வெள்ளி, 27 மே, 2011

மிக மோசமான முன்னுதாரணம் இது. அரசாங்க வேலை வாங்க

எதிர்பார்த்தபடியே சட்டமன்ற மேலவையை ரத்து செய்து விட்டார் முதல்வர். “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சட்டமன்ற மேலவையே வேண்டாம் என்றார். எனவே சட்டமன்ற மேலவை தேவையில்லை என்பது தான் அதிமுகவின் கொள்கை முடிவு” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இன்னமும் எது எதெல்லாம் தேவை இல்லை என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்!
‘நானே கேள்வி,நானே பதில்’ ரீதியில் இல்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்ற தினத்தன்று சொன்ன மாதிரியே செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார் முதல்வர். அதுவும் வாய் கொள்ளாத சிரிப்பாக பிரஸ் மீட்! கிள்ளிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அத்தனை செய்தியாளர்களும்! நிருபர்களைப் பார்த்து, “தம்பிகளே” என்று அன்பொழுக அழைத்திருக்கிறார் அன்புச் சகோதரி! தொடர்கிறதா என்று பார்ப்போம்!
O
அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற அன்று ஆந்திராவுக்கு ஓடிய நகைத் திருடர்கள் போகும் போது கூட்டாளிகளில் ஒருவனை மட்டும் இங்கேயே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள் போல! அதிமுக எம்.எல்.ஏ., பழ. கருப்பையாவின் வீட்டில் புகுந்து 10 சவரன் தாலிச் சங்கிலியை கொள்ளை அடித்து ஓடியிருக்கிறான். தமிழக சட்டமன்ற சபாநாயகர் என்று தலைப்புச் செய்தியை எதிர்பார்த்திருந்தவர் இப்படி ஒரு செய்தியில் அடிபடுவோம் என்று நினைத்திருப்பாரா?! ஆனால் அவன் அப்ரண்டீஸ் திருடனாக இருந்திருப்பான் போல! திருடிவிட்டு போகும் போது கை ரேகையை மட்டுமில்லாமல் தன்னுடைய செல் ஃபோனையும் விட்டு விட்டு ஓடியிருக்கிறான். ஆள் இப்போது திஹார்… ஸாரி, நம்மூர் ஜெயிலில்!
O
அடுத்ததாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொஞ்சம் மாற்றங்களுடம் எம்.ஜி.ஆர். காப்பீட்டுத் திட்டமாக உருமாறப் போகிறதாம்! ரைட்டு!
ரேஷன் பைகளில் ஆரம்பித்து கருணாநிதி படம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மாற்றியாக வேண்டும். ஜெ.ஜெ. நகர் கடந்த ஆட்சியில் முகப்பேர் கிழக்காக உருமாறி இப்போது மீண்டும் ஜெ.ஜெ.நகராக ஆகி விட்டது! கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு யாரால் கட்டப்பட்டது என்ற சரித்திர உண்மையை எதிர்கால சந்ததியினர் எப்படித் தெரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை! பூமி பூஜை போட்டது ஒருவர், திறந்து வைத்தது ஒருவர் என மூலா மூலைக்கு கல்வெட்டாக இருக்கிறது கோயம்பேட்டில்!
நாம் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் சித்திரை 1-ம் தேதிக்கே மாற்றப்பட்டு விடும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?!
O
34 (மைனஸ் 1) அமைச்சர்களில் 24 பேர் பட்டதாரிகளாம்! அதனாலென்ன? எதுவும் மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறதா என்ன? அம்மா காலில் விழக்கூடாது, ராத்திரி நேரத்தில் கரண்ட் கட் செய்யக்கூடாது, கூழைக் கும்பிடு போடக்கூடாது என்று பல கூடாதுகள் காதில் விழுகின்றன! எவையெல்லாம் அப்படியே தொடர்கின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்!
O
அம்மா ஆட்சி வந்ததற்காக நாக்கை அறுத்த பெண்ணுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதாம். மிக மோசமான முன்னுதாரணம் இது. அரசாங்க வேலை வாங்க இப்படி(யும்) ஒரு வழி இருக்கிறது என்று ஆளாளுக்குப் பின்பற்றாமல் இருந்தால் சரி! வழக்கு போட்டு அந்த அம்மணியை உள்ளே தள்ளியிருக்க வேண்டும்! அதான் நியாயம்! நாக்கை அறுத்த பெண்மணிக்கு சத்துணவில் வேலையாம்! சாப்பாடு ருசியாக இருக்கிறதா என்று எப்படி சரிபார்ப்பாரோ?! இதையே சாக்காக வைத்து எதிர்காலத் தேர்தல் முடிவுகளன்று ஊர் முழுக்க கோயில் உண்டியல்களில் நாக்கு, விரல் என காணிக்கைகள் குவியலாம், எச்சரிக்கை.
O
ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள் (மீண்டும்!). ஆட்சி மாற்றங்கள் நிகழும் போதெல்லாம்  ‘உள்ளே வெளியே’ டான்ஸ் ஆடும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது.  இந்த முறையாவது 5 ஆண்டுகளும் இதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார்களா என்று பார்ப்போம்! கூடவே டூ-வீலர்களை எந்த டிராக்கில் ஓட்ட வேண்டும் என்றெல்லாம் மக்களுக்கு சட்டம் கொண்டு வந்து தான் திருத்த வேண்டும். ஆட்டோ, மீன்பாடி வண்டிகளை விட எல்லாம் இந்த டூ வீலர் ஓட்டுநர்கள் தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம்! அதே போல சீட் பெல்ட் அணிந்துதான் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்ற சட்டத்தையும் கொண்டு வர வேண்டும்!
O
கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்படுமா?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் அலுவலகத்திற்கு செல்வதற்குள் முதல் பக்கத்தில் வெளியிட ஒரு விளம்பரம்! ‘ஜாக் டி.வி. – தெள்ளத் தெளிவாக குறைந்த கட்டணத்தில் அனைத்து சானல்களையும் ஒளிபரப்ப சென்னை மாநகர் முழுவதும் கேபிள் ஆபரேட்டர்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்கிறது அந்த விளம்பரம்! திமுக – அதிமுக போல சுமங்கலி – ஜாக் கம்பெனிகளுக்கிடையிலான போட்டி மாறவே மாறாது போல!
O
மாயவரத்தான்

கருத்துகள் இல்லை: