செவ்வாய், 24 மே, 2011

Pranab Mukerji “காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை உருவாக்கவும் தெரியும்; சிக்கலைத் தீர்க்க வழிகளும் தெரியும்

கனிமொழி, காங்கிரஸ், கருணாநிதி!


காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு நீடிக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியே வந்து, திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் புயலைக் கிளப்பியபோது கருணாநிதி சொன்ன வார்த்தைகள் இவை. விவகாரம் மெல்ல அடங்கிவிடும் என்றுதான் திமுக தரப்பு நினைத்தது. ஆனால் நிலைமை அத்தனை சுமுகமானதாக இருக்கவில்லை. மேன்மேலும் வலுக்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ. ராசா ராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. நாடாளுமன்றம் கொந்தளித்தது. இனி வேறு வழியில்லை என்ற சூழல் வந்தபோது ஆ. ராசா ராஜினாமா செய்தார். பிறகு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதும் அதே வார்த்தைகளைத்தான் திரும்பவும் சொன்னார் கருணாநிதி. சுமூக உறவு.
ஒரு பக்கம், கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் வந்தது தொடர்பாக திமுகவின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்துக்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைந்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். இன்னொருபக்கம், திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். தர்மசங்கடத்தின் உச்சத்தில் இருந்தபோதும் கருணாநிதியின் வார்த்தைகளில் மாற்றம் இல்லை. சுமூக உறவு.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது அதிக தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கட்சி மிரட்டியது; திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிந்தன; இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. காங்கிரஸ் கட்சி பட்ட மரம் அல்ல; பச்சை மரம்! ஒரு இலை உதிர்ந்தால் இரட்டை இலை துளிர்க்கும் என்று வெடித்தார் ப. சிதம்பரம். அப்போதும் கருணாநிதி ஆத்திரப்படவில்லை. சுமூக உறவு.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கான முக்கியக் காரணம், காங்கிரஸ் கட்சி தனது சக்திக்கு மீறிய எண்ணிக்கையில் தொகுதிகளை வாங்கிக்கொண்டதும், திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டதும்தான் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்த அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று. கருணாநிதியின் மனச்சாட்சி அதை ஒப்புக்கொண்டாலும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. சுமூக உறவு.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பது போல, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் மகள் கனிமொழி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் திமுகவுக்கு பலத்த நெருக்கடி உருவாகியிருக்கும் இந்தச் சூழலிலும் கருணாநிதியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. சுமுக உறவு.
சுமூக உறவு என்று கருணாநிதி தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க, “காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை உருவாக்கவும் தெரியும்; சிக்கலைத் தீர்க்க வழிகளும் தெரியும்’ என்று பேசினார் காங்கிரஸ் மூத்த தலைவரான மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அதுவும், தொகுதிப்பங்கீட்டுச் சிக்கல் உச்சத்தில் இருந்தபோது. மாநிலக் கட்சிகளை தேசியக் கட்சி எப்படி அணுகும் என்பதற்கு திமுக – காங்கிரஸ் உறவும் அதில் உருவான சிக்கல்களும் பொருத்தமான உதாரணங்கள்.
ஆட்சி பறிபோய்விட்டது; கட்சியின் மீதான நன்மதிப்பு சரிந்துகொண்டிருக்கிறது; தொண்டர்கள் அதிருப்தியில் கிடக்கிறார்கள். இனியும் கருணாநிதியால் சுமூக உறவு என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியுடன் உறவு வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவெடுத்தே தீரவேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடனான உறவு குறித்து கருணாநிதியின் மனத்தில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. எண்பத்தியேழு வயதில் கருணாநிதிக்கு உருவாகியிருக்கும் இதே நிர்பந்தம்தான் பள்ளி மாணவனாக இருந்தபோதும் ஒருமுறை உருவாகியிருக்கிறது. அதுவும் காங்கிரஸ் உறவு தொடர்பானதுதான்.
மாணவர் சம்மேளனம் என்ற அமைப்பில் கருணாநிதி தீவிரமாக இருந்தார் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் உறுப்பினராக இருந்தபோதுதான் மொழிப்போராட்டத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். அப்போது கருணாநிதியின் மனத்தில் ஒரு சந்தேகம் அல்லது உறுத்தல். சம்மேளனத்தில் காங்கிரஸ்காரர்கள்
அதிகம் இருக்கிறார்கள். ஏற்கெனவே அவர்களுடைய கொள்கையும் நம்முடைய சிந்தனையும் ஒத்துப்போகவில்லை. இந்தித் திணிப்பு கூடவே கூடாது என்று நாம் விடாப்பிடியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாணவர் சம்மேளனத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர்களோ, “தமிழ் வாழ்க! இந்தி வளர்க!’ என்று சொல்கிறார்கள். இது சாத்தியமில்லை. இனியும் காங்கிரஸ்காரர்களுடன் ஒத்துப்போவதில் அர்த்தமில்லை; பலனும் இல்லை. விலகிக்கொள்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று முடிவெடுத்தார் கருணாநிதி. விளைவு, தமிழ் மாணவர் மன்றம் உருவானது. தலைமை, கருணாநிதி. இதன்மூலம் காங்கிரஸ்காரர்களிடம் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக்கொண்டார் கருணாநிதி.
கிட்டத்தட்ட இதே சமயத்தில்தான் சேலத்தில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று உருவாகியிருந்தது. கொள்கை, சிந்தனை, நோக்கம், இலக்கு எல்லாம் கருணாநிதி தலைமையிலான மன்றத்துடன் ஒத்திருந்தது. உடனடியாக அந்த மன்றத்தின் நிர்வாகிகளுடன் தொடர்புகொண்டார் கருணாநிதி. விளைவு, தமிழ் மாணவர் மன்றம், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஓர் அங்கமாக இணைந்துகொண்டது.

கருத்துகள் இல்லை: