புதன், 25 மே, 2011

நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு அரசு வேலை!


ஜெயலலிதா ஆட்சி அமைய நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு அரசு வேலை!

அதிமுக ஆட்சி அமைய வேண்டி நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய திருவாடனை தாலுகா தொண்டியை சேர்ந்த சரிதாவுக்கு சத்துணவு உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவையும், எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் காசோலையையும் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாடு முதல் அமைச்சராக வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த கே.சரிதா, தேனி மாவட்டம வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில் 13ந் தேதி அன்று தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார்.

இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கணவனால் கைவிடப்பட்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்.  இவர் தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் ஆண்டிப்பட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவியும், அதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த நிகழ்வு குறித்து அறிந்ததும் பாதிக்கப்பட்ட கே.சரிதாவை உடனடியாக சென்னைக்கு வரவழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.சரிதாவுக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதா கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அவரின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்  அமைச்சர் ஜெயலலிதா 24ந் தேதி தலைமை செயலகத்தில் சரிதாவின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதன் மூலம் சரிதா மாத ஊதியமாக ரூ.2077 பெறுவார். மேலும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரிதாவின் சிகிச்சைக்கான முழுக்கட்டணத் தொகை 36,195 ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார்.


எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதைத்தவிர அவர் வசிப்பதற்கு சொந்த கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து வழங்கிடவும் ஆணையிட்டார்.

முதல் அமைச்சரிடம் பணி ஆணையையும், நிதி உதவியையும் பெற்றுக் கொண்ட சரிதா, தான் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து தனக்கு தேவையான சிகிச்சையை அளித்ததற்கும், சத்துணவு உதவியாளர் பணி மற்றும் நிதி உதவிகளையும் வழங்கியதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அந்த பெண்ணுக்கு நல்ல டிவி கவரேஜும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

உங்களின் அந்தக் கால ரசிகன்: 
அதாகப்பட்டது அம்மாவின் விசுவாசிகளே இனி அம்மாவின் கவனத்தை பெறவேண்டுமாயின் உங்கள் அவயவங்களை அறுத்து கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா எனப்படுகின்ற அம்மா உங்கள் அனைவருக்கும் சிக்னல் கொடுத்துள்ளார். ஏற்கனவே அடிமை தனத்தில் ஊறிய தமிழ் மக்கள் இது போன்ற பறவை காவடி கலாச்சாரத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை இனி அமோகமாக காணலாம். ஜெயாம்மா தமிழ் மக்களை கேவலப்படுத்துவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்லவே. அய்யங்கார் ஆத்து பெண்ணான உங்களிடம் இந்த வஞ்சனை இருப்பது வரலாற்று உண்மை அல்லவா?

கருத்துகள் இல்லை: