செவ்வாய், 24 மே, 2011

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: புலிகளின் தாக்குதலை பிரதிபலிக்கிறது

இஸ்லாமாபாத், மே.23: பாகிஸ்தானின் பிஎன்எஸ் மெஹ்ரான் கடற்படைத் தளத்தில் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 2 ரோந்து ஹெலிகாப்டர்களை அழித்தனர். இது விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவ முகாம்களில் நடத்திய 2 தாக்குதல்களை பிரதிபலிப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
2001 ஜூலை 24-ம் தேதி கொழும்புவின் காட்டுநாயக ராணுவ தளத்தில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையான கறுப்புப் புலிகள் பிரிவைச் சேர்ந்த கமாண்டோக்கள் 14 பேர் தாக்குதல் நடத்தினர். இது இலங்கை ராணுவத்துக்கு எதிரான மிகப்பெரிய கொரில்லா தாக்குதலாக கருதப்படுகிறது. அந்த ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் 2 ஏர்பஸ் உள்ளிட்ட 10 விமானங்களை முழுவதுமாக தாக்கி அழித்தனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை சேதப்படுத்தினர்.
அக்டோபர் 2007-ல் அனுராதபுர ராணுவ தளத்தில் 21 கறுப்புப் புலிகள் தாக்குதல் நடத்தி ஹெலிகாப்டர்கள், ரோந்து விமானங்கள் உள்ளிட்ட 10 விமானங்களை முழுவதுமாக அழித்தனர். மேலும் 10 விமானங்களை சேதப்படுத்தினர்.
இந்தத் தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட வழிமுறையில் நடத்தப்படுகின்றன. தற்கொலைப் படையைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்படுகின்றனர். வெவ்வேறு திசைகளில் இருந்து ராணுவ முகாம்களுக்குள் புகுந்து அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். ராக்கெட் மூலம் ஏவப்படும் எறிகுண்டுகள் மற்றும் வெடிக்கவைக்கும் கருவிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை பயன்படுத்தி விமானங்களை தாக்குகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் விமானங்களே முக்கிய இலக்காக இருப்பதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். (மும்பை தாக்குதல் சம்பவம் வேறு. அந்த தாக்குதலில் ஏகே 47 துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளையும் பயங்கரவாதிகள் பயன்படுத்தினர். அவர்களின் முக்கிய நோக்கம் பொதுமக்களின் உயிருக்கு சேதம் விளைவிப்பதாக இருந்தது.)
2001-ல் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்தையும், அதன் ராணுவ பலத்தையும் பாதிக்கச் செய்வதற்காக நடத்தப்பட்டது.
2007-ல் நடத்திய தாக்குதல் விடுதலைப் புலிகளை நோக்கி முன்னேறும் ராணுவ பலத்தை குறைப்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது.
கராச்சி சம்பவத்தில் அமெரிக்கா வழங்கிய 8 பி3சி ஓரியன் கடலோர ரோந்து மற்றும் தாக்குதல் விமானங்கள் தாக்குதல் இலக்காக இருந்துள்ளதாக கருதப்படுகிறது.
அமெரிக்கப் படைகளால் பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடைபெறலாம் என்பதால் அனைத்து பாகிஸ்தான் பாதுகாப்பு தளங்களும் உஷாராக இருந்தநிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: