வெள்ளி, 27 மே, 2011

திருநங்கைகள் கணக்கெடுப்பை முறையாக நடத்த நலவாரிய உறுப்பினர்கள் கோரிக்கை


திருநங்கைகள் கணக்கெடுப்பை முறையாக நடத்த நலவாரிய உறுப்பினர்கள் கோரிக்கை திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர்களான நூரியம்மா, ஜீவா, மோகனா, விஜி, சலீமா, பிரியாபாபு ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் திருநங்கைகளுக்கு நலவாரியம் தொடங்கியது பெருமையான விஷயம். ஆனால், நலவாரியம் சரியாக செயல்படவில்லை. பல கோரிக்கைகள் வைத்தும், அது முழுமையாக நிறைவேறவில்லை.
எனவே, புதிய அரசு அதை நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையில் கோரிக்கைகள் வைக்க உள்ளோம். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், திருநங்கைகளின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கி, அவர்களின் வாழ்வு மலர ஆவன செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பினை ஒட்டுமொத்த திருநங்கைகள் வரவேற்பதுடன், முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, எங்களின் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் திருநங்கைகள் கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்.

தற்போது நலவாரியத்தில் உள்ள உறுப்பினர்களையே, தொடர்ந்து உறுப்பினர்களாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், 31 மாவட்டங்களுக்கு ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில், திருநங்கைகளுக்கு மாவட்டந்தோறும் இலவச தொகுப்பு வீடுகள் வழங்கப்பட வேண்டும். எங்களின் பாலின அடையாளத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
அனைத்து திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். பொருளாதார மேம்பாட்டிற்கு சுயதொழில் கடன் உதவியும் வழங்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். பாலின மாற்று அறுவை சிகிச்சை காலத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: