செவ்வாய், 24 மே, 2011

புலிகளின் தலைவர்களை மேற்குலக நாடொன்று காப்பாற்ற முயன்றது: கே.பி

2009ம் ஆண்டு மே மாதம் 16, 17ஆம் திகதிகளில் அல்லது 15ஆம் திகதியாகவும் இருக்கலாம் அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் மேற்குலக நாடொன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள் என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் பத்திரிகை ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னைக் கொன்றுவிட்ட பின்னர்தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்

அவரது பேட்டியில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் வருமாறு:

கே: இலங்கைப் படையினர் மீது போர்க் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தும் ஐ.நா. அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப: நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்தெல்லாம் நடந்ததுதான். ஐ.நா. அறிக்கையின்படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப்போவதில்லை. இது ஒரு இடைஞ்சல்தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை. அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; ஒரு அறிக்கை, அவ்வளவுதான். இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்... அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது. கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தது முடிந்ததுதான். போரின் முதல் அர்த்தமே சாவுதான். போரில் எது முதலில் சாகிறது? உண்மைதான். எல்லா இடத்திலுமே போருக்கு ஒரே பொருள்தான். நல்ல போர் கெட்ட போர் என்று ஒன்றுமில்லை. போர் எப்போதும் எங்கேயும் போர்தான். இங்கே வெற்றி பெறுவதற்காக இரு தரப்புகளும் முடிந்தளவுக்கு முயற்சித்தன. நடக்கிற எல்லாப் போர்கள் தொடர்பிலும் ஐ.நா. அறிக்கை வேண்டும் என்றால் எங்கு போய் முடியும்?போர் முடிந்து விட்டதாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் உணர்கிறேன். இதுதான் மிக முக்கியமான புள்ளி. இந்தப் போரில் அரசுதான் வெற்றியாளர்; புலிகள் தோல்வியாளர்கள். ஆனால் தோற்றவர்களின் பக்கம் இன்னும் கொஞ்சம் பேர் மிச்சம் இருக்கிறார்கள். இப்போதும் அவர்கள் இங்கேதான் வாழ்கிறார்கள், நான் உட்பட. எந்தவொரு போரிலோ தாக்குதலிலோ பங்கெடுக்கவில்லை என்றாலும் நானும்கூட ஒரு விடுதலைப் புலி உறுப்பினன்தான். இந்தப் போரால் யாருக்கு என்ன பயன்? ஒருத்தருக்கும் கிடையாது. மக்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும்தான். தங்கள் வாழ்வை அவர்கள் மீளக்கடியெழுப்பியாக வேண்டும். ஐ.நா. அறிக்கை ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; அது ஒரு அறிக்கை. ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? கே: ஓ...! அப்படியென்றால்... அடிப்படையில் தமிழர்களுக்கு கல்வி, அபிவிருத்தி, சுகாதாரம் இவைதான் வேண்டும் என்கிறீர்கள்... இப்போது அவர்கள் வேண்டுவதெல்லாம் இவைதான் என்கிறீர்களா? ப: அட்சரசுத்தமாக அதுதான். கடந்த 2 வருடங்களாக போர் ஓய்ந்து விட்டது. ஆனால் மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். சரி! எங்களுக்கு பல கசப்பான கடந்த கால அனுபவங்கள் இருக்கின்றனதான். முன்னர் நடந்த பேச்சுக்கள் தோல்விதான். வரலாற்றில் பல விடயங்கள் நடைபெற்றுள்ளனதான். ஆனால் எப்போதுமே முடிந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையில் சில சமயங்களில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நாங்கள் அதனை எதிர்கொண்டுதானாகவேண்டும். இரு தரப்புக்களும் ஒரு தீர்வை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லாவற்றையும் நாங்கள் எதிர்கொண்டுதானாக வேண்டும். சேர்ந்து வாழ்வதற்கான (இரு இனங்களும்) வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் என்ன சொன்னீர்களோ அவற்றைத்தான் உண்மையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உணவு தேவை, அவர்களுக்கு வேலை தேவை, அவர்களுக்கு உடுப்புகள் தேவை, அவர்களது குழந்தைகளுக்கு பால் தேவை. அவர்கள் அடிப்படைத் தேவைகளைத்தான் கேட்கிறார்கள். எனவே இவற்றைத்தான் அனைத்துலக சமூகத்திடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் நானும் கேட்கிறேன். இதன் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றியும் அங்கு யார் எல்லாம் இன்னும் தீவிரத்தனத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விலாவரியாக விளக்குகிறார் கே.பி. தொடர்ந்து... கே: அப்படியானல், மீண்டும் ஆயுத இயக்கத்தை புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க முயன்றார் அதனை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்கிறீர்கள்... அப்படித்தானே? ப: நிச்சயமாக! அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால், இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும். கே: போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் உயர் தலைமையைக் காப்பாற்றி மீட்கும் நடவடிக்கை ஒன்றுக்கு ஐரோப்பிய நாடுகள் சில முயன்றன என்பது உண்மை இல்லையா? ப: உண்மையிலேயே அப்படித்தான். 2009 ஜனவரியில் போரை நிறுத்துவதற்கு நாம் கடுமையாக முயன்றுகொண்டிருந்தோம். போரை நிறுத்த இரவு பகலாக நான் கடும் பாடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை; குறிப்பாக எமது தரப்பிடம் இருந்து கடைசிக் கணம் வரை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் நான் எதிர்பார்ப்புக்களை இழந்து விட்டேன். கடைசித் தருணத்தில், மே மாதம் 16, 17ஆம் திகதிகளில் அல்லது 15ஆம் திகதியாகவும் இருக்கலாம்... அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் மேற்குலக நாடொன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள். கே: எந்த நாடுகள்? ப: சரியாகச் சொன்னால் ஐ.நாவும் மற்றொரு நாடும். அந்த நாட்டின் பெயரைக் சொல்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் அது ஒரு மேற்குலக நாடொன்று. கே: மீட்டுச் செல்ல அவர்கள் முயற்சித்தார்களா? ப: ஆம்! மீட்டுச் செல்லத்தான் அவர்கள் முயன்றார்கள். ஆனால் எல்லாம் காலம் கடந்திருந்தது. 2009 ஜனவரியில் இருந்து எல்லா விடயங்களிலும் எல்லா வழிகளிலும் நாம் ஒவ்வொரு தருணத்திலும் தாமதித்துக் கொண்டிருந்தோம் என்றே நான் நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை: