நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்துக்கு தலைக்கு மேல் ஏகப்பட்ட
சிக்கல்கள் தொங்கிக் கொண்டுள்ள நிலையில், இந்தப் படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, ‘தலைவா’ பட தயாரிப்பாளர், இயக்குனருக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இவர்கள் வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைவா படம் நாளை (9-ம் தேதி) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வேறு சில சிக்கல்கள் உள்ளன (அவற்றை தனிக் கட்டுரையாக பார்க்கலாம்) இப்போது, படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதால், புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஆம். 14-ம் தேதி பதில் அளிக்கப்படும்வரை, ‘தலைவா’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று, வழக்கு தொடர்ந்தவரால் மற்றொரு மனு செய்ய முடியும்!
இந்த வழக்கின் பின்னணி என்ன?
நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு இது. அந்த மனுவில், தமது தாத்தா மற்றும் தந்தை பற்றிய கதைதான், ‘தலைவா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.














