திங்கள், 29 ஜூலை, 2019

தேர்தல் சீட்டுக்கு பணம் வாங்கி மோசடி? நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

 தேர்தல் சீட்டுக்கு பணம் வாங்கி மோசடி? நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் நியூஸ் 18  :கொலையில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த சிலரை தேடி வருகின்றனர். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உட்பட மூன்று பேர் கொலை வழக்கில் ஒரு வாரத்திற்கு பிறகு திமுக பெண் பிரமுகரின் மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், திமுக நிர்வாகியுமான உமா மகேஷ்வரி அவரது கணவர் முருக சங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.  தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.


சொத்துப்பிரச்னையா அல்லது அரசியல் ரீதியான கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டும், சிசிடிவி கேமிராக்கள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட பலவற்றை அலசியும்சிறு துப்பு கூட கிடைக்காததால் போலீசார் திணறி வந்தனர் தேர்தலில் சீட் வாங்குவதில் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் சீனியம்மாள், உமா மகேஷ்வரியின் சகோதரர் மகன் பிரபு உட்பட 100 க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் கொலை நடந்த அன்று உமா மகேஷ்வரியின் வீட்டின் அருகே உள்ள உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஸ்கார்ப்பியோ கார் ஒன்று நீண்ட நேரம் நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த காரின் உரிமையாளருக்கு சொந்தமான செல்போன் நம்பர் அங்கிருந்த டவரில் அதிக நேரம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் கார் மற்றும் செல்போன் எண்ணின் உரிமையாளர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கார்த்திகேயனை பிடித்து போலீசார் விசாரித்ததில், உமா மகேஷ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண்ணை கூலிப்படையை ஏவி கொன்றதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீனியம்மாள் தரப்பினர் இரண்டு முறை வாய்ப்புக் கேட்டு 50 லட்சம் ரூபாய் வரை உமா மகேஷ்வரியிடம் பணம் கொடுத்ததாகவும். சீட் கிடைக்காததால் ஆத்திரத்தில் அவரைக் கொன்றுவிட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கார்த்திகேயனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த சிலரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: