வியாழன், 26 மே, 2011

ஹவாலா, அங்காடியா, கோக்கா, பேட்டீ – குழப்பமாக இருக்கிறதா

11250000,00,00,000

ஒரு கோடியே பன்னிரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடிகள் - கண்ணைக் கட்டுகிறதா. இது சும்மா ஜுஜூப்பி ட்ரைலர். இவ்வளவு பணமும் கருப்புப் பணம். இதில் சின்ன,பெரிய நாடுகள் பேதமில்லை. இதை சொன்னதும் சாதாரண ஆட்கள் இல்லை. பன்னாட்டு நிதி முனையம் (International Monetary Fund – IMF) ஒரு வருடத்திற்கு மண்டையில் முடி போன கணித,பொருளாதார, சமூக அறிவியல் பேராசிரியர்கள் பல தரவுகளையும், வழக்குகளையும் வைத்து ஆராய்ந்து ஒரு வழியாய் இவ்வளவு இருக்கலாம்பா என்று சொன்ன தொகை தான் மேலே சொன்னது. டாலரில் சொன்னால் $2.5 டிரில்லியன். கிட்டத்திட்ட உலக வர்த்தகத்தில் 8-10%
பணம். மிதமிஞ்சிய பணம். அளவுக்கதிகமான பணம். சாதி, மத, மொழி, இன, தேசங்கள் தாண்டிய சமன்பாட்டினை ஏற்படுத்தும் ஒற்றை மந்திரம். இந்த ஒன்றில் மட்டுமே இஸ்ரேலியன் பாலஸ்தீனியனை நம்புவான். அரபி கிறித்துவனை நம்புவான். பாகிஸ்தானி இந்தியனையும், இராக்கி இரானியையும் இன்னபிற தேச எல்லைகள் கடந்து ஒருமைப்பாடோடு இருப்பார்கள். சுவிஸ் வங்கி என்பது ஓர் உலகளாவிய குறியீடு. அதன் அர்த்தம் பணம் மட்டுமல்ல. பேராசையினால் மட்டுமே அடுத்தவன் காலை வாரிவிடும் குறுக்குப் புத்தியோடும், ஆனால் வாரினால் தானும் விழுவோம் என்கிற பயத்தோடும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய தத்துவம். கேம் தியரியின் வேறுமாதிரியான வடிவம். சமரசம் உலாவும் இடம் கல்லறை மட்டுமல்ல, சில்லறையும் கூட.
பணத்தினைக் கொண்டு போதல் என்பது ஒரு தலைவலி சமாசாரம். நிறைய மெனக்கெட வேண்டும். இல்லையெனில் மணிரத்னம் + சுஜாதா பாணியில் நிறைய ஆங்கிலமும், அனு அகர்வாலும், லாரி முழுக்க பணமுமாய் “திருடா திருடா” விளையாடலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. பின் எப்படி இவ்வளவு பெரிய பணம் உலகமெங்கும் மாறிக் கொண்டேயிருக்கிறது ?
பணத்தினைக் கைமாற்றுவது என்பது இன்று நேற்றல்ல. ரோமானியர்கள், கிரேக்கர்கள், சோழ/பாண்டியர்கள், எகிப்தியர்கள் காலத்திய சமாசாரம். அப்போது முக்கியமாய் பண்டமாற்று இருந்ததால், பேப்பர் கரன்சிக்கு பதில் தங்கம். நம்மூரில் என்றால் மிளகு, இலவங்கம். ஆனாலும் இதிலும் ஜெகஜாலக் கில்லாடிகள் இருந்திருப்பார்கள். இன்றைக்கு பணம் தொடர்ச்சியாய் கைமாறிக் கொண்டேயிருக்கிறது. வீட்டிலிருந்து கண்டம் விட்டு கண்டம் தாவும் நிலையெல்லாம் சர்வசாதாரணம். இன்னும் கிரகங்கள் தாவுதல் தான் பாக்கி. மனிதர்கள் குடியேறினால் அதுவும் நடக்கலாம்.
காந்தாரி பஜார், குவெட்டா, பாகிஸ்தான். ஆசியாவின் மிக முக்கியமான புண்ணியஸ்தலம். ஹவாலாவின் தலைமையகம். அமெரிக்க ரிசர்வ் வங்கியில் கூட அவ்வளவு கரன்சிகள் இருக்குமா என்று தெரியாது. அந்தளவிற்கு எல்லா ஊர் கரன்சியும் சர்வசாதாரணமாகப் புழங்குமிடம். உலகின் எந்த மூலைக்கும் மேகியை விட வேகமாக பணம் போகும். மாடர்ன் கம்ப்யுட்டர் சிஸ்டங்கள் எல்லாம் இவர்களிடத்தில் தோற்றுப் போகும்.
ஸவேரி பஜார், மும்பை, இந்தியா – இந்தியாவின் தங்க, வைர வியாபாரிகளின் மெக்கா. D கம்பெனி பிராஞ்ச் போட்டு, சேவை வரித் துறையை விட பரிவர்த்தனைகளை கூர்ந்து கவனிக்கும் ஏரியா. இங்கே ஹவாலா கிடையாது. ஆனால் அங்காடியா உண்டு. இது இரண்டு தான் என்றில்லை. சிங்கப்பூரில், துபாயில், மலேசியாவில் என எல்லா ஊரிலும் ஹவாலாவுக்கு ஆட்கள் உண்டு. சிங்கப்பூரில் முஸ்தபாவில் இதைக் கடைக்குள்ளேயே செய்வார்கள்.
நாளிதழ் வாசலில் 6 மணிக்கு வந்து வீழ்வது எவ்வளவு நிச்சயமோ, அதற்கு ஈடான நிச்சயம் ஹவாலாவின் நேர்மை. ஆயுதபூஜைக்கு அடுத்தநாள் கூட வேலை செய்வார்கள்.
ஹவாலா, அங்காடியா, கோக்கா, பேட்டீ – டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் கிறுக்குவதை விடக் குழப்பமாக இருக்கிறதா ?
ஹவாலா – பூஜ்யத்திற்குப் பிறகு இந்தியா உலகிற்கு அளித்த கொடை. ஹவாலா ஒரு இணையான வங்கி கட்டமைப்பு (alternative banking) இந்தியாவில் ஆரம்பித்து, பங்களாதேஷ், பாகிஸ்தானில் தொடங்கி தெற்காசியா நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு விஷயம். லாஜிக் ரொம்ப சிம்பிள். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பணம் போகும். ஆனால், ‘பணமாய்’ கைமாறாது. ஆனாலும் ‘பணம்’ போகும். இதை ஆரம்பித்து வைத்ததில், குடியேறிகளுக்கு (immigrants) பெரிய பங்கிருக்கிறது. குடியேறிகள் தங்களுடைய தாய் மண்ணுக்குத் தொடர்ச்சியாகப் பணம் அனுப்புவார்கள். வங்கி, வயர் ட்ரான்ஸ்பர் மாதிரியான நேரடி சமாசாரங்கள் ஒரு பக்கம். ஆனால் அவசரத்திற்கு அதெல்லாம் உதவாது. அங்கே தான் ஹவாலா ஆரம்பிக்கிறது.
துபாய் எடுத்துக் கொள்வோம். துபாயிலிருந்து ஒரு தொழிலாளி இராமநாதபுரத்துக்கு அவசரமாய் ரூ.50,000 அனுப்பவேண்டும். அவர் துபாயில் இருக்கும் ஹவாலா புரோக்கரிடம் திராமாய் கொடுத்தால் போதும். அவர்களுக்கு சேவை கட்டணத்தைக் கழித்துக் கொண்டு, இராமநாதபுரத்தில் பணம் வந்துவிடும். முக்கியமாய்ப் பார்க்க வேண்டியது, துபாயிலிருந்து இந்தப் ‘பணம்’ வரவில்லை. துபாய் மூலமாக வந்திருக்கிறது. என்ன நடக்கிறது. அந்த ஹவாலா புரோக்கருக்குத் தேவை திராம்கள். அதற்கு ஈடான தொகையை இந்தியாவில் இருக்கும் அவரின் தோழர் இராமநாதபுரத்தில் கொடுத்துவிடுவார். இந்தியாவிலிருந்து வேறொருவர் ரூ.50,000 த்தை துபாய்க்கு அனுப்ப அவரின் தோழரை அணுகியிருப்பார். அந்தப் பணத்தை இந்திய ரூபாயாகப் பெற்று, அது இராமநாதபுரத்துக்குப் போகும். ஆக, துபாய் தொழிலாளியின் ரூ.50,000 திராம்கள், இந்தியாவிலிருந்து துபாய்க்கு அனுப்பிய காசாகவும், இந்தியாவில் துபாய்க்கு கொடுத்த பணம், இராமநாதபுரத்துக்கும் போகும். இது தான் அடிப்படை.
கோக்கா – ஒரு கோடி. பேட்டீ – ஒரு லட்சம் என்பதெல்லாம் ஹவாலாவின் எண் குறியீடுகள். முன்பு ‘பாண்டவ் கோக்கா’ என்றெல்லாம் சங்கேதங்கள் இருந்தது. பாண்டவர்கள் = 5; கோக்கா = கோடி; 5 கோடி. இப்போதிருக்கிறதா தெரியாது. ‘சுஜாதா மூவிஸ்’ பாலாஜி படங்களில்தான் கடத்தல்காரர்கள் “வத்திப்பொட்டி இருக்கா” “நனைஞ்சுப் போச்சு” என்பது மாதிரியான அபத்தமான சங்கேதக் குறீயிடுகளில் பணம், தங்கம், வைரம் கடத்துவார்கள். நிஜத்தில் அப்படியில்லை.
முன்பு, ரூபாய் நோட்டின் எண்கள்தான் அடையாளங்களாய் ஹவாலாவில் இருந்தது. டெக்னாலஜி முன்னேறியதும் அவர்களும் முன்னேறிவிட்டார்கள். இப்போது எம்.எம்.எஸ் படங்கள், ஸ்கெப் உரையாடல்கள் என மாறி ‘அடையாளங்கள்’ நிரூபணமானதும் கை மேல் காசு. தற்போதைய ரேட் அங்காடியாவென்றால் 0.2 – 0.5% இது முழுக்க முழுக்க உள்நாட்டில் கைமாற்றுவது. ஹவாலாவின் தற்போதைய ரேட் 0.45 – 1% ஹவாலாவின் ரேட் என்பது வெறும் பணமாற்றம் மட்டுமல்ல, கரன்சிகளுக்கு ஏற்றாற்போலவும் மாறும். $100 நோட்டுக்கும், $10 நோட்டுக்குமான வித்தியாசங்கள் 0.005% வரை இருக்கலாம். இதென்ன சொற்பத் தொகையாக இருக்கிறதே என்று எண்ணாதீர்கள்.
படிக்க சாதாரணமாக தெரியும் இது தான் தொழிலாளிகள் தாண்டி, முதலாளிகள், தீவிரவாதிகள், ரவுடிகளுக்கான ராஜபாட்டை. இப்படித் தான் கையில் காசாக இருக்கும் பணம் கண்டம் தாண்டி இன்னொரு நாட்டில் அதன் கரன்சியாய் மாறும். ஹவாலா எந்த உலகளாவிய செர்வர் நெட்வொர்க்கும் இல்லாத, ஆனால் உலகின் நம்பர் 1 துரித பண ட்ரான்ஸ்பருக்கான களம். வெஸ்டர்ன் யூனியன் (Western Union) மாதிரியான நிறுவனங்கள் உண்மையாய் சொல்லப் போனால், அடையாள அட்டை, நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டதாக சொல்லிக் கொண்டு நடத்தும் கார்ப்பரேட் ஹவாலா.
அங்காடியா – இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டதாகச் சொல்லிக் கொள்ளும் ‘பணம், பொருள்’ சமாசாரங்களை உள்நாட்டுக்குள் கொண்டு செல்வது. இங்கே கரன்சி மாறுதல்கள் இருக்காது. பணம் என்றால் ஹாட் கேஷ். பொருள் தங்கமாகவோ, வைரமாகவோ இருக்கலாம். ஸவேரி பஜார் மாதிரியான இடங்களில் பெரும்பாலும் பணம் அல்லது வைரம். இவை பெரும்பாலும் கணக்குக்குள் வராத, தணிக்கை செய்யப்படாத பணமாகத் தான் இருக்கும். அந்த வகையில் செய்யும் வரி ஏய்ப்புகளின் மூலம் வரக்கூடிய பணம், பெரும்பாலும் ரியல் எஸ்டேட்டில் இறங்கும்.
இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு எவ்வளவு வர்த்தகம் ஹவாலாவில் நடக்கிறது என்பதற்குப் புள்ளிவிவரங்கள் இல்லை. இதற்கு வேறு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மெக்சிகோ. அமெரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் நாடு. எல்லை தாண்டி மெக்சிகர்கள், அத்துமீறி அமெரிக்காவில் குடியேறுவது ஒபாமாவின் மைக்ரேன் பிரச்னை. எல்லாவிதமான கல்யாண குணங்களும் நிரம்பிய நாடு. போதைப் பொருள் கடத்தலில் கொலம்பியாவிற்கு சவால் விடும் தேசம். அமெரிக்காவிற்குள் போதைப் பொருள் விற்றல் என்பது கிட்டத்திட்ட மெக்சிகோவின் தேசிய தொழில்களில் ஒன்று. 2004 – 2007 என்ற காலக்கட்டத்தில், அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு பல்வேறு போதைத் தொழில் விநியோக உரிமையினால் ஈட்டிய பணம், அதிகமில்லை, ஜஸ்ட் $500 பில்லியன் (ரூ.2250000,00,00,000) லோக்கலாய் சொன்னால், இருபத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடிகள். பெரும்பாலும் போனது ஒரே இடத்திற்கு – குல்ஜாகான், ஸினாலொஹா (Culiacán, Sinaloa). மெக்சிகோவின் குற்றத் தலைநகரம். இது முழுக்க முழுக்க சட்டத்தினை ஏமாற்றி சம்பாதித்த, போதைப் பொருள் விற்ற பணம். கருப்புப் பணம். இதில் கிட்டத்திட்ட $378 பில்லியன் டாலர்கள் சிறு சிறு தொகைகளாக வச்சோவியா வங்கி வழியாகவே குல்ஜாகானிற்கு போயிருக்கிறது. இது வங்கி பின்னலை வைத்துக் கொண்டு நடக்கும் வெஸ்டர்ன் ஹவாலா :)
மெக்சிகோ – அமெரிக்காவிற்கு இடையே மட்டும் இது. இந்தியாவில் எவ்வளவு நடக்கும் என்பதை இந்தியாவிலிருந்து உலகம் முழுக்கப் பரவிக் கிடக்கும் இந்தியர்கள், இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் பணத்தினைப் பாதுகாக்க நினைக்கும் முக்கியஸ்தர்களின் பிண்னணியில் கணக்கிடுங்கள். விடை கிடைக்கும்.
வங்கிகள் எல்லாவற்றையும் கணக்கில் வைத்திருப்பார்களே, அங்கே இது எப்படி சாத்தியம் ? அரசிற்கு தெரியாதா ? எப்படி இது சாத்தியம்? அது அடுத்த வாரம்.
- கல்லா நிரம்பும்.
O
நரேன்

கருத்துகள் இல்லை: