மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது.“தமிழகத்திலிருந்து ஆறு எம்.பி.க்கள் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் வைகோவை பற்றி மட்டும்தான் கடந்த வாரம் பல செய்திகள் டெல்லியில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.
திமுக கூட்டணியில் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்ற ஒப்பந்தத்துக்கு ஏற்ப, அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் ஜூலை 5 ஆம் தேதி தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வைகோவின் வேட்பு மனுவுக்கு பாதிப்பில்லை என்ற நிலையிலும், வேறுவகையில் வைகோவின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமோ என்று யூகங்கள் கிளம்பின. ஆனால் இதில் திடீர் திருப்பமாக, திமுக நான்காவது வேட்பாளரை நிறுத்தி வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டவுடன் நான்காவது வேட்பாளரான என்.ஆர். இளங்கோவை வாபஸ் பெறச் செய்தது. இவ்வாறு வைகோ ராஜ்யசபாவுக்கு சென்றதே பெரும் பரபரப்பான சம்பவச் சங்கிலிகளுக்கு இடையேதான்.



























