வியாழன், 26 மே, 2011

இனி தனியார் கல்லூரிகள் கட்டணத்தை இஷ்டம் போல் உயர்த்தலாம்

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பால்...இரட்டிப்பு மகிழ்ச்சி!தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சந்தோஷம்

திருப்பூர் : சமச்சீர் பாடத்திட்டம் ரத்து மற்றும் கல்விக்கட்டண நிர்ணயத்தில் அரசுக்கு தொடர்பில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இரு அறிவிப்புகளும், தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்தாண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல் இதர வகுப்புக்கும் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்த முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், அனைத்து வகை பள்ளிகளிலும் ஒரே கல்வி முறை பின்பற்றப்படும் என்ற சூழல் ஏற்பட்டது.அனைத்து வகை பள்ளியிலும் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்பட்டால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையக்கூடும் எனவும், பள்ளிகளில் பாடத்தரம் குறையும் எனவும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்தனர். வரும் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வித்திட்டத்தை பின்பற்ற, தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எதிர்ப்பு களை மீறி பள்ளிகளில் அத் திட்டத்தை, செயல்படுத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நடவடிக்கை தனியார் பள்ளியினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளதால், அரசுக்கு நன்றி தெரிவித்து, பழைய பாடத்திட்டத்தை பின்பற்றும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதேபோல், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும் நடவடிக்கையும் தனியார் பள்ளிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. முரண்பாடுகளுடன் கூடிய கல்வி கட்டணத்தை, கடந்தாண்டு கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்ததில் இருந்து தனியார் பள்ளிகள் மற்றும் பெற்றோருக்கு இடையே பிரச்னை நிலவி வந்தது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெற்று பள்ளியை செயல்படுத்த முடியாமல் தனியார் பள்ளிகள் திணறி வந்தன. சில பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல், அதிகமாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. மேல்முறையீடுக்கு விண்ணப்பித்த பள்ளி களும், புதிய கட்டணம் எவ்வாறு இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தன. ஓய்வு பெற்ற ரவிராஜபாண்டியன் கமிட்டி புதிய கட்டணத்தை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், கல்வி கட்டண நிர்ணயத்துக் கும், அரசுக்கும் தொடர்பில்லை; தனியார் பள்ளிகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே அரசு தலையிடும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது, தனியார் பள்ளியினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,"மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்தது வீண் போகவில்லை. சமச்சீர் மற்றும் கல்விக் கட்டணம் சார்ந்த இரண்டு அறிவிப்புகளும் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் தரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. பெற்றோர், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு இடையே நிலவி வந்த பிரச்னை, இனி ஏற்படாமல் இருக்கும். தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி மீது பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படும்,' என்றனர்.கல்வித்துறை அதிகாரிகள் நிம்மதி: கல்விக்கட்டணம் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு கல்வித்துறை அதிகாரிகள் மத்தியிலும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. கல்வித்துறையினர் கூறுகையில், "கடந்தாண்டு துவக்கத்தில், மாணவர்களுக்கு சீருடை வழங்கு வது, பஸ் பாஸ் வழங்குவது, புத்தகம் வினியோகிப்பது என வழக்கமான பணியை மேற்கொள்ள முடியா மல், தனியார் பள்ளிகளில் எழுந்த பிரச்னைக்கே அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. "ஆண்டு முழுவதும் இப்பிரச்னை தொடர்ந்தது. வரும் ஆண்டில் அதுபோன்ற பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை; தேவையில்லாத வேலைப் பளு குறைந்துள்ளது,' என்றனர்.
இனி தனியார் கல்லூரிகள் கட்டணத்தை இஷ்டம் போல் உயர்த்தலாம் 

கருத்துகள் இல்லை: