திங்கள், 3 ஆகஸ்ட், 2026

தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிகள்! கப்பல்ல வேலைனு சொன்னதை நம்பி.. திமுக மூவ்.. விஜய்க்கு சிக்கல்!

 tamil.oneindia.com -Rajkumar R   :சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. ஆளும் கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். விஜயை பார்க்க முடியவில்லை, உள்ளூர் நிர்வாகிகளும் மதிக்கவில்லை என பெரும்பாலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியே தோல்விக்கு காரணம் என கைகாட்டி விட்டு பலரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் என முக்கிய முகங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.
TVK Vijay Tamilaga Vetri Kazhagam
அதிமுக

இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர்கள் ஆகிவிடலாம் என்ற ஆசையில் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர் சிலர். இந்த ஆசைக்கு வேட்டு வைக்கும் வகையில் இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதை அடுத்து 'விஜயபாஸ்கர்கள்' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது ஒரு புறம் இருக்க விஜய்க்கும், விஜய் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர்.
மாவட்ட செயலாளர் பதவி

அது பதவி விவகாரம் தான்.. முன்னரே சொன்னது போல பதவி கிடைக்கும் என்ற ஆசையில் தான் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் பதவி, வாரிய தலைவர் பதவி என பல ஆஃபர்கள் முன்னர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் செல்வாக்குடன் இருந்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
கடும் அதிருப்தி

இதற்கு உதாரணமாக விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா என பலரை குறிப்பிடலாம். ஆனால் கட்சியில் சேரும்போது கொடுத்த மரியாதை சேர்ந்த பிறகு கிடைக்கவில்லை என அவர்கள் புலம்பி வருகிறார்களாம். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.
தமிழக வெற்றி கழகம்

சில மாவட்டங்களில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில் அதிமுகவில் அமைச்சர்களாக வலம் வந்த தங்களை ஒன்றிய செயலாளர்கள் கூட மதிப்பதில்லை. கட்சி நிகழ்வுகளுக்கும் அழைப்பதில்லை. விஜயை விட அமைச்சர்களை சந்தித்து பேசுவதே பெரிய வேலையாக இருக்கிறது. எனவே தங்களைப் போல அவசரப்பட்டு யாரும் தமிழக வெற்றி கழகத்திற்கு வர வேண்டாம் என அலர்ட் செய்து வருகிறார்களாம்.
விஜய்க்கு சிக்கல்

மேலும் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு வந்த அமைச்சர்கள் தற்போது திமுக பக்கம் தாவ உள்ளூர் திமுக தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் முடிந்து மூன்றாவது மாதத்தில் பயணிக்கும் நிலையில் தங்களை நம்பி வந்தவர்களை விஜய் கைவிட்டு விட்டார் என பொதுவெளியிலும் பேச ஆரம்பித்து இருப்பது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் .அதிமுகவிலிருந்து வந்தவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு சென்றால் கூட பரவாயில்லை.. திமுக செல்வது விஜய்க்கு தான் சிக்கல் என்கின்றனர்.

கருத்துகள் இல்லை: