ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவின் கிரடிட் ரேட்டிங் குறைந்தது

- பி.பி.சி
credit ratingஅமெரிக்கா இதுநாள்வரை அனுபவித்துவந்த யுயுயு என்ற அதியுயர் கிரெடிட் ரேட்டிங் தரத்தை முதல் தடவையாக அது இழந்துள்ளது. கடன் பெறுவதற்கான தகுதி தொடர்பில் வழங்கப்படுகின்ற மதிப்புக் குறியீடு கிரெடிட் ரேட்டிங் ஆகும்.
உலகின் முன்னணி கிரெடிட் ரேடிங் நிறுவனங்களில் ஒன்றான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் நிறுவனம் அமெரிக்காவுடைய கிரெடிட் ரேட்டிங் மதிப்புக் குறியீட்டை யுயூ என்ற படிநிலைக்கு குறைத்துள்ளது.
அமெரிக்காவுடைய வரவுசெலவுக் கணக்கில் துண்டு விழும் தொகை அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி மதிப்புக் குறியீட்டை அது குறைத்துள்ளது.
பட்ஜெட்டில் துண்டு விழும் தொலைகயை சமாளிப்பதற்ற்காக கடந்த செவ்வாய்க் கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டம் போதுமானதாக இல்லை என்று அந்நிறுவனம் கூறுகிறது.
பின்னடைவு
மதிப்புக் குறியீடு தரம் தாழ்ந்து போனதால் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்கா தொடர்பில் முதலீட்டாளர்கள் வைக்கின்ற நம்பிக்கை குறைந்துபோகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"உலக சந்தையின் கையிருப்பு நாணயம் என்ற அந்த அந்தஸ்திலிருந்து அமெரிக்க டாலரை எடுத்துவிட்டு வேறொரு புதிய நாணயத்துக்கு அந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்"
அமெரிக்கா ஏற்கனவே பெரும் கடன் சுமையால் திணறிக்கொண்டிருக்கிறது. அந்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பொருளாதார சரிவைக் கண்டிருந்த அந்நாடு முழுதாக மீண்டுவருவதற்கு முன்பாக மறுபடியும் அது சரிவைக் காணுமோ என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.
கிரெடிட் ரேட்டிங் தரம் தாழ்ந்திருப்பது அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்திற்கு பெரிய தர்மசங்கடமாக வந்துள்ளது.
தவிர அமெரிக்கா வாங்குகின்ற கடன்களுக்கான வட்டி அதிகமாகக்கூடிய ஒரு நிலையையையும் இது தோற்றுவித்துள்ளது.
இருந்தாலும் மற்ற செல்வந்த நாடுகளிலும் கடன் பிரச்சினை என்பது மேலும் சிக்கலாக இருக்கின்ற நிலையில் முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு கடன்கொடுப்பதுதான் இருப்பதில் நல்ல வழியாகத் தெரியும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனா கருத்து
இதனிடையே அமெரிக்கா தான் ஏற்படுத்திய பிரச்சினைகளில் இருந்து எளிதாக கடன் வாங்கி தப்பித்துவந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று சீன அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
உலக சந்தையின் கையிருப்பு நாணயம் என்ற அந்த அந்தஸ்திலிருந்து அமெரிக்க டாலரை எடுத்துவிட்டு வேறொரு புதிய நாணயத்துக்கு அந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று அது யோசனை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு மிக அதிகமாக கடன் வழங்கியுள்ள நாடு சீனா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: