செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

திருச்சி விழாவில் பெண்களுக்கு சாட்டை அடி

தா.பேட்டை:திருச்சி அருகே நேற்று பேய் விரட்டும் திருவிழாவில் பெண்களை பூசாரிகள் சாட்டையால் அடித்தனர்.திருச்சி மாவட்டம்
தாத்தையங்கார்பேட்டை அடுத்த சோழம்பட்டியில் சோழராஜா கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பெண்களுக்கு பேய் விரட்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 100 ஆண்டுகளாக இந்த விழா நடக்கிறது. நேற்று நடந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். மண்டு கருப்பு, கஸ்தூரி அம்மாள், அரவாயி, அரவாயி சின்னக்கோயில் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கோயில் முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஈரத்துணியுடன் தலைவிரி கோலமாக அமர வைக்கப்பட்டனர். பெண்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் பூசாரிகள் தண்ணீர் தெளித்தனர். பெண்களிடம், ‘நல்லா இருக்கியா‘ என்று பூசாரிகள் கேட்கின்றனர். ‘நல்லா இருக்கேன் சாமி‘ என்று சொல்லும் பெண்ககளுக்கு பேய் பிடித்திருக்கவில்லை என்று முடிவு செய்கின்றனர். பதில் சொல்ல மறுத்து ஆக்ரோஷமாக ஆடும் பெண்களை பூசாரி சாட்டையால் அடிக்கிறார். சாட்டையடி வாங்கிய பெண்கள், ‘நான் போயிடுறேன்‘ என்று பதில் அளித்தால் அடிப்பதை நிறுத்தி விடுகிறார். ‘இனி வர மாட்டேன்‘ என்று வேல், சாட்டை மீது சத்தியமும் வாங்கப்படுகிறது.


பின்னர் பெண்ணின் உச்சி முடியை வெட்டி, புளியமரத்தில் ஆணியில் அறையப்படுகிறது. இப்படி செய்து விட்டால் பிடித்த பேய் ஓடிவிடுவதாக மக்கள் நம்புகின்றனர். ‘சாட்டையடி வாங்கினால் பில்லி சூன்யம், குழந்தை பாக்கியம், மற்றும் திருமண தடைகள் நீங்குவதாக நம்புகிறோம். கெட்ட வினைகள் நீங்கி நன்மை நடப்பதற்காக விழாவில் கலந்து கொள்கிறோம்‘ என்று பக்தர்கள் கூறுகின்றனர்..tamilmurasu.org

கருத்துகள் இல்லை: