திங்கள், 29 ஜூலை, 2019

டெல்லியில் வைகோ: காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன்?

டிஜிட்டல் திண்ணை: டெல்லியில் வைகோ:  காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன்?மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது.
“தமிழகத்திலிருந்து ஆறு எம்.பி.க்கள் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் வைகோவை பற்றி மட்டும்தான் கடந்த வாரம் பல செய்திகள் டெல்லியில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.
திமுக கூட்டணியில் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்ற ஒப்பந்தத்துக்கு ஏற்ப, அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் ஜூலை 5 ஆம் தேதி தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வைகோவின் வேட்பு மனுவுக்கு பாதிப்பில்லை என்ற நிலையிலும், வேறுவகையில் வைகோவின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமோ என்று யூகங்கள் கிளம்பின. ஆனால் இதில் திடீர் திருப்பமாக, திமுக நான்காவது வேட்பாளரை நிறுத்தி வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டவுடன் நான்காவது வேட்பாளரான என்.ஆர். இளங்கோவை வாபஸ் பெறச் செய்தது. இவ்வாறு வைகோ ராஜ்யசபாவுக்கு சென்றதே பெரும் பரபரப்பான சம்பவச் சங்கிலிகளுக்கு இடையேதான்.

பாஜகவுக்கு எதிராக கடுமையாக முழங்கி வரும் வைகோ கடந்த வாரம் டெல்லி சென்றார். ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார். அதற்கு முன்னும் பின்னும் அவர் நடத்திய சந்திப்புகள் பற்றித்தான் இப்போது தமிழ்நாடு முதல் டெல்லி வரை அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
22 ஆம் தேதி நாடாளுமன்றம் சென்ற வைகோ நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர். முரசொலி மாறன் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செய்தார். அன்றே எதிர்பாராத விதமாக, தன்னை மாநிலங்களவைக்குள் நுழையவிடக் கூடாது என்று கடுமையாக எதிர்த்த சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து கை குலுக்கினார். 22 ஆம் தேதியே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தார் வைகோ. 23 ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவிலிருந்து ஒதுங்கியிருக்கும் யஷ்வந்த் சின்ஹாவை சந்தித்தார். 24 ஆம் தேதி பாஜகவின் நிறுவனத் தலைவரான எல்.கே. அத்வானியை குடும்பத்தோடு சந்தித்தார்.
அதே நாளில், முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த அவரது நண்பரான ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் வீட்டுக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான ஃபரூக் அப்துல்லாவை சந்தித்தார் வைகோ. அவர் தன்னை காஷ்மீர் வருமாறு அழைத்ததாகவும் கூறினார். பின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை சந்தித்தார் வைகோ. ராஜ்யசபாவில் தனது முதல் பேச்சைக் கேட்டு பிரதமர் மோடி கைதட்டியதாகவும் அது தனக்கு நெகிழ்ச்சியை தந்ததாகவும் கூறினார்.

22ஆம் தேதியிலிருந்து டெல்லியில் இவ்வளவு பேரை சந்தித்த வைகோ, தான் இப்போதுவரை சார்ந்திருக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஸ்டாலினால் பிரதமராக முன்மொழியப்பட்ட ராகுல் காந்தியையோ, கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியையோ சந்தித்தாரா என்ற கேள்விதான் இப்போது டெல்லி முதல் சென்னை வரை கேட்கிறது.
டெல்லி பத்திரிகையாளர்கள், தமிழக எம்.பி.க்கள் வட்டாரத்தில் பேசியபோது, ‘வைகோவின் டெல்லி சந்திப்புகள் முழுக்க முழுக்க காங்கிரஸ் அல்லாத கட்சிகள் சார்ந்ததாகவே இருக்கிறது. தமிழகத்தில் ஈரோடு கணேசமூர்த்தி உட்பட 37 எம்.பி.க்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணியில்தான் ஜெயித்தனர். ஆனாலும் வைகோ டெல்லி வந்தபிறகு காங்கிரசாரை மறந்துவிட்டாரா, அல்லது மறுத்துவிட்டாரா என்ற கேள்வி இங்கே விவாதிக்கப்படுகிறது.
இத்தனைக்கும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.
மோடியை அகில இந்திய அளவில் எதிர்த்து வரும் ராகுலின் பதவி விலகல் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான பின்னடவை கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் வைகோ ராகுலையோ சோனியாவையோ சந்தித்து பேசியிருந்தால் அது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு தெம்பாக இருக்கும். ஆனால் வைகோ அவர்களை சந்திக்காதது ஏன்? வைகோ சந்திக்க நேரம் கோரினால் அவர்கள் தர மறுப்பவர்களும் அல்லர். ஆனாலும் வைகோ தன் கூட்டணி சார்ந்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க மறுத்ததின் பின்னால் ஒரு முக்கிய அரசியல் நகர்வு இருக்குமோ என்ற கேள்வியும் டெல்லி வட்டாரத்தில் சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.


அதேநேரம் இதில் இன்னொடு ட்விஸ்ட்டையும் வைக்கிறார்கள். வைகோ டெல்லியில் தான் நடத்திய சந்திப்புகள் அனைத்தையும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்துதான் நடத்துகிறார். வைகோவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே முழுமையான இணக்கமான உறவு இப்போது இருக்கிறது. தான் ராஜ்யசபா செல்வேனோ இல்லையோ என்ற பதற்றத்தில் ஸ்டாலின் இரு நாட்கள் உறக்கமில்லாமல் தவித்தார் என்று வைகோவே சொல்லியிருக்கிறார். இப்படி இருவருக்கும் இடையே நெருக்கம் நிலவும் நிலையில் வைகோவின் டெல்லி சந்திப்புகள் அனைத்தும் ஸ்டாலினுக்கும் தெரியும் என்றும் சொல்கிறார்கள்.
குறிப்பாக ஃபரூக் அப்துல்லாவை வைகோ சந்தித்தபோது குடும்பத்துடன் காஷ்மீர் வருமாறு வைகோவை அழைத்திருக்கிறார் ஃபரூக் அப்துல்லா. இதேபோல ஸ்டாலினுக்கும் ஃபரூக் அப்துல்லா அழைப்பு விடுத்திருக்கிறார் என்றும் டெல்லியில் தகவல்கள் உலவுகின்றன.
ஆக டெல்லி சந்திப்புகளில் வைகோ காங்கிரஸை தவிர்த்தது ஸ்டாலினின் உடன்பாட்டோடுதானா என்பதுதான் இப்போதைய காங்கிரஸ் வட்டாரக் கேள்வி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: