக இது சென்று கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கட்டமைப்பு ரீதியான பேச்சுவார்த்தையில் இது உள்ளடங்கியுள்ளது. விரைவில் அரசியல் ஏற்பாடொன்றை மேற்கொள்ள இலங்கையால் முன்வர முடிந்தால் அது சிறப்பானதாகும். கட்டமைப்பு ரீதியான பேச்சுவார்த்தையின் ஆரம்பமானது தேசிய நல்லிணக்கத்துக்கான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் நடவடிக்கையாகும். அத்துடன், மீள்கட்டுமானம், அபிவிருத்தி என்பன மெச்சத்தக்க முன்னேற்றமாகும். இந்த நடவடிக்கைளுக்கு எம்மால் முடிந்த எவற்றையும் நாங்கள் செய்வோம் என்று கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக