வெள்ளி, 27 மே, 2011

சமச்சீர் கல்வி: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சட்டத்தை மீறும் வகையில், அரசு கொள்கை முடிவெடுக்க முடியுமா? எனவும், ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என, கடந்த தி.மு.க., அரசு அறிவித்தது. அதன்படி, 200 கோடி ரூபாய் செலவில் பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆட்சி மாறியதும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டுக்கு நிறுத்தி வைப்பது என, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. "சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தொடர வேண்டும்' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஷியாம் சுந்தர் என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பாலு, சேஷாச்சலம் என்பவர் சார்பில் சீனியர் வக்கீல் வில்சன், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர். கோர்ட்டில் நடந்த வாதம்:

வக்கீல் கே.பாலு: சமச்சீர் கல்வி சட்டத்தின்படி, இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை தொடர வேண்டும்.

நீதிபதிகள்: அதற்கான உத்தரவு உள்ளதா?

வக்கீல் பாலு: தமிழக அரசு இதற்கான சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்தச் சட்டம் செல்லும் என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளன. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிப்பை துவங்கி விட்டனர். சமச்சீர் கல்வி சரியில்லை என, எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

அட்வகேட் ஜெனரல்: முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி, எதிர்கால தலைமுறையினருக்கு உதவாது. நல்ல, தரமான கல்வியை ஒவ்வொரு பெற்றோரும், மாணவர்களும் விரும்புகின்றனர். குறிப்பிட்ட முறையிலான பாடத் திட்டத்தைத் தான் படிக்க வேண்டும் என, குழந்தைகளை கட்டாயப்படுத்த முடியாது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டுக்கு அரசு நிறுத்தி வைத்துள்ளது. சட்டப்படி அரசு முடிவெடுத்துள்ளது. அது கொள்கை முடிவு.

சீனியர் வக்கீல் வில்சன்: அரசு கொண்டு வந்த சட்டம், கோர்ட் உத்தரவுகளை மீறுவதாக அரசின் முடிவு உள்ளது. அரசின் கொள்கை முடிவானது, ஒரு சட்டத்தை அல்லது கோர்ட் உத்தரவை செல்லாததாக ஆக்க முடியுமா? சட்டத்துக்கு எதிராக அமைச்சரவையின் முடிவு உள்ளது. சட்டத்தை மீறும் வகையில் கொள்கை முடிவு எடுக்க முடியுமா? ஒரு அரசு எடுத்த கொள்கை முடிவை, அடுத்து வரும் அரசு மாற்ற முடியுமா?

நீதிபதிகள்: சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களுக்காக ஏற்கனவே 200 கோடி ரூபாய் அளவில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக தற்போது புதிதாக பாடப் புத்தகங்கள் அச்சடிக்க இன்னும் செலவு செய்ய வேண்டியது வருமே?

அட்வகேட் ஜெனரல்: இது பணம் செலவு பற்றியது அல்ல.

நீதிபதிகள்: அதுவும் இழப்பு தானே? சட்டத்தை மீறும் வகையில் அரசு முடிவெடுக்க முடியுமா? மாணவர்கள், பொதுமக்களின் நலனை பரிசீலிக்க வேண்டும். சட்டத்தின் நோக்கம் தெளிவாக உள்ளது. நிபுணர்களின் பரிந்துரைகளை புறக்கணிக்க முடியுமா? நீங்கள் (அட்வகேட் ஜெனரல்) அரசுக்கு ஆலோசனை கூறலாம்.

இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது. விரிவான பதில் மனுவை அரசு தாக்கல் செய்யவும், "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

பண்ருட்டியைச் சேர்ந்த சேஷாச்சலம் என்பவர் தாக்கல் செய்த மனு: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பால், அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் முடிவானது, சட்டப்படியானது அல்ல. பல பள்ளிகள் சமச்சீர் கல்வியை பின்பற்றத் துவங்கி விட்டன. தற்போதைய அரசின் முடிவால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி சட்டத்தில் பிரிவு 14 ஐ, ஐகோர்ட் ரத்து செய்தது. இதன் மூலம், கல்வி போர்டின் முடிவில் அரசின் தலையீடு தடுக்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Gullu Bai - Doha,கத்தார்
2011-05-27 02:17:09 IST Report Abuse
கேவலமான பழிவாங்கும் அரசியல் நடத்தும் ஜெ.,வுக்கு இந்த வழக்கில் சரியான மூக்குடைப்பு வரும்

கருத்துகள் இல்லை: