திங்கள், 29 ஜூலை, 2019

BBC :கர்நாடகா ..எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி


கர்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று புதிய முதல்வராக பதவியேற்ற பி.எஸ். எடியூரப்பா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
பெற்றுள்ளார்.
கர்நாடகாவில் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா சட்டசபையில் உள்ள 105 பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவையும் பெற்று தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
எடியூரப்பாவின் அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை நாஜிநாமா செய்தார்.
முன்னதாக, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் அளித்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்தது.
அதைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.> இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பதவி விலகல் கடிதம் கொடுத்த, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் 14 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில், பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அங்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வழிவகை செய்யும் என்று கருதப்பட்டது.
இப்போது கர்நாடக சட்டமன்றத்தின் பலம் 225இல் (ஒரு ஆங்கிலோ-இந்தியன் நியமன உறுப்பினர் உள்பட) இருந்து 208ஆக குறைந்துள்ளது. ஆகவே பெரும்பான்மையை நிரூபிக்க 105 உறுப்பினர்கள் போதும்.
பாஜகவுக்கு கர்நாடக சட்டமன்றத்தில் 105 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு சுயேச்சையின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.
தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 65 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 உறுப்பினர்களும் உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு இருக்கும் ஒரே உறுப்பினர் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கட்சியின் தலைவர் மாயாவதியின் உத்தரவை மீறி, நம்பிக்கை வாக்கெடுப்பிலேயே கலந்துகொள்ளவில்லை.

கருத்துகள் இல்லை: