செவ்வாய், 24 மே, 2011

சாய்பாபா நினைவாலயப் பணிகள் மே 27-ல் ஆரம்பம்!

புட்டபர்த்தி: பல கோடிப் பேரின் வணங்குதலுக்குரிய ஆன்மீக குருவாகத் திகழ்ந்த ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு புட்டபர்த்தியில் பிரமாண்ட நினைவாலயம் எழுப்பப் படுகிறது. இதற்கான பணிகள் வரும் 27-ம் தேதி தொடங்கப்படுகின்றன.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக சமூகப் பணியில் ஈடுபட்டு வந்த சத்யசாய்பாபா கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அவரது உடல் சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பிரமாண்டமான நினைவில்லம் அமைக்க சத்யசாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.

இதுபற்றி புட்டபர்த்தியில் சத்யசாய் அறக்கட்டளை உறுப்பினரும் பாபாவின் உறவினருமான ரத்னாகர் நிருபர்களிடம் கூறியதாவது:

"சத்யசாய் பாபாவுக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சாய்பாபாவுக்கு பிரமாண்டமான நினைவாலயம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சாய்பாபாவுக்கு நினைவாலயம் அமைக்கும் பணி தொடங்குகிறது.

வருகிற 27-ந் தேதி நினைவாலயம் கட்டும் பணி தொடங்கப்படுகிறது. சமாதியின் முன்புறம் பாதபீடம் வைக்கப்படும். இப்பணியை 6 வாரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதுவரை பக்தர்கள் யாரும் சமாதி கட்டும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் ஆசிரமத்தில் வழக்கமாக நடைபெறும் சாய்பஜன்கள் பாடப்படும். வேதங்கள் வாசிக்கப்படும்.

ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும். புட்டபர்த்தி நகரம் உலகின் சிறந்த புனித தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
 

English summary
Sri Sathya Sai Baba trust will start the memorial construction work on May 27th at Sai Kulvanth Hall where Baba's body cremated last month.

கருத்துகள் இல்லை: